சமாதானத்தை தெளிவாக முன்னெடுக்க கூடுதலான நுட்பங்கள் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

சமாதானத்தை தெளிவாக முன்னெடுக்க கூடுதலான நுட்பங்கள் அவசியம்

“நாட்டிலே சமாதானத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான நல்லிணக்க முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் படு பிஸியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதற்காக ஒரு தொகுதி புத்திஜீவிகளும் கலைஞர்களும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். வடக்கிலே இந்த முயற்சிகள் எப்படி உள்ளன?” என்று சர்வதேச ஊடகமொன்றிலிருந்து அபிப்பிராயம் கேட்டனர்.

இந்தக் கேள்வியை எதிர்கொண்டபோது, “இது உண்மையறியும் நடவடிக்கையாக இருக்குமோ!” என்று ஒரு கணம் தோன்றியது. எப்படியோ இந்தக் கேள்வி சில விடயங்களைக் குறித்துச் சிந்திக்க வைத்துள்ளது.

முதலில், “நாட்டிலே சமாதானத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது” என்று கூறப்படுவதைப்பற்றிப் பார்க்கலாம். சமாதானத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? சமாதானத்தை உருவாக்கக்கூடியவர்கள் யார்? பொது மக்களா? அரசியல் தலைவர்களா? கட்சிகளா? புத்திஜீவிகளும் ஊடகங்களுமா? அல்லது வெளிச்சக்திகளா? வெளிச்சக்திகள் என்றால் இந்தியாவா? அமெரிக்காவா? சீனாவா? அல்லது ஐ.நாவா? அல்லது இவையெல்லாம் இணைந்தும் கலந்தும் உருவான கூட்டா?

பொதுமக்கள் சமாதானத்தின் அச்சாணி என்றால், அவர்களுக்கு அந்த அதிகாரமும் வலுவும் உண்டா? மக்கள் சக்தியே மாபெரும் சக்தி என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அதற்கான வாய்ப்புகள் உண்டா? அந்த வாய்ப்புகளை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வது? அதற்கு அதிகாரத்திலிருக்கும் அரசியற் தரப்புகள் இடமளிக்குமா? இதையும் கடந்து மக்கள் சக்தி மாபெரும் சக்தியாகத் திரளக்கூடிய வாய்ப்புகள் இருந்திருந்தால், கடந்த காலம் மோசமாக இருந்திருக்குமா? நாட்டையே இரத்தத்தில் மூழ்கடித்திருக்குமா? இருண்ட யுகத்தினுள் புதையுண்டிருக்குமா?

இதற்கெல்லாம் அப்பால், அப்படிபொது மக்கள்தான் என்றால், அது சிங்கள மக்களா? அல்லது தமிழர்களா? அல்லது முஸ்லிம்களா? அல்லது எல்லோரும் இணைந்தா? எல்லோரும் இணைந்துதான் தீர்மானிப்பது என்றால், அந்த இணைவை எப்படி ஏற்படுத்துவது? அதை யார் ஏற்படுத்துவது? அதற்கான சாத்தியங்கள் உண்டா? அந்தச் சாத்தியங்கள் இப்போது புலப்படுகிறதா? ஏதாவது ஒரு இனத்தவர் சமாதானத்துக்கு எதிராக இயங்கினாலே நாட்டிலே சமாதானம் ஏற்பட வாய்ப்பில்லாமற் போய் விடும். இந்த நிலையில் எதிரும் புதிருமாக இருக்கின்ற இனங்களை எப்படி ஒரு முகப்படுத்தி, ஒரு கோட்டில் இணைப்பது?

“அதற்காகத்தானே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஒரு பெரிய அமைதிப்படையணி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு கொழும்பில் மிகப் பெரிய வசதிகளோடு ஒரு பணிமனையும் இருக்கிறதே!” என்று நீங்கள் கேட்கலாம்.

நமக்கும் இது தெரியும். ஆனால், இப்படி ஒரு நல்ல முயற்சிக்கான காரியாலயமும் அதில் ஒரு சமாதானப் படையணி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று நாட்டிலே எத்தனை பேருக்குத் தெரியும்? இதை மக்களிடம் அறிமுகப்படுத்துவது யார்?

“தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் மூலமாக நாடகங்கள், ஆவணப்படங்கள், கருத்தரங்குகள், பட்டறைகள், ஓவியக்காட்சிகள் என்றெல்லாம் நடக்கின்றனவே!” என்று யாரும் சொல்லக்கூடும். இதெல்லாம் நடக்கின்றனதான்.

நாமும் இதைக் கவனித்திருக்கிறோம். ஆனால் இதில் பங்கேற்பது எத்தனை பேர்? அவர்கள் இதைக்குறித்து என்ன சொல்கிறார்கள் அல்லது என்ன கருதுகிறார்கள்?

இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். இந்தச் செயற்பாடுகளில் அழைக்கப்படுகின்றவர்களில் இருவருடன் அண்மையில் உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. அவர்கள் பிரதேச செயலகத்தினாலும் பிற அமைப்புகளின் வழியாகவும் தெரிவு செய்யப்பட்டு பொலன்னறுவைக்கும் கொழும்புக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்கள் சமாதானத்தைப்பற்றியும் தேசிய ஒருமைப்பாட்டைப்பற்றியும் பேசியிருக்கிறார்கள். கலந்துரையாடல்கள் நடந்திருக்கின்றன. படக்காட்சிகள், நாடகங்கள், ஓவியக் காட்சி எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப்போல வேறு இடங்களில் இருந்த வந்தவர்களுடன் பேசியும் இருக்கிறார்கள்.

எல்லாம் முடிய திரும்ப ஊருக்கு வந்து விட்டனர். மனதில் சமானதான முயற்சிகளைப்பற்றியும் இந்தச் செயற்பாடுகளைப்பற்றியும் ஏராளமான நகைச்சுவைக் கதைகளைச் சொன்னார்கள். அதாவது அவர்களுடைய மனதில் இவையெல்லாம் கவனிக்கத்தக்க விசயங்கள் என்றோ சீரியசான முயற்சிகள் என்றோ படவில்லை. பதிலாக பகடிக்குரியமாதிரியே பட்டிருக்கிறது.

அப்படியென்றால் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். பிரிவினையைத்தவிர வேறு வழியில்லை. என்னதானிருந்தாலும் சிங்களவர்களின் மனதில் தாங்கள் மேலாதிக்கச் சக்திகள் என்றே நடந்து கொள்கிறார்கள் என்றனர்.

அப்படியிருக்காது. அது உங்களுடைய மனதில் படிந்திருக்கின்ற ஒரு தவறான பிம்பம். சமாதான முயற்சிகளை அவர்கள் விசுவாசமாகத்தான் முன்னெடுக்கின்றனர் என்றேன். இல்லவேயில்லை. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்திலேயே இந்த மேலாதிக்கத்தன்மையை உணர முடிகிறது என்று பலர் சொல்கிறார்கள் என்று அவர்கள் வாதிட்டனர்.

ஆகவே, இவ்வாறான முயற்சிகளைச் செய்கின்றவர்களுக்கும் மக்களுக்குமிடையில் ஏதாவது தொடர்புகளும் உறவுகளும் உண்டா? இந்தப் பணியைப் பொறுப்பேற்க முன்பே இவர்களில் அநேகருக்குச் சமூகத்தோடு, மக்களோடு உறவே இருந்ததில்லை. இப்போது மட்டும் எப்படித் திடீரென அது சமாதானத்துளிராகத் துளிர்க்கும்?

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்களிடத்தில் சிலர் மெய்யாகவே இந்த நாட்டில் சமாதானம் எட்டப்பட வேணும் என்று விரும்புகிறார்கள். அவர்களால் மேலெழுந்து செயற்பட முடியவில்லை. ஏனையவர்கள் அங்கே வலுவாகி அதை ஒரு தொழிலாக்கியிருக்கின்றனர். ஆகவே, அவர்களுடைய பார்வையில் சமாதானத்துக்கான வழிமுறையை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் கொண்டிருக்கவில்லை. அது பலருக்கு ஒரு தொழில் தரும் அமைப்பு.

மிகக் கவர்ச்சியான முறையில் சம்பாதித்துக் கொள்வதற்கான ஒரு இடம். வெளிநாட்டு நிதியையும் சமாதான முயற்சியின் நம்பிக்கையையும் சுலபமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி வெளியே எப்படிப் பேசுவது என்று புரியவில்லை என்று வருந்துகிறார்கள்.

