இந்தோனேசியாவில் மகத்தான வரவேற்பு | தினகரன் வாரமஞ்சரி

இந்தோனேசியாவில் மகத்தான வரவேற்பு

இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பேண்தகு, சமாந்தரமான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இயங்கிவரும் இந்து சமுத்திர பிராந்திய அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவின் அரச தலைவர்கள் மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடடோ அவர்களது அழைப்பின் பேரில் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

21 இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கைகளில் அரச தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.

மாநாட்டின் போது ஜனாதிபதி, தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா, அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஷீனா, இந்திய உப ஜனாதிபதி மொஹமட் ஹமீட் அன்சாரி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

குறிப்பிட்ட நாடுகளுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் விஷேட கவனம் செலுத்தினார். புதிய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக முன்னோக்கி பயணித்து இலங்கையுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக அந்த அரச தலைவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.

40 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவரின் இந்தோனேசிய விஜயத்துக்கான அழைப்பை குறிக்கும் முகமாக இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமான மர்டேகா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இந்தோனேசிய ஜனாதிபதி உற்சாகமாக நட்புறவுடன் வரவேற்றார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துமென இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறையை பலப்படுத்துவதற்காக புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்தல், விவசாயத்துறை அபிவிருத்திக்காக தொழில்நுட்ப அறிவை பரிமாற்றுதல், பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கூட்டாக செயற்படுதல் தொடர்பில் அரச தலைவர்கள் கலந்துரையாடினார்கள்.

அத்துடன், இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிவிவகார அமைச்சர்கள் ஊடாக அதற்கான பின்னணியை ஆராய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் மீன்பிடி த்துறை ஒத்துழைப்பு மற்றும் பாரம்பரிய கைத்தொழில் துறை ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அரச தலைவர்கள் சந்திப்பின் பின்னர் கைச்சாத்திடப்பட்டது.

தாய்நாட்டுக்கு பொருளாதார, வர்த்தக வாய்ப்புகள் பலவற்றை பெற்றுக்கொண்டு தனது இந்தோனேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பினார்.

இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான மர்டேகா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இந்தோனேசிய ஜனாதிபதி மிகவும் சினேகபூர்வமான முறையில் வரவேற்றார்.

இலங்கையின் ஜனாதிபதியை வரவேற்பதற்கான வைபவம் மர்டேகா மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், 21 மரியாதை வேட்டுக்களுடனான இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரவேற்கப்பட்டார். 

 

Comments