வடமேல் மாகாண மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டுவரும் பாரிய திட்டம் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

வடமேல் மாகாண மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டுவரும் பாரிய திட்டம் ஆரம்பம்

வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படும் உள்நாட்டு   கைத்தொழில் பொருட்கள்

இன்றுகாலை முதல் குருணாகல் பிரதேசத்தில் பல முக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டோம். எஸ்.பீ.நாவின்ன அவர்களது தலைமையில் வடமேல் மாகாணத்துக்கு மட்டுமன்றி அனுராதபுரம், பொலநறுவை போன்ற பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு உயர்ந்த சேவையாற்றும் வகையில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம், ஆட்பதிவு திணைக்கள அலுவலகம், விவசாய திணைக்கள அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தோம்.

அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என சிலர் கூறுகின்றனர். இன்று திறந்துவைக்கப்பட்ட அலுவலகங்கள் இரண்டும் பல ஆண்டுகளுக்கு முன்னர் திறந்திருக்கப்பட வேண்டியவை. அனைத்து இடங்களிலிருந்தும் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக கொழும்புக்கு வறிய மக்கள் செல்கின்றனர். அவர்களுக்கு நிவாரணமளிப்பதற்காகவே இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பசுமைக் கனவு உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல. இன்று அனைவரினதும் கனவாகும். இயற்கை வளங்களால் நிறைந்திருந்த உலகு இன்று தொழில்நுட்பம் மற்றும் பௌதீக வள பயன்பாடு காரணமாக அழிவடைந்துள்ளது.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள மக்கள் சுவாசிப்பது தொடர்பில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது உங்களுக்கு தெரியும். சந்தையில் வாங்கும் ஒட்சிசன் பைகளை தோளில் தொங்கவிட்டவாறே சில நகரங்களில் மக்கள் வாழ்கின்றனர். எமது நாட்டையும் அந்த நிலைக்கு கொண்டுவரப் போகிறோமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் கனவு உள்ளது. சமூகத்துக்கும், நாடுகளுக்கும் கனவு உள்ளது. எனக்கு மொரகஹகந்த கனவு இருந்தது. அதனை நனவாக்கியுள்ளேன். அதன் பெறுபேறாக வடமேல் மாகாண மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டுவரும் பாரிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

பசுமைக் கனவை நனவாக்காவிட்டால் அனைத்து உயிர்களினதும் வாழ்வு சிக்கலானதாகும். நாட்டிலுள்ள இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் ஒரு பக்கம் உள்ளன. மறுபக்கம் அறியாமை காரணமாக இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன.

நீர்நிலைகளின் பெறுமதி தெரியாமல் அவை அழிக்கப்படுகின்றன. மண், மணல், கல் போன்றவை அபிவிருத்திக்கு தேவையாக இருந்தபோதிலும், அவற்றை பெருமளவில் அகழ்வதனால் சுற்றாடல் அழிவு ஏற்படுகிறது.

அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் பிரதி அமைச்சர் ஒருவருக்கும் அரச அலுவலர்களுக்குமிடையில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எனது அமைச்சின் கீழுள்ள அலுவலர்கள் தான் முதலாவது தவறை இழைத்திருந்தனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் மண் வெட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பில் எழுந்த பிரச்சினைகளால் பலர் இறந்துள்ளனர். அவ்வளவு பயங்கரம் அதில் இருந்தது. மண் வெட்டுவதற்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும். என்ன தேவைக்காக மண் வெட்டப்படுகிறது எனக் குறிப்பிட வேண்டும். குறித்த பிரச்சினை ஏற்பட்ட இடத்திலிருந்து 60000 கியூப் மண் முத்துராஜவல சதுப்பு நிலத்தை நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பில் முத்துராஜவல முக்கியமானது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

அண்மையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பலமிக்க மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட முத்துராஜவெல மண் நிரப்பும் திட்டத்தை நான் நிறுத்தினேன். அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கும் அதில் தொடர்புள்ளது. மேல் மட்ட வியாபாரிகளுக்கு தொடர்புள்ளது. கம்பஹாவில் உள்ள இடத்திலிருந்து தான் மண் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேடமாக புவிச்சரிதவியல், அகழ்வுப் பணியக அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த மண் வெட்டப்பட்டு எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பதனை எவரும் பார்க்கவில்லை. அந்த பொறியியலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பணிநிறுத்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கெதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் வறக்காப்பொல கிராமத்தில் பெரும் மலையொன்று வெட்டப்பட்டது. மலையை வெட்டுவதற்கு ஜனாதிபதி உத்தரவு இட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் என்னை மோசமாக விமர்சிப்பதாக புலனாய்வு தரப்பினரிடமிருந்து தகவல் வந்தது.