யுத்தகாலத்தில்தான் உண்மைகளைப் பேச முடியவில்லை என்றால், யுத்தமற்ற காலத்திலும் உண்மைகளைப் பேசமுடியாதா? அப்படியென்றால் எப்போதுதான் உண்மைகளைப் பேசுவது? உண்மைகளை உரிய இடங்களில், உரிய காலத்தில் பேசமுடியவில்லை என்றால், அதற்கான சூழலை ஒரு நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த நாடு உருப்படாது. இது ஒன்றும் சாபமில்லை. உண்மை. இதுவே உண்மை.

மெய்யாகவே சமாதானச் செயற்பாடுகளின் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் அக்கறையும் ஈடுபாடுமிருக்கலாம்.

ஆனால், அதற்கு அவர்கள் சரியானவர்களின் கைகளில் சரியான பொறிமுறைகளை உருவாக்கும் பொறுப்பைக் கையளிக்க வேணும். இப்படிச் சொல்வதன் மூலம் இப்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தில் குடிகொண்டிருப்போரைக் குறைசொல்வதாகவோ குற்றம்சாட்டுவதாகவோ யாரும் கருதத்தேவையில்லை. அவர்களும் இதையிட்டுக்கோவிக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியானால் அவர்கள் தாம் இதுவரை எட்டிய அடைவுகளை – இலக்குகளை – அதன் புள்ளிகளை அடையாளம் காட்டவேணும். கண்ணாமூச்சி காட்டக்கூடாது. காதிலே பூ வைக்க முயற்சிக்கக்கூடாது.

ஏனென்றால் சமாதானம் ஒன்றும் இலகுவானதாக எட்டப்படக்கூடியதல்ல. மட்டுமல்ல அதற்கு எதிரான ஒரு பெரிய வலைப்பின்னல் பெரும் சக்தியோடு அதிகார மட்டங்களின் மூலமாக இங்கே உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இதற்கு எதிராகச் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அது ஏராளம் நுட்பங்களையும் கடினமான அர்ப்பணிப்புச் செயற்பாடுகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். சமாதானத்தின் மீதான பேரார்வத்தின் காரணமாகவும் யுத்த வலியை உணர்ந்தபடியாலுமே இதை இங்கே அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது.

யுத்தத்தை நடத்தியவர்கள் வியாபாரிகள் என்றால், சமாதானத்தின் பேராலும் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். இந்த அனுபவம் வேறு யாருக்குமில்லாது விட்டாலும் திருமதி சந்திரிகா குமாரதுங்கவுக்குத் தாராளமாக இருக்க வேண்டுமே. அவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சமாதான முன்னெடுப்பையும் மேற்கொண்டவர்.

அதிகாரத்தைப் பகிரும் நடவடிக்கையைச் செய்ய முயற்சித்தவர். யுத்தத்தை நடத்தியவர். அதை எதிர்கொண்டவர். ஆட்சியை நடத்தியவர். ஆகவே, அத்தனை நிலைகளிலும் இலங்கையின், இலங்கைச் சமூகங்களின் இயங்குநிலையைப் பற்றி சந்திரிகா நன்றாக அறிந்திருப்பார். அப்படி அறிந்த அனுபவத்தைக் கொண்டிருப்பவர் இப்படி ஒரு காட்சிகாண் நடவடிக்கையாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் இருப்பதற்கு எப்படி அனுமதிக்கிறார்? என்றே யோசிக்க வேண்டியுள்ளது.

குறைந்த பட்சம் எத்தனை ஊடகவியலாளர்கள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் சமாதான முன்னெடுப்பு, நல்லிணக்க முயற்சிகள், தேசிய ஒருமைப்பாடு பற்றிச் சரியாக அறிந்திருக்கிறார்கள்? அப்படி அவர்கள் இந்த முயற்சியைப்பற்றி, இதன் சிறப்பைப்பற்றி அறிந்திருந்தால், தங்களுடைய ஊடகங்களில் இதைப்பற்றிச் சொல்லியிருப்பார்கள். காட்சி ஊடகங்கள் என்றால் அதில் விவாதித்திருப்பார்கள். கலந்துரையாடியிருப்பர். அப்படி எதுவுமே நடக்கவில்லையே.

சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களை மட்டும் பார்க்கக்கூடியதாகவோ கேட்கக்கூடியதாகவோ உள்ளது. இதற்கு அப்பால் குறிப்பிடத்தக்க எந்த நன் முயற்சிகளையும் காணவில்லை. இந்த நிலையில் பொதுமக்களிடம் இதைப்பற்றி எடுத்துச் சொல்வது யார்?

