கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம் 2017ஆம் ஆண்டு சம்பியன் | தினகரன் வாரமஞ்சரி

கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம் 2017ஆம் ஆண்டு சம்பியன்

வாச்சிக்குடா விஷேட நிருபர்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியனானது. அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலேயே அக்கரைப்பற்று பவர் விளையாட்டுக்கழகத்தை தோல்வியடைய செய்து காந்தி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான விளையாட்டு மற்றும் உடல் மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் 8 கழகங்கள் காலை முதல் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றன.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட காந்தி அணியும் பவர் அணியும் மோதிக்கொண்டன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற காந்தி விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 5ஓவர்கள் நிறைவில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பி..தரணியின் அதிரடி ஆட்டத்தால் 56 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பவர் விளையாட்டுக்கழகம் 4.1 ஓவர் நிறைவினில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. இப்போட்டியின் 26 ஓட்டத்தினையும் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிய காந்தி விளையாட்டுக்கழகத்தின் வீரர் பி.தரணிதரன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து பிரதேச செயலக வேரியர்ஸ் மற்றும் லயன்ஸ் என பிரிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வேரியர்ஸ் அணி வெற்றி பெற்றமை சிறப்பம்சமாகும். 

 

Comments