சர்வஜன வாக்கெடுப்புக்கு | தினகரன் வாரமஞ்சரி

சர்வஜன வாக்கெடுப்புக்கு

நல்லாட்சி அரசாங்கம் என்பது  சகலவற்றையும் சகித்துக்  கொண்டிருப்பதாக அர்த்தமில்லை

கேள்வி: அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் உங்களின் பங்களிப்பு கணிசமாகக் காணப்படுகிறது. அரசியலமைப்பு தயாரிப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன?

பதில்: 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு நான் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருபவன். இந்த நிலைப்பாட்டில் மாறாமல் இருக்கின்றேன். நாம் இடதுசாரி தலைவர்களுடன் இணைந்து 78ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினோம். இடதுசாரி தலைவர்களான கொல்வின்.ஆர்.டி.சில்வா, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன உள்ளிட்ட தலைவர்களுடன் ஹைட்பார்க்கில் போராட்டங்களை நடத்தியிருந்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எவரும் அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உண்மையில் இதற்கான முயற்சி எடுத்திருந்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை. நான் ஐ.தே.கவில் இருக்கும்போது முதன்முறையாக நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஹம்பாந்தோட்டை தேசிய மாநாட்டில் முன்வைத்தேன். அது நிறைவேற்றப்பட்டதுடன், ஐ.தே.கவின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சகலரும் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தேவை என ஏற்றுக் கொண்ட எந்தவொரு கட்சியும் இல்லை. தேசிய அரசாங்கத்தை அமைத்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட, மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற்று புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன புதிய அரசியலமைப்புக்கு இணக்கத்தைத் தெரிவித்துள்ளன. எனினும், மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் இதிலிருந்து விலகியிருப்பதுடன், சிலர் இம்முயற்சிகளைக் குழப்புவதற்கு திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

என்னை அழைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசியலமைப்புத் தொடர்பான தேசிய இயக்கத்துக்கு தலைமைத்துவம் கொடுக்க நான் பொருத்தமான நபர் எனக் கூறியதுடன், இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதியும் கலந்துரையாடியிருப்பதுடன், அரசியலமைப்பு குறித்து உண்மையான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமில்லாதவாறு எவ்வாறு இதனைச் செய்வது என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

கேள்வி: 2015 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு என்ற விடயம் இடம்பெற்றிருந்ததா?

பதில்: ஜனவரி 8 ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும்போது ஹெல உறுமயவின் நிபந்தனையொன்று இருந்தது. அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி பேசவேண்டியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் அரசியலமைப்பு திருத்தம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தோம்.

அதில் புதிய அரசியலமைப்பு என்ற விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் போட்டியிட்ட சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனவே, இதுபற்றி கருத்துவேறுபாடுகள் இல்லை. இதனை நிறைவேற்ற வேண்டும். சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் பயப்படத் தேவையில்லை. அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகள், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி போன்றன சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக அரசியலமைப்பு தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. சகல அரசியல் கட்சிகள் ஒரு பக்கத்திலும், மஹிந்த ராஜபக்ஷ குழு மறுபக்கத்திலும் இருக்கும் நிலையிலேயே சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டியுள்ளது. இதனால் இலகுவில் வெற்றிபெற முடியும்.

புதிய அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான மக்கள் ஆணை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே கிடைத்துள்ளது. எனவே, அவருடைய ஆட்சிக் காலத்தின் பின்னர் மாற்றங்களைச் செய்வதற்கே தீர்மானித்துள்ளோம். இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் சிறிய, சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் மற்றும் தேர்தல் முறை ஆகிய இரு விடயங்களே முக்கியம் பெற்றுள்ளன.