ஆகவே பொதுமக்கள் இன்னும் சமாதான முயற்சிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மட்டுமல்ல அதற்குத் தாங்கள் என்ன வகையில் பங்களிக்கவேணும் என்றும் அவர்களுக்குத் தெரியாது.

யுத்தத்தினால் வழிநடத்தப்பட்டவர்களே நமது நாட்டின் மக்கள். அல்லது யுத்தம் கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்கள். இப்போது யுத்தம் இல்லை என்றாலும் இன்னும் அவர்கள் யுத்தமற்ற காலமொன்றில் வாழத்தொடங்கவில்லை.

இதற்கு நல்ல உதாரணம் வடக்குக் கிழக்கிலிருந்து தென்பகுதிக்கு வருகின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் இன்னும் தெற்கிலுள்ள சிங்களச் சமூகத்துடன் மனம் திறந்து பேசத்தொடங்கவில்லை. இதைப்போலவே தென்பகுதியிலிருந்து வடக்கிற்கும் கிழக்கிற்கும் பயணிக்கின்ற சிங்கள மக்களும் அங்கே யாரோடும் பேசுவதாக இல்லை. அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிவதாகவோ, அங்கே உள்ள நிலைமைகளைக் குறித்துப் பேசுவதாகவோ இல்லை.

எங்கே கூடினாலும் அவரவர் தனித்துவத்துடனேயே இயங்குகின்றனர். சனங்களை வழி நடத்துகின்ற அரசியல் கட்சிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி இன ஐக்கியத்தைப்பற்றியோ சமாதானத்தைப்பற்றியோ விசுவாசமாகச் சிந்திக்கவில்லை. இன்னும் அரசியல்வாதிகளின் வாய்களில் யுத்தப் பீரங்கிகளே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அவர்களுடைய மனம் யுத்தக் களஞ்சியமாக உள்ளது. ஊடகங்களும் இப்படித்தான். சமாதானத்தை நோக்கி அவை ஒரு அடி கூட முன்வைக்கவில்லை. இந்த நிலையில் எப்படிச் சமாதானத்தைப் பற்றிப் பொதுமக்கள் அறிவதும் உணர்வதும்?

ஆகவே ஆளுக்காள், சமூகத்துக்குச் சமூகம் பரஸ்பர உரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. அதற்கான ஏற்பாடுகளும் நடக்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் அதிகாரத்தில் உட்காருவதற்காகவும் கூடிப்பேசியவர்கள் சமாதானத்துக்காகப் பேசவில்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இரகசியத்திட்டங்களை உருவாக்கியவர்களும், கடுமையான முயற்சிகளைச் செய்தவர்களும் தீர்வின் பக்கம் பார்க்காமல், சமாதானத்தின் பக்கம் நோக்காமல் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்திருக்கிறார்கள்.

மாற்றத்துக்காகவே இரவு பகலாக இயங்குகின்றோம் என்ற தலைவர்களும் தொடர்பாளர்களும் தங்களுடைய காரியம் நிறைவேறியவுடன் சனங்களைப் பற்றியும் நாட்டைப்பற்றியும் சிந்திக்காமல் மறந்து விட்டனர்.

இந்த நிலையில் சமாதானம் எப்படி உருக்கொள்ளும்? அல்லது சமாதான முயற்சிகளுக்கான ஆதரவு பொதுமக்கள் தரப்பிலிருந்து எப்படிக் கிட்டும்? எனவே பொது மக்கள் இதில் எந்த வகையிலும் வலுவுடையோராக இல்லை என்று புரிகிறது.

ஆகவே அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்தும் இதற்கான ஆதரவு இல்லை. ஊடகங்களிடமும் இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் திருமதி சந்திரிகா குமாரதுங்கவும் தலைமை தாங்குகின்ற லங்கா சுதந்திரக் கட்சியே இன்னும் சமாதானத்துக்கான – அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான மனநிலைக்கு இன்னும் வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி இந்த விசயத்தில் ஒளித்து விளையாடிக்கொண்டிருக்கிறது.

ஜே.வி.பியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் புலம்பெயர் தமிழ்த்தீவிரவாதிகளுக்கும் பயந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி எந்தத் தெளிவான சித்திரங்களும் இல்லை.

