குறுங்கதை | தினகரன் வாரமஞ்சரி

குறுங்கதை

ஜெ. ஈழநிலவன்   

அந்த இன்ப இரவிற்கு எதுவும் புலப்படவில்லை. கறைபடிந்த துன்பக்கனவுகள் பகலுக்கு சொல்வதற்காக மேற்கின் வழியாக கிழக்கு நோக்கி நடந்தது. ஒரே இரத்தமயமானங்கள் வானிலிருந்து நெடுந்தூரப்பயணம். அந்த மழைக்கு நிலத்தில் வீழ்வதென்றால் எல்லையற்ற சந்தோஷம். பொழிகிறது. ஒரு மூச்சுப் பிடித்து உறிஞ்சிக்குடிக்கும் மந்தையின் மனநிலையில் அந்த குருதியாற்றில் குழைந்திட விழுகின்றது. வானத்தின் கணக்கெடுப்பில் குத்திவைத்த புள்ளிபோல் நட்சத்திரம் சில மீன்கள் உயிர்போக போராடும். வயது முதிர்ந்த கிழவனின் இதயம் சுருங்கிவிரிவது போல் அந்த நட்சத்திரம் மூச்சுவிட்டு மின்னிக் கொண்டிருந்தது. வானத்தின் சிறைக்கதவை உடைப்பதற்கு வளர்ந்து கொண்டிருந்த வனத்திலே பனைமட்டும் பாலை நிலத்திற்கு ஊற்றியபடி வளர்ந்தது. அந்த இரவின் ஆடைக்குள் பதுங்கிய நீசர்களின் கைகளில் கொலை செய்யும் கூரிய ஆயுதம் வௌவால் வாழ்ந்த தூசு படிந்த அறைகளில் தீ கிளப்பி தேடின போராயுதம்.
ரணங்களையும், வலிகளையும் சுமந்தபடி மிகவும் அவசரமாய் பகலவனைத் தேடுகின்றது. அந்த இரவு கிழக்கு வெளிக்கும் கடலின் விளிம்பில் மட்டும் வெளிச்சம் சூரியன் உச்சத்திற்கு வந்தும் ஒளியில்லை. வஞ்சக தீணர்களின் நெஞ்சம்போல் புகைமண்டலம் போர்த்திக்கிடந்தது. அரை உயிர்களின் இறுதி விண்ணப்பம் எதிரொலிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆலயமணிகளை அடிக்க ஆளில்லாமல் ஒரு காற்று கைகள் முறிந்தபடி மெல்ல நெஞ்சத்தால் தள்ளியெழுப்புகின்றது. மணி ஒலிக்கிறது. மணியில் பிரதிபலிப்பெல்லாம் துன்பத்தின் கதறலே. எப்போதும் ஆலயமணிக்கு எழுந்து கோயிலுக்கு போகும் வழக்கம். சுயநினைவு அறுந்து கிடந்த எனக்கு ஆலயமணியின் அலறலில் நினைவு நாடாக்கள் நொய்தலான விசையுடன் மூளையில் பட்டுப்போக விழித்தேன். ஒரு கண்ணில் இருளும், மறு கண்ணில் நிலச்சரங்கத்தின் பாதிப்பகுதியும் தெரிந்தது. நிலம்பட கிடந்த நான் நிமிர்ந்துகொண்டேன். முதுகினை சுரங்கத்தின் மூலையில் என் காலின் ஒரு பகுதி தனிமையில் துண்டாய் கிடந்தது. நினைவிற்கு பின்னால் துன்பம் வருவது போல் காயத்தின் வலிகளும் வேதனைகளும் கட்டவிழ்க்க தொடங்கின. ஓ என்று அழுதேன். என்னைக் காப்பாற்றுக்கள் என்று கூச்சலிட்டேன். ஏகாந்தம் மட்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.
