காமன் எரிந்த காலைப் பொழுதில் காலமான கூத்துக் கலைஞர் சாம்பம் | தினகரன் வாரமஞ்சரி

காமன் எரிந்த காலைப் பொழுதில் காலமான கூத்துக் கலைஞர் சாம்பம்

விசு கருணாநிதி 

"ஆளுக்ெகாரு தேதி வைச்சு

ஆண்டவன் அழைப்பான்//

அப்போ

யார் அழுதால் அவனுக்ெகன்ன

காரியம் முடிப்பான்//

 

"என்னைத் தெரியுமா? நான்

சிரித்துப் பழகி

கருத்தைக் கவரும் ரசிகன்

என்னைத் தெரியுமா?

நான் கவலை மறக்க

கவிதை பாடும்

கலைஞன் என்னைத் தெரியுமா?

நல்ல ரசிகன் உங்கள் ரசிகன்..."

ஹட்டன் பகுதி மரண வீடுகளில் இரவு வேளையில் இந்தப் பாடல் இரண்டும் முக்கியமாக ஒலிக்கும் என்கிறார் ஊடகவியலாளர் இராஜமுரளி.

கூத்துக் கலைஞர் சாம்பசிவமூர்த்தி செல்லும் எல்லா மரண வீடுகளிலும் நிச்சயம் இந்தப் பாடலை அவர் பாடுவார். ஏ.எம்.ராஜாவின் குரலையொத்தது மூர்த்தியின் குரல். அதனால், அவருக்கு ராஜா என்ற ஒரு பெயரும் உண்டு. செம்மொழி மாநாட்டுக்கு காமன் கூத்துக் கலையைக் கொண்டு சென்று மலையகத்திற்கும் தமிழ்க் கலைக்கும் பெருமை சேர்த்தவர் இவர். ஆசிரியர், கலைஞர், பாடகர் எனத் தம் திறமைகளை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, மாணாக்கருக்கும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அள்ளிப் பருக்குபவர். பரீட்சையா? அட விட்டுத்தள்ளப்பா! அலட்டிக்காதே! என்று அறிவுரை கூறித் தட்டிக்ெகாடுப்பவர். ஹட்டன் பிரதேசத்தில் கல்விச் சமூகத்தினர் மனங்களில் நிரந்தரமாய் இடம்பிடித்துக்ெகாண்டவர், என்கிறார் முரளி.

என்றாலும் சாம்பசிவமூர்த்திக்கும் ஒரு திகதியை வைத்து அழைத்திருக்கிறான் காலன்.

மார்ச் 12ஆம் திகதி. நேரம் அதிகாலை 2.30. வாய் பேச முடியாத அளவிற்கு நோய்வாய்பட்டிருக்கும் அவர், வீட்டாரிடம் ஏதோ சைகையில் கூறுகிறார். ஒருவருக்கும் புரியவில்லை. சிறிது குழப்பத்திற்கு மத்தியில், அவர் தன்னை சுவாமி அறைக்குக் கொண்டு செல்லுமாறு கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். கொண்டு செல்லப்படுகிறார். அங்கே சுவாமி படங்களைப் பார்த்தவாறு நிமிர்ந்து படுக்கிறார்.

நேரம் சரியாக அதிகாலை 3.16. மலையகப் பகுதிகளில் காமன் கூத்துப் பண்டிகையின் இறுதிக்கட்டம். மன்மதனைத் தன் நெற்றிக்கண்ணால் சிவபெருமான் சுட்டெரிக்கிறார். காமன் திடல் பற்றி எரிகிறது.

இங்கே சாம்பசிவமூர்த்தியின் ஜீவனும் பிரிகிறது. நம்ப முடிகிறதா?! நம்பித்தான் ஆகவேண்டும். ஊரவர்களுக்கு விடிந்ததுமே விடயம் தெரியும். இதனைத்தான் விதி என்பார்களோ! உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

காமன் கூத்துக்கலைக்ெகனத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தவர் நடேசன் சாம்பசிவமூர்த்தி. கூத்து அவரின் உயிர்மூச்சு. சுமார் ஆறு மாத காலம் நோய்வாய்ப்பட்டுக் கண்டி வைத்தியசாலைக்கும் வீட்டுக்கும் என மாறிமாறிச் சென்று வந்தவர். காமன் பாடல்களை மாத்திரமல்ல, சினிமா தத்துவப் பாடல்களை அச்சொட்டாகப் பாடும் திறன்கொண்டவர். அவருக்கு வாய்ப்புற்று நோய் வந்திருக்க வேண்டுமா?