இப்படியே நாட்டில் எந்த அரசியற் கட்சியிடமும் இந்த நாட்டின் இனமுரண்களைத் தீர்ப்பதற்கான உத்தேசப் பொறிமுறையோ, முன்வைப்புகளோ இல்லை. ஏன் புத்திஜீவிகள் கூட கூட்டாகவோ தனித்தோ ஒரு முன்வைப்பை இதுவரையில் உருவாக்கவில்லை.

எல்லோரும் அவரவருக்குத் தெரிந்த அளவில் தத்தமது முகாம்களில் நின்று கொடியசைக்கின்றனரே தவிர, தேசிய அளவில் கவனத்தைக் கோருகின்ற விதமாகவோ உரையாடலை உருவாக்குகின்ற அடிப்படையிலோ எந்த அடையாள வைப்புகளும் நிகழவில்லை. இதுவே உண்மை. நாம் சும்மா கற்பனைக் குதிரையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டிருக்க முடியாதல்லவா.

இந்தப் பத்தி சமாதான முயற்சிகளைப் பற்றியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தைப் பற்றியும் எதிர்மறையாகப் பேசிச் செல்ல விரும்பவில்லை. ஆனால், சமாதான முயற்சிகள் மேலும் பலவீனமாக நிகழ்ந்து காலம் கடந்து போவதையும் அதனால் ஏற்படும் துக்கத்தையுமே பகிர விரும்புகிறது. அதற்காகச் செலவழிக்கின்ற பணம் பயனற்றுப்போகின்ற நிலையையும் மேலும் சமாதானத்தைப்பற்றிய நம்பிக்கை தோற்றுப்போகும் நிலையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

சமாதானத்தில் உள்ள ஆர்வத்தையும் நம்பிக்கையையும் மக்கள் இன்னொரு தடவை இழக்கக்கூடாது. மீண்டும் ஏமாற்றங்களையும் சந்திக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக போரிலே பாதிக்கப்பட்ட சமூகங்கள்.

மெய்யாகவே சமாதானத்தை எட்டவேண்டுமானால் அதற்காக விசுவாசமாக உழைக்கின்ற, சிந்திக்கின்ற தரப்புகள் தேவை. அரசியல்வாதிகளிடத்தில் அது ஒரு பகிரங்கமான வேலைத்திட்டமாக உருவாக்கப்பட வேணும். அப்போதுதான் அவர்கள் ஒளித்து மறைத்துச் சூழ்ச்சிகளைச் செய்ய முடியாது. பகிரங்க அழைப்பில் ஒவ்வொருவரையும் பகிரங்க வெளிக்கு அழைக்க வேணும்.

அப்போதுதான் ஒவ்வொருவருக்கும் பொறுப்புச் சொல்லக்கூடிய கடப்பாடு ஏற்படும். இப்பொழுது சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற தரப்பும் அலுவலகமும் இதுவரையில் எத்தகைய அடைவுகளை எட்டியது என்பதையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும். அதாவது தன்னுடைய முயற்சியின் முன்னேற்றத்தைப்பற்றி.

உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி மட்டுமல்ல, இந்த விசயத்தில் வெளிச்சக்திகளின் ஆதரவையும் எதிர்ப்பையும் கூடப் பேச வேண்டும்.

அந்தச் சர்வதேசச் செய்தி நிறுவனத்திற்கு என்னால் சொல்லக்கூடியதாக இருந்தது “எனக்குத் தெரிந்தவரையில் வடக்கிலே சமாதானத்தைக்குறித்து ஓர் ஊடகமும் நம்பிக்கையோடு செயற்படவில்லை. ஓர் அமைப்போ, ஒரு நிறுவனமோ, ஒரு தரப்போ அப்படியான அடையாளத்தோடு இயங்குவதாகவும் தெரியவில்லை. குறைந்த பட்சம் தேசிய ஒருமைப்பாட்டுடன் சமாதான எண்ணத்தைக் கொண்ட பேராளுமையாக ஒருவரைக்கூட அடையாளம் காண முடியவில்லை. பதிலாக எதிர்மனோபாவமுள்ள தரப்பே மேலாதிக்கம் பெற்றிருக்கிறது” என்று.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதுதானே நிலைமை! 

Comments