சிறு கதை | தினகரன் வாரமஞ்சரி

சிறு கதை

மொயின் சமீன்

“தாரன் புள்ள அது?”

“நான் மெய்தீன் அடும”

“எனத்திக்கன் வந்தா?”

“அணில் பாக்க வந்த...”

“ஸ்கூலுக்குப் போகாம ரஸ்தியாதில திரீரா?”

“சோமில்லா சுட்டிலும் போகல்ல.”

“சோமில்லாட்டி ஊட்டில ஈச்ச வேணாமா?”

“ஊட்டில ஈச்ச முசுப்பு...”

“இங்க முசுப்பாத்த வந்தா?”

“ஓ ஆச்சும்மா...”

“இங்க வீண் முசீபத்துகளிலமாட்டாம பெய்த்திருடுங்க புள்ள...”

“சொட்டுப்போல அணில் கூத்த பாத்திட்டுப் போறன்”

“வேணாம். ஆள்க்களில்லாத நேரத்தில பலாயிழுக்காம போங்க”

“சொட்டு நேரம்...”

“இல்ல வேணாம்...”

“ஐரோ! ஆச்சும்மா சரி ஆச...”

“டேய்! சென்னாக்கேளு; போடா! போரத்துக்கு...”

ஆசியத்தும்மாவின் வெட்டுவெடுப்புக்கு அஞ்சி வெருண்டோடினான் மெய்தீன் அடும.

அறுபது வயதைத் தாண்டியும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் ஆசியத்தும்மா. பார்வை குன்றிய போதிலும் வீட்டுக்கு வருவோர் போவோரை குரலால் இனங்கண்டு கொள்ளும் ஆற்றல் அவளுக்கிருந்தது.

ஆசியத்தும்மாவின் ஏகபுத்திரன் அன்சாரி. கம்பி வேலைக் கைத்தொழில் செய்து முன்னேறி ஊரில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவனாகத் திகழ்கிறான்.

அன்சாரியின் தொழில் இதர முன்னேற்றங்களில் உந்து துணை அவள் மனைவி ஆயிசாதான்.

தாம்பத்திய வாழ்வில் சிந்தித்த இரு பிள்ளைகளையும் சான்றோராக்கிவிடுவதே அவனது இலக்காக இருந்தது. அந்த இலக்கை அடைய குறிகாட்டியவர் அவர் ஆருயிர் நண்பர் அஸார் ஆசிரியர்.

புத்திரன் அஸ்ரான் ஊர் பாடசாலையில் படித்து விஞ்ஞான பொறியியல் பட்டதாரியாகி, அமெரிக்க நாஸா ஆய்வகத்தில் பணிபுரிகிறான். புதல்வி அஸாரியா அயல் பாடசாலையில் உயர் கல்வி படிக்கிறாள்.

பாடசாலையிலிருந்து வரும் வழியில்தான் செல்லமாக வளர்க்கும் அணில் குட்டி ராஜாவுக்கு மாங்காய் ஒன்றை வாங்கி வந்தாள் அஸாரியா.

“ராஜா! என் கண்மணி ராஜா!!” என்று அணில் கூட்டை அண்டிய போது தண்ணீர் சிந்தி இருப்பதைக் கண்டு அலமந்து நின்றாள். மறுகணம்

“ஓ! அணில் குட்டி ராஜா குட்டிக்கரணம் போட்டிருப்பான்”. என்று மனதை தேற்றிக் கொண்டு உடைகளை மாற்றிக் கொள்ள பின்புறக்கொடியில் காயப்போட்டிருந்த ஆடைகளை கையில் அடுக்கினாள்.

அதில் தனது மார்புக் கச்சையை காணாமல் பிரமித்து நின்றாள்.

அவளை அறியாமலேயே, “ஆ; ஐயோ!” என்று பதறினாள்.

பின்புறத்தில் மகளின் அவலக்குரல் கேட்டு கவலையுடன் நோக்கினாள் அன்னை ஆயிசா.

“என்ன புள்ள உடுப்பில தடுபுழுவனா? என்று கேட்டாள்.

“இல்ல உம்மா; ஏண்ட அதைக் காணமே...” “எதை?”

“நான் விடி சுபஹில குளிச்சிட்டு, கழுவிக் காயப் போட்ட அது இல்ல...” என்றாள்.

“எனத்தியன் புள்ள பொலம்பிய விளங்கச் சொல்லுங்க”

அதை வாய்விட்டு சொல்ல முடியாமல் தருமசங்கடப்பட்டாள். அவள் கண்கள் கலங்கி கண்ணீர் துளிகள் கவின் வதனத்தில் சரம்கோர்த்து வடிந்தன.

