பன்னங்கண்டி கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுடன் முடிவு | தினகரன் வாரமஞ்சரி

பன்னங்கண்டி கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுடன் முடிவு

பரந்தன் குறூப் நிருபர்

தமக்கான காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக்கோரி கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பன்னங்கண்டி காணி உரிமையாளர் காணியை அம் மக்களுக்கே வழங்குவதற்கு முழுமையான சம்மதம் தெரிவித்திருந்த்தையடுத்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிராமசேவகர் மற்றும் மதகுரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கான காணி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் பயிரிச்செய்கைக்கென தனி ஒருவருக்கு வழங்கப்பட்ட காணியில், காணி உரிமையாளர் இல்லாத நிலையில் கடந்த யுத்த காலத்தில் பாதிப்புக்களை எதிர் கொண்ட மக்கள் குடியேறி மிக நீண்டகாலமாக வசித்து வந்தனர்.

தாம் வசித்து வரும் காணிகளுக்கு காணிக்குரிய ஆவணங்களையும், வீட்டுத்திட்டங்களையும் பெற்றுத்தருமாறு கோரி கடந்த 15 நாட்களாக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காணி, தனியாருக்குச் சொந்தமாக இருந்த காரணத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எதனையும், எடுக்க முடியாது எனவும், காணி உரிமையாளரே மனமுவர்ந்து காணிகளை நன்கொடையாக வழங்கும் பட்சத்தில், வீட்டுத்திட்டம் உட்பட ஏனைய உதவிகளை வழங்க முடியுமென மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காணி உரிமையாளருடன் மாவட்ட அரசாங்க அதிபர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் மதகுரு ஆகியோர் கலந்துரையாடியதையடுத்து, காணியை அம் மக்களுக்கே வழங்குவதற்கு காணி உரிமையாளர் முழுமையான சம்மதம் தெரிவித்திருந்தார். இக் காணியில் உருவாக்கவுள்ள குடியிருப்புக்கு யோகர் சுவாமியின் பெயரை சூட்டுமாறும் காணி உரிமையாளர் கேட்டுள்ளார்.

இதைனை மக்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

Comments