கேள்வி: அதிகாரப் பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: அரசியலமைப்பு தயாரிப்பின் ஊடாக எவ்வாறு நாடு பிளவுபடும்? வடக்கில் அன்றிருந்த அரசியல் கட்சிகள் பெயரில் கூட “பெடரல்" என்பதனைக் கொண்டிருந்தன. 1950களிலிருந்து அவர்கள் இந்நாட்டில் சமஷ்டி முறையொன்றையே கோரிவருகின்றனர். இப்படி கோரிவந்த அரசியல் கட்சி முதல் தடவையாக பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முன்வந்துள்ளனர். அவர்கள் அவ்வாறான மாற்றத்துக்கு வந்திருப்பது அல்லது அவ்வாறான மாற்றமொன்றை நோக்கி அவர்களை கொண்டு வந்திருப்பதே எமக்கு கிடைத்த வெற்றியாகும்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வது எப்படி நாட்டைப் பிளவுபடுத்துவதாக அமையும்? மஹிந்த ராஜபக்ஷவிடம் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு ஆய்வுகூட இல்லை. இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு அதனூடாக கருத்து வெளியிடும் நபரும் அல்ல. அவருடன் உள்ள கூட்டத்தில் எவருக்கும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் தெளிவு இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தின் ஊடாக, நாளை அவர்களுக்கு எதிராகவரக்கூடிய சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியே சிந்திக்கின்றனர். தமக்கு எதிரான மோசடிகள், கொலைக்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்டவற்றிலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்வது என்பதே அவர்களின் முக்கிய யோசனையாகும்.

புதிய அரசியலமைப்பின் முக்கிய விடயங்களில் பெளத்த மதத்துக்கான இடம் இல்லாமல் போகாது. அது மாத்திரமன்றி பிரிவினை தொடர்பில் மாகாண சபைகள் ஏதாவது கதைத்தால் அவற்றைக் கலைப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது. இவை குறித்து எதுவும் தெரியாமல் அவர்கள் சகலவற்றையும் எதிர்த்து வருகின்றனர். இந்தச் செயற்பாடுகளை யாராவது துரோகம் எனக் கூறுவார்களாயின், அப்படிக் கூறுபவர்களே துரோகிகளாகும்.

அரசியல் பகுத்தறிவார்கள் போலியான தேசபற்றாளர்கள் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். போலியான தேசப்பற்றாளர்கள் உடல் முழுவதும் நோய் கொண்டவர்கள். இது சாதாரண நோய் அல்ல. உடம்பு முழுவதும் பரவும் சின்னமுத்து போன்ற நோயைக் கொண்டவர்கள. மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினரும் இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கேள்வி: பிரதான தமிழ் கட்சியின் மாற்றம் முக்கியமானது என்கின்றீர்களா?

பதில்: நிச்சயமாக. பெரும்பாலான கட்சிகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருப்பதால் எது எமக்கு முக்கியமான காலமாகும். இவ்வருட இறுதியில் அரசாங்கத்தை அசைக்க முடியாத பலமான நிலைமை ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் பாரிய வெற்றிகளை ஈட்டமுடியும்.

கேள்வி: ஓகஸ்ட் மாதத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இல்லாமல் போய்விடுவார்கள் எனக் கூறியுள்ளீர்கள். என்ன அடிப்படையில் இதனைத் தெரிவித்தீர்கள்?

பதில்: எனது அரசியல் எதிர்வுகூறல்கள் நிறைவேறி வருவதை நீங்கள் அறிவீர்கள். அதுபோன்று இதுவும் இடம்பெறும். அதாவது ராஜபக்ஷக்கள் பணத்தை கொள்ளையிட்டமை, மோசடி செய்தமை, அவர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட சகலவற்றின் உண்மைகளையும் நாட்டு மக்கள் அறியக்கூடியதாகவிருக்கும். நாட்டு மக்களின் கண், காது குளிருமளவுக்கு உண்மைகள் வெளிவரும்.

கேள்வி: ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் நடத்தைகள் பற்றி உங்கள் கருத்து?