“ஏன் அழுகுறீங்க மகள்?”

“இல்ல உம்மா, ஏண்ட இங்க போடியதக்காணம்” என்று நாணிக்கோணி மார்பகங்களை சுட்டி சைகை மொழி பகர்ந்தாள். அவள் முகத்தில் சிவப்பு ரேகைகள் இழையோடி வெட்கத்தைச் சித்தரித்தன.

“ஓஹோ! அதுவா? அதயார் எடுப்பாங்க...?”

“நான் கழுவிக் காயப் போட்டது நல்லா நெனவு இருக்கிய...”

“கொள்ளயில எனத்தியன் கல பல?” என்று ஆசியத்தும்மா எட்டிப் பார்த்தாள்.

"இல்ல மாமி. அஸாரியாட பிரஷியரக் காணமாம்”

“நெசமா, வேறு தாரும்வரல்ல. ஆனால் முபீதாட மகன் மெய்தீன் அடும அணில் பாக்க என்று வந்த நான் ஏசி வெரட்டின. அவன் அத எடுத்திருப்பானோ?”

“அது அவனுக்குத் தேவையா?” என்று அவதூறு சுமத்துவதை தவிர்த்தாள் ஆயிஷா ஆனால் நீறு பூத்த நெருப்புலே அந்த நிகழ்ச்சி மனதுக்குள் கொதித்துக் கொண்டே இருந்தது.

வேலைத் தளத்திலிருந்து பகல் சாப்பாட்டுக்கு வந்தான் அன்சாரி. காலையில் காணாமற் போன கச்சை சம்பந்தமான செய்திகளைப் பற்றி கணவனுடன் கலந்துரையாடினாள் ஆயிசா.

“இது அற்ப விஷயம்தான் ஆனால், தொடர்ந்து பாரதூரமான கேடுகளுக்கு வழிவகுக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேணும். எதுக்கும் அஸார் ஸேரின் ஐடியாவக் கேட்போம்...” என்று தொலைபேசி இலக்கங்களை அழுத்தினான்.

“அஸார் ஸேர் என்ன சொல்கிறார்?” என்று ஆயிசா ஆவலுடன் நோக்கினாள்.

“அவர் பிஸி; அஸருக்குப் பொறகு அவர் இங்கு வருவார்” என்று சொல்லிவிட்டு கட்டிலில் சாய்ந்தான் அன்ஸாரி.

வழமையாக சாப்பாட்டுக்குப் பின் சிறிது நேரம் உறங்குவது அன்ஸாரியின் பழக்கம். ஆனால், தூக்கம் வரவே இல்லை. “

இந்தச் சிக்கலை அவிழ்ப்பது எப்படி?” என்று மனதுக்குள் போராட்டம் நிகழ்ந்தது.

...அயல் பாடசாலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட குண்டுவெடி அசம்பாவிதம் ஒன்றின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்த பெருமை அஸார் ஆசிரியரையே சாருகிறது. அதைப்போல இதையும் நிச்சயமாக கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கை தெம்பளித்தது. அந்த நிகழ்ச்சியை அன்ஸாரி மீண்டும் நினைத்துப் பார்த்தான்.

...நாட்டின் நாலாதிக்குகளிலும் புலிகள் இயக்கப் போராளிகளின் குண்டு வெடிப்பு அட்டகாசம் நாட்டை நிலை தடுமாற வைத்திருந்த காலம் அது. வீதியில் மாத்திரமல்ல வித்தியாலயங்களிலும் பீதி குடிகொண்டிருந்த வேளையது. அயல் பாடசாலையிலும் குண்டுப் புரளி அதிர்ந்தது.

அது குண்டு வெடியல்ல; அதையொத்த பயங்கரப் பட்டாசு வெடி...

...பாடசாலை சிவிலினுக்குள் பாரிய சக்திவாய்ந்த படடாசுக்கோர்வையில் நுளம்புச் சுருளை நேரம் கணித்து அளவாக இணைத்துப் பற்றவைத்த பகிடி வெடி இடியோசை போல குமுறிச் சிதறியது.

படிப்பில் ஆழ்ந்திருந்த மாணவர்களும் படிப்பிப்பதில் திளைத்திருந்த ஆசிரியர்களும் அதிர்ச்சியுடன் அழுது புலம்பிக் கொண்டு சிதறி ஓடினார்கள்.

பாடசாலையே அல்லோலகல்லோலப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மாணவர்களை மிக நுட்பமாகக் கண்டுபிடித்தவர் அஸார் ஆசிரியர்தான்.

