ஆஸி. அணிக்கு கடும் சவால்! | தினகரன் வாரமஞ்சரி

ஆஸி. அணிக்கு கடும் சவால்!

தொடர்ந்து தொடர் வெற்றிகளை சுவைத்து வரும் அவுஸ்திரேலிய, இந்திய அணிகள் கடினமான ஒரு டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. அவுஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டுவெண்டி/20 தொடர்களில் பங்குகொள்ள இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலுள்ள கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணியும் அவுஸ்திரேலிய அணியும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டுவெண்டி/20 தொடர்களில் விளையாடவுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி புனேயில் ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டியுடன் இத் தொடர் ஆரம்பமாகிறது.

அண்மைக்காலமாக இந்திய அணி தொடர்ந்து தன் சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணிகளான தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சகலதுறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு இலகுவாக வெற்றி பெற்றது.

இத் தொடர் வெற்றிகளுக்கு தலைவர் கோஹ்லி உட்பட இந்திய அணியின் அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வந்துள்ளனர்.

அவ்வணியின் அனுபவீரர்கள் மட்டுமல்ல அண்மைக்காலமாக அறிமுகமான இளம் வீரர்கள் கூட சதம், இரட்டைச் சதம், முச்சதம் என்று தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்பட்டு வருகின்றனர். இந்திய அணி கடந்த காலங்களில் தாம் விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்சில் ஓரிரு துடுப்பாட்ட வீரர்கள் சதம் அல்லது இரட்டை சதங்கள் குவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் அவ் அணி முதல் இன்னிங்சில் இலகுவாக 500, 600 ஓட்டங்களை பெற்றுள்ளமை அவ்வணியின் தொடர் வெற்றிகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது. மேலும் பின்வரிசையில் வரும் சுழற்பந்து விச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து வருகின்றனர். நட்சத்திர சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மைக்காலமாக துடுப்பாட்டத்திலும் பிரகாசித்துவருவது இந்திய அணிக்கு கூடுதல் அணுகூலமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் அநேக வெற்றிகளுக்கு சுழற் பந்து வீச்சாளர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர். ஹிர்வானி, அரஷாத் ஐயூப், சவ்ஹான், கும்ள்ளே, ஹர்பஜன் சிங், ஓஜா, அமீத் மிர்ஸா, கடந்த காலங்களில் இந்திய வெற்றிகளுக்கு உரமூட்டினர். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் கலக்கி வருகின்றனர.

சென்றவருடம் முழுவதும் பிரகாசித்த அஸ்வின் 12 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்ற வருட பருவ காலத்தில் கூடுதலான விக்கெட்டுகளை வீழத்தியவராகத் திகழ்ந்தார். அத்திறமைகளின் காரணமாக சர்வதேச டெஸ்ட் பந்து விச்சாளர்கள் தர வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி தொடர்ந்தும் முதலிடத்திலேயே உள்ளார். மேலும் அவர் கடந்த வாரம் பங்களாதேஷ் தொடரின் போது மற்றுமொரு சாதனையப் புரிந்துள்ளார். அதாவது குறைந்த போடடிகளில் 250 (45 போட்டி) விக்கெட்டுகளை வீழ்த்தி இதுவரை டெனிஸ் லிலி (48 போட்டி) வசமிருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

சுழற் பந்துவீச்சில் அவருக்கு ஜடேஜாவும், ஜாதவ்வும் சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். வேகப்பந்து வீச்சிலும் உமேஸ் யாதவ், புவனேஸர் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோரும் அவ்வப்போது சிறப்பாகப் பந்துவீசி வருவதால் அவுஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் பங்களாதேஷ் அணியுடனான வெற்றியுடன் இந்திய அணி விராட் கோஹ்லியின் தலைமையில் தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிளைவ் லொயிட்டின் தலைமையில் 1982-, 1984 களில் தொடர்ச்சியாக 26 போட்டிகளில் வெற்றிபெற்றதே சாதனையாகப் பதிவாகியுள்ளது, இவ்வரிசையில் இரண்டாவது இடத்தில் 2005-, 2007 காலப் பகுதியில் அவுஸ்திரேலிய அணி வீரர் ரிக்கிப்பொன்டின் தலைமையில் 22 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளதே பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்திவரையில் அண்மையில் பாகிஸ்தானுடனான தொடரில் தன் சொந்த மண்ணில் சிறப்பாகச் செயற்பட்டு தொடரை வென்றிருந்தாலும், அதற்கு முன்னைய தொடரை தென்னாபிரிகாவிடம் இழந்திருந்தது. ஆசிய மைதானங்களைப் பொறுத்து வரையில் அவுஸ்திரேலிய அணிக்கு சிறந்த பெறுபேறு இல்லை.

கடைசியாக அவ்வணி இலங்கை மண்ணில் விளையாடிய மூன்று டெஸ்ட போட்டிகளிலும் தோல்வியுற்று பல விமர்சனங்களுக்கும் உள்ளானது. அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் ஆசிய உப கண்ட மைதானங்களில் அவ்வணி தோல்விகளையே சந்தித்துள்ளது. அவ்வணி இந்திய மண்ணில் கடைசியாக 2004ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் வெற்றியைக் கூடப் பெற்றதில்லை.

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணி இம்முறை நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உத்தேசித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே சிறப்பாக முகம் கொடுக்கக் கூடியவர். எனவே அவுஸ்திரேலிய நிர்வாகம் ஆசிய நாடுகளின் முன்னாள் சுழற் பந்து ஜாம்பவான்களிடம் ஆலோசனைகளையும், நுட்பங்களையும் பெற்று இத்தொடருக்கு தங்கள் அணியைத் தயார் செய்து வருகின்றனர்.

தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே டுபாய் ஆடுகளங்களில் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியும் அளித்து இந்தியாவுடனான தொடரில் சாதிக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் முயற்சித்து வருகிறது.

மேலும் பல முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும் இந்திய மண்ணில் அவுஸ்திரேலிய அணி படுதோல்வியடையும் என்ற கருத்துகளையே பெரும்பாலும் கூறி வருகின்றனர். எனவே, இக் கருத்துக்களை அவதானித்து இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை இலகுவாக மதிப்பிடுவார்களேயானால் சிலவேளைகளில் அதுவே அவர்களின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையலாம்.

ஏனெனில் போட்டிகளில் எதிர்வு கூறலுக்கு மாற்றமாக நடைபெற்ற சந்தர்ப்பங்களும் நிறையவுண்டு. எது எப்படியோ இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என்பது

திண்ணம். 

Comments