கிண்ணியாவில் கிலியூட்டும் | தினகரன் வாரமஞ்சரி

கிண்ணியாவில் கிலியூட்டும்

எங்கும் அச்சம்,.. எங்கும் பீதி..முழு பிரதேசத்திலும் பதற்றம். அடுத்தது நானாக இருந்திடக் கூடாதென மூலைமுடுக்கெல்லாம் வேண்டுதல், பிரார்த்தனை. பார்ப்பவரின் முகங்களில் எல்லாம் மரண பயம் அப்படியே அப்பி இருக்கிறது. ஊரவர்களுக்கு ஊரினுள் பிரேவேசிப்பதற்கே அதீத அச்சம்..

இது தான் சுமார் 28 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவைக் கொண்ட கிண்ணியாவின் தற்போதைய நிலைமை. டெங்கு வைரஸ். காய்ச்சல் என்ற பெயரில் நுளம்புகள் தோற்றுவித்திருக்கும் கோரத் தாண்டவத்தின் வெளிப்பாடு.

இந்த தாண்டவத்தில் 13 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு 1300க்கும் மேற்பட்டவர்கள் சொற்ப காலத்திற்குள் வாட்டி வதைத்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தாண்டவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் பலர் வேறு இடங்களிலுள்ள நண்பர்களதும் உறவினர்களதும் வீடுகளுக்கும் கூட சென்றுள்ளனர்.

இதுவேளை கிண்ணியா பிரதேச வைத்தியசாலை டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. ஒரு படுக்கையில் இரண்டு மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் வைத்தியசாலையின் தரையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர் அதனால் தற்காலிக கட்டடமொன்றிலும் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையை ஆரம்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்கள் கூட மயங்கிவிழும் பேரவலம்!அந்தளவுக்கு கிண்ணியாவில் டெங்கின் நிலைமை தீவிரமாகக் காணப்படுகின்றது.

இதேநேரம் சந்தேகத்திற்கிடமான காய்ச்சலுடன் பெருமளவிலானோர் சிகிச்சை பெற வருகின்ற போதிலும் அவர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் டெங்கு தொடர்பான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலையை வைத்தியசாலை எதிர்கொண்டுள்ளது. இது இங்கிருந்து கிடைக்கும் அத்தகவல் அந்தளவுக்கு வசதிகள் கொண்ட வைத்தியசாலை அல்ல இது.. அதன் காரணத்தினால் நலன் விரும்பிகளின் உதவியோடு வேறு பிரதேச வைத்தியசாலைகளிலும் கிண்ணியா பிரதேசத்தவர்களின் இரத்த மாதிரிகள் டெங்கு தொடர்பில் பரீட்சிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பெரும் எடுப்பில் டெங்கு நோய் கிண்ணியாவில் தீவிரமடைந்திருப்பதால் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார துறை ஊழியர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புகை விசிறவும் டெங்கு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்பணர்வை ஏற்படுத்தவென அறிவூட்டவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையில் நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை ஒழித்து சுற்றாடலைச் சுத்தப்படுத்தி உலர்நிலையில் வைக்கும் நோக்கிலான சிரமதானப் பணிகளும் பல பிரதேசங்களில் இருந்தும் கிண்ணியாவுக்கு வந்துள்ள தொண்டர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

என்றாலும் “குறுகிய காலத்தில் இந்நோய் இவ்வாறு கோரத் தாண்டவமாடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை“ என்று குறிப்பிட்ட பிரதேச மருத்துவ நிபுணர், “இது 1934 – 35 இல் நுளம்புகளால் பரப்பப்படும் மற்றொரு நோயான மலேரியா நாட்டில் ஏற்படுத்திய பேரழிவை நினைவுக்கு கொண்டு வருகின்றது" என்று குறிப்பிட்டார்.

