ஜனாதிபதி சென்ற ஹெலி அவசர தரையிறக்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி சென்ற ஹெலி அவசர தரையிறக்கம்

படங்கள்: கிஷாந்தன்

ஹற்றன் சுழற்சி நிருபர்

தலவாக்கலைக்கு ஜனாதிபதி பயணம் செய்து கொண்டிருந்த ஹெலிக்கொப்டர் காலநிலை சீர்கேடு காரணமாக கொட்டகலை தொண்டமான் தொழில் பயிற்சி நிறுவன வளாகத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்செய்யப்படும் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஹெலிக்கொப்டரில் சென்றிருந்தார்.
இதன்போதே ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க நேரிட்டுள்ளது. அவசரமாக ஹெலிக்கொப்டர் தரையிறக்கப்பட்டதால் கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலை சிறார்கள், பொது மக்கள் போன்றோர்களை சந்திக்கவும் ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் பின்னர் தரைவழியாக அவர்
தலவாக்கலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொட்டகலையில் மக்களை சந்தித்த அவர், அவர்களிடம் குறைபாடுகள், எதிர்பார்ப்புகள் என்னவென்பதை நேரடியாக அறிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கொட்டகலை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு மலசலகூட வசதிகள் உள்ளிட்ட குடிநீர் பிரச்சினைகள் மற்றும் வைத்தியசாலையில் நோயாளிகளின் போக்குவரத்துக்கென அம்பியூலன்ஸ் வண்டி இல்லாமை போன்ற பிரச்சினைகள், குறித்தும் மக்கள் அனுபவித்துவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் நேரடியாகவே மக்கள் தமது குறைபாடுகளை தெரிவித்தனர்.
இவற்றுக்கு செவிமடுத்த ஜனாதிபதி, கொட்டகலை பிரதேச பாடசாலை ஒன்றில் மலசலகூடங்களை திருத்தம் செய்து தருவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேபோல் வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி சேவையை துரிதப்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களிடம் உறுதியளித்தார்.

Comments