பதில்: பாராளுமன்றத்தை லிப்டன் சுற்றுவட்டம் என அவர்கள் நினைத்துள்ளனர். பாராளுமன்றத்தில் விடயத்தை சரியான முறையில், தர்க்கரீதியாக முன்வைத்து உரையாற்றக்கூடியவர்கள் எவரும் இல்லை. ஒரு சிலரைத் தவிர ஏனையவர்களுக்கு அரசியல் ரீதியான அனுபவம் இல்லாதவர்கள். மக்களின் பணத்தை வீண்விரயம் செய்த, மோசடி செய்தவர்களே பெரும்பாலானவர்களாகக் காணப்படுகின்றனர். மோசடிக் காரர்களின் குழுவே உள்ளது.

அவர்களுக்கு பாராளுமன்றமும் தேவையில்லை. எதுவும் தேவையில்லை. தமக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுபட்டு, இழந்த பலத்தை மீண்டும் பெற்று கடந்த காலத்தில் மேற்கொண்ட மோசடிகளைத் தொடர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அரசியல் தொடர்பில் பசில்.டி.சில்வா எழுதிய புத்தகத்தில் ஒரு எழுத்தைக்கூட வாசிக்காதவர்களே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். சிலர் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் பெற்றுக் கொள்வதற்கான கல்வித் தகுதியைக் கொண்டிராதவர்கள்.

கேள்வி: உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்?

பதில்: இது புதிய தேர்தல் முறையுடன் சம்பந்தப்பட்டது. வட்டார முறையைக் கொண்ட புதிய தேர்தல் முறையில் இத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் வட்டாரங்கள் உருவாக்கப்படவேண்டும். இது இலகுவான விடயமல்ல. இதனால்தான் இதற்கு காலம் எடுக்கிறது.

கேள்வி: உலகில் குறிப்பாக ஜேர்மன் போன்ற கலப்புமுறையிலான தேர்தல்முறை கைவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை கலப்பு முறையொன்றுக்குச் செல்வது பலனளிக்குமா?

பதில்: ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் கலப்புமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளின் அனுபவங்களையும் நாம் ஆராய்ந்துள்ளோம். எமது நாட்டுக்குப் பொருத்தமான முறையில் கலப்புத் தேர்தலுக்கான சூத்திரத்தைத் தயாரிக்க முடியும். அடிப்படையைப் பெற்றுக் கொண்டு எமது நாட்டுக்குப் பொருத்தமான முறையில் புதிய முறையொன்றை தயாரிக்க முடியும். சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளையும் கவனத்தில் கொண்டு புதிய தேர்தல் முறையை பற்றி ஆராய்ந்து வருகின்றோம். பாராளுமன்றம் மற்றும் அதற்கு வெளியே சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று புதிய முறையொன்றுக்குச் செல்வோம்.

கேள்வி: 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படுகின்றவா?

பதில்: ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட பின்னர் உடனடியாக அரசாங்கத்தை கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. அன்று அப்படிச் செய்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு அண்மித்த பலத்தைப் பெற்றிருக்கும். அப்படியான சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ குழுவைச் சேர்ந்த 20 பேர் ஐ.தே.கவுடன் இணைந்து பலமான ஐ.தே.க ஆட்சி அமைந்திருக்கும்.

ஆனால் நாம் கொள்கையொன்றைக் கொண்டிருந்தோம். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என குறிப்பாக மறைந்த சோபித்த தேரர் தலைமையிலான சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தின. அதற்கமையவே செயற்பட்டோம்.

அது மட்டுமன்றி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது என்பதே பிரதமரின் நோக்கமாக இருந்தது. அன்று எடுத்த நியானமான தீர்மானம் காரணமாகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும், மாகாண சபைகளைச் சேர்ந்தவர்களும் தற்பொழுது குரல் எழுப்ப முடிந்துள்ளது. அது மாத்திரமன்றி மாகாண சபைகளிலும் ஐ.தே.க ஆட்சியைப் பிடித்திருக்கும்.

இருந்தபோதும் ஐ.தே.க உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருக்கும் நிலைமையே காணப்படுகிறது. எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் கபினட் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுள்ளனர். ஆளும் கட்சி பிரதியமைச்சர்கள் எம்பிக்களாகியுள்ளனர். எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக இருக்கின்றனர்.