மரணத்தின் கைபிடி என்னை நீட்டி அழைத்தது. வேதனையும், வலியும் என்னை கொண்டு போ என்று சொன்னாலும் ஊனமானாலும் உயிர்மட்டும் இருந்தால் என் பிஞ்சின் முத்தங்களை வாங்கிக் கொண்டே ஊனத்தையும் நெஞ்சின் காயத்தையும் ஆற்றிக்கொள்வேன். எங்கே என் மனைவியும் என் ஆசைக் குழந்தையும் பார்க்கும் வரைக்காவது காப்பாற்றுங்கள். அலறினேன்; துடிதுடித்தேன். இரண்டு மணிநேர இடைவெளி நீடித்தது. ஒரு காலடிச்சத்தம். தலையணையாய் நிலத்தில் காதுகளை வைத்தபடி நம்பிக்கையறுந்து கிடந்த எனக்கு, அக்காலடிச்சத்தம் ஒரு கம்பீரமாய் தெரிவதுபோல் பிரம்மை. மீண்டும் கூச்சலிட்டேன். வெயிலின் விரிப்பில் அந்த வீரத்தின் நிழல் குடையாய் என் நிலச்சுரங்கத்தை நோக்கி குடைபிடித்தது.
விழிகள் ஒளிநிறைந்தன. "தம்பி எப்படி! இது இருவர் பிடித்து என்னை தூக்கி ஏற்றினர் வாகனத்தில். மருந்துவமனை நோக்கி புறப்பட்டது அது. அவர் ஒரு சிறந்த வைத்தியர். அவருடன் ஒரு இலக்கியவாதியும் இருந்தார். அந்த கம்பீரக்குரலின் தாற்பரியம் என் விழுப்புண் வலிகளை மருந்துபோட்டு ஆற்றுவதாக இருந்தது. நான் அடிக்கடி என் ஆசை மனைவியையும் என் பிஞ்சின் முகங்களையும் காணத் துடிக்கின்றேன். என் வலிகளுக்கு அந்த முகங்கள் மருந்தாக அமையும். அங்கு கொண்டு போய்விடுங்கள் என்று கதறினேன். இந்த மழையில் உன்னால் நனைந்து மீளமுடியாது. கொடுமையின் நகங்கள் வளர்ந்துவிட்டன. கொலைசெய்யும் அசூர முற்கள் நிமிர்ந்துவிட்டன. இராஜ்ஜியத்தின் காவலன் கூட கைக்காசுக்கு ஒரு குழந்தையின் சூசகப்பகுதியை சிதைக்க துணிந்துவிட்டான். நீ உன்னைப் பூரணப்படுத்து என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த மருத்துவர்.
ஒரு தேசத்தின் அடையாளம் துன்பத்தில் உழல்கின்ற உயிர்களை மீட்க துணிந்தவன். அவரது நட்பான அந்த இலக்கியவாதி ஒரு பத்திரிகை நிருபராகவும் இருக்கக் கூடும். சுழன்று தேசத்தின் மூலையிலிருந்து வந்தவன். இலக்கியவாதியாக இருந்தாலும் அவனது உள்மனச்சாயம் மாறவில்லை. ஒரு சந்தர்ப்பம் யுத்தம் மலைப்பாம்புபோல் ஒவ்வோர் உயிராய் விழுங்கிக் கொண்டிருக்கையில் மருத்துவனின் மார்பில் தாயை இழந்த குழந்தையின் முகம் தடவுகின்றது. குழந்தை பசியின் உச்சத்தில் அழும்போது முகமும் தொண்டையும் சிவந்து துடிதுடிக்கின்றன. மருத்துவரின் கண்கள் முற்றாத இளந்தாயின் முலைகளைத் தேடுகின்றது. அத்தாயின் கையில் குழந்தை இருக்க வேண்டும். அக்குழந்தை குடிக்கும் பாலில் கொஞ்சமாவது இக்குழந்தையும் குடிக்க வேண்டும், என்ற எண்ணம். அந்த இலக்கியவாதி படங்களையும், பாவனைகளையும் கட்டமிட்டுக் கொண்டிருந்தான். அந்நிய தேசத்தின் புத்திரன் இந்த ரத்தத்தின் அர்த்தம் புரியவில்லை.
