ஒரு தாயின் பரிதவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஒரு தாயின் பரிதவிப்பு

என். கே. வேணி, 
பலாங்கொடை

பெத்த மனம் பித்து

பிள்ளை மனம் கல்லு

பள்ளியிலே

படித்த பழமொழி

மீண்டும்

நினைவில் வருகிறது

அதில் பொதிந்துள்ள

அர்த்தம்

முழுதாய்ப் புரிந்து

வேதனைத் தீயாய்

வாட்டியெடுக்கிறது

இரவும் பகலும்

விம்மியழுதும்

வழியில்லை எனக்கு

பத்து மாதம்

சுமந்து பத்தியம்

பல இருந்து

வலி தாங்கி

பெற்றெடுத்து

பாலூட்டி தாலாட்டி

சீராட்டி பாசமுடன்

வளர்த்த மகள்

என்னை ஒதுக்கி

ஓரம் கட்டி

அவமானப் படுத்துகிறாள்!

அம்மா அம்மா

என்று அன்புடன்

அழைத்து பாசமுடன்

என்னில் பவனி

வந்தவள் இன்று

பகையான பரிதாப

நிலையை கன்னங்களில்

வழியும் கண்ணீரே

அறியும்!

பள்ளி அனுப்பி

பாடம் கற்பித்து

பகல் இரவாய்

கண் விழித்து

பல்கலைக்கழகம்

அனுப்பி

படிக்க வைத்தேன்!

சட்டம் கற்று

பல பட்டங்கள்

பெற்றும்

பண்பினை

மறந்தாளே

பாவி மகள்!

சொந்தக் காலில்

நிற்கும் தகுதி

வந்தவுடன்

என் காலின்

தூசு நீ

என்று எடுத்தெறிகிறாள்!

ஊருக்கே நீதி

சொல்லும் அவள்

பெற்றதாயை

தவிக்க விட்டு

விட்டாளே

நியாயமாக நடந்து

நீதி காக்காமல்

முப்பது வருடம்

வளர்ந்த தாயை

விட மூன்று

வருடம் பழகிய

அவனே மேல்

என்று நான்

காலில் வழுந்து

கதறி அழ அடி

கண்டு கொள்ளாமல்

கல் நெஞ்சுடன்

அவனுடன்

இணைந்து விட்டாள்

மாறாத சோகத்தில்

தாயைத் தள்ளி

விட்டு.

பிள்ளையை

மனப்பூர்வமாய்

நம்பி பாசத்தில்

தோற்ற பாவி

நான்

பைத்தியக்காரி போல்

பரிதவித்து

நிற்கிறேன்! 

Comments