அவரின் மரண செய்தியைக் கேள்விப்பட்டவர்களின் ஒரே கேள்வியாக இருந்தது இதுதான் என்று வியந்துபோகிறார் முரளி.

1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாலாம் திகதி பிறந்த சாம்பசிவமூர்த்தி, இவ்வருடம் பிறந்த நாளைக்கு வைத்தியசாலையில் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் டங்கன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர், பின்னர் பிரதி அதிபர். அங்கிருந்து ஷெனன் பாடசாலக்குப் பிரதி அதிபராகச் சென்று, அங்கிருந்து வட்டவளைக்கு ஆசிரியராகப் பொறுப்பெடுத்திருந்த வேளையில்தான் புற்று நோய் அவரைப் பற்றுகிறது. சுமார் ஆறு மாதகால போராட்டத்தின் பின்னரே காலனிடம் தோற்றுப்போயிருக்கிறார்.

மனைவி லோகேஸ்வரி ஹட்டன் கொன்வன்ற் ஆசிரியை. ஆண் ஒன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு கண்மணிகள். ஹட்டனை வசிப்பிடமாகக் கொண்டிருந்தாலும், தனக்கு ஏதாவது நடந்தால், தன் சொந்தக் கிராமமான நோர்வூட் சென் ஜோன் டிலறிக்கு (தென்மதுரை மேற்பிரிவு) கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரின் அன்புக் கட்டளை. அதனை நிறைவேற்றும் வகையில் தென்மதுரையிலேயே இறுதிக்கிரியைகள் நடந்தன.

இரங்கல் உரை நிகழ்த்தி நிறைவு செய்யவே மூன்று மணித்தியாலங்கள். ஒவ்வொருவரும் அமரர் சாம்பசிவமூர்த்தியின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள். தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு... என்ற பாடலும் அவருக்குப் பிடித்தமானது என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தனது இலக்கிய தாகத்தைத் தணிப்பதற்கெனத் தனியான சஞ்சிகை ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார் சாம்பசிவமூர்த்தி. பெயர் நிகர். ஆனால், அவருக்கு நிகராக இனி அந்தப் பகுதியில் யார் இருக்கிறார்கள் என்பது கல்வியாளர்களின் ஆதங்கம்.

சாம்பசிவமூர்த்தியின் இழப்பு கலைத்துறைக்கும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்திற்கும் நிகர் சஞ்சிகைக்கும் பேரிழப்பாகும் என்கிறார் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் இலக்கிய அரங்க பிரதம அமைப்பாளருமான அருணாசலம் லெட்சுமணன்.

பாடல் இயற்றுதல், இசையமைப்பு, வாத்திய கலைஞன் என்ற வகையிலும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்தவர். குறிப்பாகத் தமிழ்க் கூத்துக் கலைகளுள் முதன்மையானதான காமன் கூத்துக்கலையை நேசித்த ஒரு கலைஞனாக திகழ்ந்தவர்.

செம்மொழி மாநாட்டில் கலைஞர் ஹெலன் தலைமையில் ஒருவராக பங்கேற்றவர். காமன் கூத்தின் பிரதான பாத்திரமான மன்மதன் பாத்திரத்தை ஏற்று சிறப்பாக பங்காற்றியவர். தேசிய கலை விழாக்களிலும் கணிசமான பங்களிப்பை வழங்கியவர்.

கடந்த வருடம் பிரான்சில் இடம் பெற்ற உலகத்தமிழ் நாடக விழாவில் நிகர் சமூக கலை இலக்கிய அரங்க கலைஞர்களுள் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார். துரதிர்ஷ்ட வசமாக விசா அனுமதி மறுப்பின் காரணமாக அந்நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனது என்கிறார் லெட்சுமணன்.

மன்மதன் பாத்திரம் ஏற்றுக் காமன் கூத்துக் கலையை வாழ வைத்தவர், அந்த மன்மதன் எரிந்த நாளன்று அதே கணத்தில் தனது வாழ்க்ைகயையும் முடித்துக்ெகாண்டிருக்கிறார். 

Comments