கேள்வி: டெங்கு நோய் பரவுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமை பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி உங்கள் நிலைப்பாடு

பதில்: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்தான் இதற்கு முழுமையான காரணம் எனக் கூற முடியாது. உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் காலப் பகுதியிலேயே டெங்கு நோய் பரவ ஆரம்பித்தது. எனினும், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் இருந்தால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அது மேலும் பலம் சேர்க்கும். கழிவு அகற்றல்களில் காணப்படும் குறைபாடுகள் சிலவும் டெங்கு தொற்றுக்கு காரணமாகின்றன.

கேள்வி: சைற்றம் விவகாரம் பற்றிய உங்கள் கருத்து

பதில்: சைற்றம் விவகாரத்தில் வைத்தியர்கள், அமைப்புக்கள் என்பனவற்றால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு இருக்கவில்லை. இருந்தாலும் சைற்றத்தின் கல்வித் தரம் பற்றியே அவர்கள் கவலை வெளியிடுகின்றனர். எனினும், மாணவர்கள் மற்றும் சோசலிச கட்சிபோன்ற சிலர் தனியார் மருத்துவ கல்லூரிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் வெற்றிபெற்றதும், எதிர்வரும் காலங்களில் ஏனைய துறைகளில் காணப்படும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராகப் போராடப்போவதாக அவர்கள் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் கூறியுள்ளனர். அதன் பின்னர் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் வடகொரிய ஆட்சி யுகத்துக்குப் போவதற்கே விரும்புகின்றனர். ஆனால் வடகொரியா மக்களின் எதிர்பார்ப்பு கிங்ம் யொங்கின் ஆட்சியிலிருந்து வெளிச்செல்ல வேண்டும் என்பதாகும்.

சைற்றத்தின் தரம் பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எந்தவொரு துறையை எடுத்துக் கொண்டாலும் தரம் என்பது முக்கியமானது. எனவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அங்கு பட்டம் பெற்றவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கி தரத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

எனினும், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாகச் செயற்படும் சில சக்திகள் குறிப்பாக வைத்திய சங்கம் மற்றும் தாதியர் சங்கம் என்பன அவருக்கு ஏற்ற வகையில் செயற்படுகின்றன.

கேள்வி: அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மக்களின் அன்றாட செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் காணப்படுகின்றன. இதுபற்றி...

பதில்: நிச்சயமாக மக்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. நாளாந்தம் வீதியில் நடத்தப்படும் போராட்டங்களால் வாகன நெருக்கடி அதிகம் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் பொல்லுக்களுடன்வந்து பொலிஸாரை தாக்க முயற்சித்தனர். எனினும், பொலிஸார் குறைந்த பலத்தைப் பயன்படுத்தி அவர்களின் முயற்சிகளை முறியடித்ததுடன், சட்டத்தை நிலைநாட்டியிருந்தார்கள். இதற்காக பொலிஸாருக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

உண்மையில் அடிப்படைவாதம் கொண்ட மாணவத் தலைவர்கள் அப்பாவி மாணவர்களை பலவந்தமாக வீதிக்கு அழைத்து வருகின்றனர். பேராதனை பகிடிவதையில் தெரியவருவது என்னவெனில், அவர்களுக்கு அடங்காத மாணவர்களையே மோசமான பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இது வெளியே தெரியவந்த ஒரு சம்பவம் மாத்திரமே. வெளிவராத சம்பவங்கள் பல உள்ளன. இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கம் நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்டதே தவிர, சகலவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல. நல்லாட்சி அரசாங்கம் என்பது சகலவற்றையும் சகித்துக் கொண்டிருப்பதாக அர்த்தமில்லை.

அடிப்படைவாதிகள் மற்றும் பாதாள உலகத்தை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: இது எமக்கு கிடைத்த வரவேற்பாகும். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சியிருந்திருந்தால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதமே இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.

எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டுவரை மேலும் இரு வருடங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை வெற்றியாகவே கருத முடியும். 

 

Comments