அதனை ஆராய்ந்து பார்த்தேன். இந்த மலையிலிருந்து வரும் நீரையே அந்த கிராம மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தார்கள். நீரூற்றுக்கள் உள்ள அந்த மலையே வறக்காப்பொலயில் வெட்டப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இது ஜனாதிபதியின் உத்தரவு எதிர்த்தால் சிறையிலடைப்போம் என்று மண்வெட்டும் முதலாளிமார் மிரட்டியுள்ளனர். அதனால் தான் மக்கள் என்னை வைதுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் நடுநிசியிலேயே அலுவலர்களை அனுப்பினேன்.

இவ்வாறான மண் வெட்டுவதற்கு பத்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் கையெழுத்திடுவது இங்கிருக்கும் அரச அலுவலர்களுக்கு தெரியும். அவ்வாறு கையெழுத்திட்ட அலுவலர்களை கொழும்புக்கு வரவழைத்து, ஏன் இதனைப் பார்க்கவில்லை என்று கேட்டேன். அனுமதிப்பத்திரம் கையெழுத்திட்ட பின்னர் என்ன நடக்கிறது என பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

பசுமைக் கனவை நனவாக்குவதாயின் நாமனைவரும் பாடுபட வேண்டும். வலுசக்தி தொடர்பான பிரச்சினை உலகிலுள்ளது. எமது நாடும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வலுசக்தி தொடர்பான பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கவுள்ளது. அதனால் இயற்கை வளங்களைப் பாவித்து பேண்தகு வலுசக்தி உருவாக்கத்துக்கான பரந்த செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது.

இப்போது எமக்கு வறட்சி காலம். வறட்சிக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்த்தேன். இந்தியாவின் காலநிலை எப்படியென நேற்று என்னை சந்தித்த இந்திய இராஜதந்திரிகளிடம் கேட்டேன். நல்ல மழை. குளங்கள் நிறைந்துள்ளன என்று அவர்கள் கூறினார்கள்.

எமது நாட்டில் மட்டும் ஏன் இவ்வாறு உள்ளது? சுற்றாடல் அழிவு முக்கியமானது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வறட்சிக்கு முகங்கொடுக்கிறோம். 2003 ஆம் ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டது நினைவிருக்கும்.

வறட்சியால் பல பிரச்சினைகள் ஏற்படும். வறுமை அதிகரிக்கும். நோய்கள் அதிகரிக்கும். உணவுற்பத்தி குறைவடையும். உற்பத்திகள் வீழ்ச்சியடையும். வலுசக்தி குறைவடையும். பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கம் ஏற்படும்.

அதனால் பசுமை கனவு போன்ற பரந்த தேசிய செயற்திட்டங்கள் வெற்றிபெற நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இதனூடாக சிறந்த பொருளாதார சுபீட்சமிக்க, இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டையே எதிர்பார்க்கிறோம். அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும். அந்த பொறுப்பையும், கடமையையும் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் நாம் நாடென்ற வகையில் வெற்றிபெறலாம். அந்த திட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. இயற்கை வளங்களால் செய்யப்படும் உற்பத்திகள், உள்நாட்டு கைத்தொழில்களை நாம் மதிக்க வேண்டும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏற்றுமதி வர்த்தகத்தில் எமது நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு கைத்தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்காமையே அதற்கு காரணமாகும். உள்நாட்டு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கு நாம் திட்டங்களை அமுல்படுத்துகிறோம்.

நீரை சுடாக்கும் புதிய கண்டுபிடிப்பொன்று இந்த கண்காட்சியில் இருந்தது. அத்துடன் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தும்புப் பொருட்கள் மிகவும் அழகானவை. உயர் தரமுடையவை. அவ்வாறானவற்றை மேம்படுத்த வேண்டும். உள்நாட்டு கைத்தொழிலுக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் ஜயவிக்கிரம பெரேரா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.

எமது நாடு சுபீட்சமடைவதற்காக நீங்கள் அனைவரும் நல்கும் ஒத்துழைப்புக்களை பாராட்டுகிறேன். 

Comments