அடாது செய்தவர்களை பாடசாலையிலிருந்து சீட்டுக் கிழிக்க வேண்டுமென்று கேட்டபோது,

“மாணவர்களின் இயல்பூக்கத் தொழிற்பாட்டை அறிந்து ஆக்கத்துறைக்கு ஊக்குவிப்பதே ஆசிரியரின் கடமை.

இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் அறிவியல் மேதைகளாக மிளிர்வார்கள்...” என்று எதிர்வுகூறினார். மகன் அஸ்ரான் உட்பட அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் சாதனையாளர்களாக மாறினார்கள்.

அதேபோல மார்புக் கச்சை திருட்டு மருமத்தையும் அஸார் ஸேர் துலக்குவார் என்று எண்ணிய போது அவனுக்குப் பூரிப்பு ஏற்பட்டது.

அதேநேரத்தில் சைகை மணி ஒலித்தது. கதவைத் திறந்தான் அன்ஸாரி. அஸாத் ஆசிரியர் புன்முறுவல் பூத்தவாறு நின்றார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஸேர்!” என்று வரவேறான் அன்ஸாரி.

இருவரும் முன் அறையில அமர்ந்து கொண்டார்கள். ஆயிசா கோப்பித் தட்டுடன் வந்து, “ஸேருக்கு இண்டைக்கு ஜாதிச் செய்தி ஒண்டு ஈச்சிய” என்றாள்.

கோப்பியைச் சுவைத்த வண்ணம் காலையில் நடந்த நம்பவத்தை இருவரும் அலசி ஆய்தார்கள்.

“ஓ நான் மெய்தின் அடிமையின் அண்மைக்கால நடத்தைகளை அவதானித்தேன்...

இதில் அவன் சம்பந்தப்பட்டிருப்பான்...” என்று அஸாத் ஸேர் கூறினார்.

“மெய்யா?”

“ஓ... நான் அழகியல் பாடவேளையில் அவன் வரைந்தவற்றை அவதானித்தேன். அஜந்தா குகை ஓவியங்களையும் தம்புள்ளை கூரைச் சித்திரங்களையும் சிகிரியா சுவரோவியங்களையும் கவின் சிந்த வரைந்துள்ளான்.”

"ஆமா! அவற்றோட இந்த கச்சைக் களவுக்கும் என்ன சம்பந்தம் ஸேர்!” என்றான் அன்ஸாரி.

“தேவமாதர் அணியும் கச்சையாக அதைக் கருதியிருப்பான். எதற்கும் அவன் வீட்டு வளவில் ஏதாவது தடயங்கள் இருக்கலாம் பார்ப்போம்...” என்று வெளிக்கிட்டார். அன்ஸாரி அவரைப் பின் தொடர்ந்தார்...

இருவரும் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் தொண்டர்களாக இயங்கினார்கள்.

மெய்தீன் அடிமையின் அண்டை அயல் வீட்டுத் தோட்டங்களில் யோகட் கோப்பை, டயர், தயிர் சட்டிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை அவதானித்து எச்சரித்துக் கொண்டே தயிர் சட்டிகளை அடித்து நொறுக்கினார்கள்.

மெய்தீன் அடிமையின் தாய் எட்டிப் பார்த்து, “ஸேர்! டெங்கு நுளம்புக்கு எதிராக போராட்டமா?” என்று கேட்டாள்.

“ஓ, உங்க வீட்டுத் தோட்டத்தையும் பார்க்கலாமா?” என்று கேட்டார் அஸார் ஸேர்.

“ஓ கட்டாயம் பாருங்க. எங்கள் நலத்துக்காக பாடுபடும் உங்களுக்கெல்லாம் அல்லாட கிருப கெடச்சும்”

‘மெய்தின் அடிமை இருக்கிறானா?”

“இல்ல, வெளிய போனான். இப்ப வந்திடுவான்.”

கழிவுத் தொட்டிகளை பார்த்தார்கள் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எல்லையிலுள்ள குப்பை மேட்டைப் பார்த்தார்கள். கழிவுச் சட்டி முட்டிகளை அடித்துடைத்தார்கள். அங்கு வரைந்து கிழித்தெறிந்த படங்களும், மரக் குற்றிகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சிலவும் இருந்தன. மார்புக் கச்சை போடப்பட்ட அழகான பெண் சிலை ஒன்று இருந்தது.

அது களிமண்ணாலான கலை மிளிரும் படையல். அந்தச் சிலையும் மார்புக் கச்சையும் வர்ணச் சாயம் பூசப்பட்டு கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தது. அதைக் கையில் எடுத்து, “ஆஹா! இவன் சிறந்த ஓவியனாக உருவாகும் அறிகுறி இது. என்று மெய்தீன் அடிமையின் இயல்பூக்கத்தை பாராட்டினார் அஸார் ஆசிரியர்.

Comments