இந்த வருடத்திற்குள் தீர்வின்றேல் இலங்கை தோல்வி கண்ட நாடு | தினகரன் வாரமஞ்சரி

இந்த வருடத்திற்குள் தீர்வின்றேல் இலங்கை தோல்வி கண்ட நாடு

வாசுகி சிவகுமார்

அரசாங்கம் இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வொன்றினை நோக்கிச் செல்லாவிட்டால் தோல்வியுற்ற ஓர் அரசென்ற கணிப்பிற்கு உள்ளாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார். என்றாலும் யாரால் இந்தக் கணிப்பீடு மேற்கொள்ளப்படும் என்ற விளக்கத்தை அவர் தனது பேட்டியில் குறிப்பிடவில்லை.
இந்த காலத்திலும் அது உருப்பெறா விட்டால் பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமஷ்டி பற்றிய எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அவர், சமஷ்டி என்பது இரண்டேயிரண்டு முக்கியமான குணாதிசயங்களைக் கொண்டது. ஒன்று ஒரு குறித்த விடயத்தின் மீதான அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்பட்டால், மத்திய அரசு அதில் தலையிடக்கூடாது.
இரண்டாவது கொடுக்கப்பட்ட அதிகாரம் மாகாணத்தின் அனுமதியின்றி மீளப்பெறப்படக்கூடாது. இவையிரண்டுமே முக்கியமானவை. வெறுமனே சமஷ்டியென்ற வார்த்தைப் பிரயோகத்தில் எந்த அர்த்தமும் இல்லை.

சமஷ்டிமுறை அமுலில் இருப்பதாகக் கூறப்படும் பல நாடுகளில் உண்மையில் நடப்பது ஒற்றையாட்சி. ஒற்றையாட்சிமுறை இருப்பதாகச் சொல்லப்படும் நாடுகளில் நடைபெறுவது சமஷ்டிமுறையிலான ஆட்சி என்றார்.
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கேட்டபோது, "அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி முன்னர் சொன்னார். ஆனால் இம்முறையும் அதே தீர்மானத்துக்கு இணங்கி, இலங்கை கைச்சாத்திட்ட அதேநாளில், ஒருபடி மேலே சென்று இலங்கையின் எந்தவொரு படைவீரனுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யத் தானே அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கின்றார். உள்நாட்டு நீதிமன்றில் கூட ஓர் இராணுவ வீரனுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், அதனை தடுப்பதற்கான முதுகெலும்பு கொண்டவர் தான் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
இராணுவத் தளபதியாகவிருந்த ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே வெளிநாட்டு நீதிபதிகள் வந்தாலும் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார் எனத் தெரிவித்து வருகின்றார். என்னைப் பொறுத்தவரை அதுதான் முதுகெலும்புள்ள ஒருவரின் கூற்றாக இருக்க முடியும்" என விளக்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா என எழுப்பப்ட்ட கேள்விக்குப் பதில் அளித்த சுமந்திரன், "ஒரு சதவீதத்தினை மாத்திரமே பூர்த்தி செய்திருப்பதால்தான் 18 மாத காலத்தில் வெளியிடப்படும் அறிக்கை கடும் நிபந்தனைகளுடன் வெளிவந்திருக்கின்றது.

அந்த அறிக்கையும் தான் செய்வதாக இலங்கை ஒப்புக்கொண்ட விடயங்களில் இன்னமும் கூடுதலான பங்கினை நிறைவேற்றியிருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளது இலங்கை ஒப்புக்கொண்ட விடயங்களில் ஒன்றையேனும் பூரணமாக நிறைவேற்றவில்லை. தான் ஏற்றுக்கொண்டபடி அவற்றை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை" என்று சொன்னார்.
குற்றவியல் நீதிமன்றம் இலங்கையில் சாத்தியப்படுமா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் "சர்வதேச பாகாப்புக்கும் சமாதானத்துக்கும் குறித்த நாடு அச்சுறுத்தலாய் அமையும் பட்சத்தில் மாத்திரமே அந்நாடு குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும். சர்தேச நீதிமன்றத்திடம் அந்நாட்டினை பாரப்படுத்தக்கோரும் சந்தர்ப்பத்தில் அந்நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
அது சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கவும் வேண்டும். வடகொரியா ஜப்பானின் எல்லைக்கு சமீபமாக அதன் அணுவாயுதத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. சிரியப் பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கே கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது.
அது மாத்திரமல்ல நீதிமன்றமென்பது வெறும் தண்டனைப் பொறிமுறை மட்டும்தான். ஒரு சிலர் வேண்டுமானால் தண்டிக்கப்படலாம்.அதற்காக மக்களின் முக்கிய பிரச்சினைகளைக் கைவிட்டுவிடுவது எந்தவிதத்தில் நியாயமானது?
 

Comments