உடல் துண்டமாயும் உயிராயும் அக்களம் எங்கும் முடிந்த உலகப்போர் பொறுத்திருந்து பொங்கி கொன்று குவித்தது போல் ஒரே கூட்டின் பறவைகள் குவிந்து கிடந்தன. அவ்வனத்தின் வெண்புறா முழுவதும் இறந்து வெளியூர் கழுகுகள் வந்தன. கழுகுகள் கால் இளைப்பாற கம்பங்களும் உருவாக்கப்பட்டன. ஓடி ஓடி உழைத்து உயிர் காப்பாற்றிய மருத்துவன் மனைவியின் முகத்தையும் பிள்ளையின் முத்தத்திற்காக ஏங்கும் அந்த மனிதனை பார்க்க வந்தான். அவன் ஒற்றை விழியை திறந்தபடி தலைக்கு அணைகொடுத்த புடவைத்துண்டை அணைத்தபடி நெடுந்தூக்கத்தில் இருந்தான். அந்த மருத்துவர் கைகளைப் பற்றி அவனின் நிறைவேறாத கனவுகளைப் பறித்து இழுத்தார். அப்போது அவன் இறந்துவிட்டான். மருத்துவரும் அந்த பத்திரிகை நிருபரும் யுத்த வாசல் வழியாக சென்றனர். நைல் நதிபோல் சனக்கூட்டம் நீண்டு வரிசையில் நின்றது. நதியின் போக்கில் இடறும் கல்லாக இராணுவ இருப்பிடங்கள். ஒவ்வொரு மனிதரின் உடம்பிலும் குணப்படுத்த முடியாத நோய் மனத்திலும் நின்றது. அந்த நோய் உயிர் பிழைப்பமா? என்பதே.
ஒரு பக்கம் குழந்தைகளுக்குப் பாலூட்டும் பத்துப் பன்னிரெண்டு தாய்மார். அவர்கள் பாலூட்டு வதை பருந்துபோல் கறுப்பு ஆடைபோட்ட மரம் உற்றுப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாகக் காமத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பெண்களின் ஆடைக்குள் ஆயுதம் தேடிய இருவர். அந்த விடயங்கள் யாவற்றையும் கண்ட மருத்துவர் கோபத்தின் உச்ச விளைவால் தட்டிக்கேட்டார். இதன் விளைவாக முதலிலே அவரை சிறைக்கு அனுப்பினர். அந்தக் காட்சியை இலக்கியவாதி எழுதினான். இலக்கியத்தில் மாலைகள் போடப்பட்டன. விருது வழங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து மருத்துவர் வெளியில் வந்தார்.
அந்த அழிவுற்ற மக்களுக்கு மருத்துவம் பார்க்க எண்ணினார். மனிதன் ஊனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றினார். அந்த குடிகள் பழைய காயங்களை மறக்காவிட்டாலும் புதிய காற்றில் களைப்பாறினார்கள். ஆறுமாதம் கழித்து மருத்துவர் அதிமுற்றிய மனநலமற்றவர்களைக் குணப்படுத்தும் உயர்ந்த இடத்தில் உயர்வு பெற்றார். இடமாற்றமும் பெற்றார். ஒருநாள் இவரிடம் பத்துப்பேர் மனநலமற்றவராய் அனுமதிக்கப்பட்டார்கள். அனைவரும் அந்த யுத்தவாசலில் கொடியவர்களாக நின்றவர்கள். அந்த மருத்துவர் கொடியவர் என்று கருதாமல் உயிர்கள் என்று கருதி குணப்படுத்த முயன்றார். அவர்களால் குணமாகமுடியவில்லை. அவர்களின் மனத்தில் செய்த கொடுமைகள் குத்திக்கொண்ேட இருந்தன.
அவர்களைப் பார்க்கும் போது இன்றும் குற்றம் குடைந்தது. செய்த கொடுமைகளுக்கு பலனை அனுபவித்துக் கொண்டு தினம் தினம் இறந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த குற்றவாளிகள் அனைவரும். 

Comments