ஆம். அக்காலப்பகுதியில் சுமார் 85 ஆயிரம் பேரின் உயிர்கள் மலேரியாவினால் இந்நாட்டில் காவு கொள்ளப்பட்டன. சுமார் பத்து இலட்சம் பேர் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகினர். இது வரலாறு.. என்றாலும் அதன் பின்னர் அவ்வாறான பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு மலேரியாவுக்கு கிடைக்கவில்லை. அதற்கு மருத்துவ நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுடனும் சர்வதேசத்துடனும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன. அதனால் இப்போது இந்நாட்டில் மலேரியா முழுமையான கட்டுப்பாட்டை அடைந்துள்ளது. அதன் பயனாக மலேரியா அற்ற நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இருப்பினும் 1965 களில் இந்நாட்டுக்கு அதுவும் கொழும்பு மாவட்டத்தில் அறிமுகமான டெங்கு, சொற்ப காலத்திற்குள் முழு நாட்டிலும் வியாபித்தது இதன் விளைவாக இப்போது டெங்கு இல்லாத பிரதேசமே நாட்டில் இல்லை என்றளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இந்நோய் இந்நாட்டில் அறிமுகமானது முதல் இற்றை வரையும் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பறித்தெடுத்திருக்கின்றது. இன்னும் பல்லாயிரக்கண்கானோரை வாட்டி வதைத்திருக்கின்றது. தொடர்ந்தும் அதனையே செய்து வருகின்றது அது தொடர்ந்தும் உயிராபத்து மிக்கதாகவே இருக்கின்றது. அதுவும் சுமார் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் அதே நிலைதான் அதே அச்சுறுத்தல் தான் தொடர்கின்றது.

அந்த வகையில் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளும் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 45 வீதத்திற்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எஞ்சியவர்கள் முழு நாட்டையும் சேர்ந்தவர்களாவர். அவர்களில் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளனர்.

டெங்கு என்பது நுளம்புகளால் காவப்படும் ஒரு வைரஸ் நோய். ஆனால் இதனை ஒன்றில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இந்நோயை ஆரம்பத்திலேயே இனம் கண்டால் முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி இருந்தும் 13 பேர் கிண்ணியா பிரதேசத்தில் மாத்திரம் டெங்கினால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஏனெனில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் முன்னவதானமும் இன்மையே இதற்கு அடிப்படைக் காரணம். அதாவது டெங்கு நோயைக் காவிப் பரப்பும் நுளம்புகள் மழை நீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்கிக் காணப்படும் இடங்களில் தான் முட்டையிட்டு பல்கிப் பெருகும். அது இந்நுளம்பின் விஷேட பண்பாக உள்ளது. அதாவது கைவிடப்பட்டதும், அப்புறப்படுத்தப்பட்டதுமான கழிவுப் பொருட்கள், பொலித்தீன் உள்ளிட்ட சிலிசிலி பைகள், யோகட் கப்புகள், இளநீர் குரும்பைகள், குளிரூட்டி உள்ளிட்ட வீட்டு பாவனைப் பொருட்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அப்படியென்றால் கிண்ணியாவில் டெங்கு கோரத்தாண்டவமாடுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் காணப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தைச் சேர்ந்த மருத்துவ நிபணரொருவர் வழங்கிய தகவல்கள் உறுதிப்படுத்தக் கூடியனவாகவே உள்ளன.

“கிண்ணியாப் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு தேவையான சாதக சுற்றுச்சூழல் நிறையவே காணப்படுகின்றது. குறிப்பாக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள குழாய்க் கிணறுகள் கிண்ணியாப் பிரதேசத்தில் அதிகமுள்ளன. அவற்றில் டெங்கு நுளம்பு பெருகி இருந்தமை பல இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டன" என்று குறிப்பிட்ட அம்மருத்துவ நிபணர், சில தொண்டர் அமைப்புகள் இக்குழாய்க் கிணறுகளை இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளன. ஆனால் அவை உரிய தரத்தைக் கொண்டிராத்தன் விளைவாக இக்கிணறுகள் குறுகிய காலத்தில் செயலிழந்துள்ளன. அதனால் அவை டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம் கிண்ணியாப் பிரசேத்தின் வடிகாலமைப்பு நீர் வழிந்தோடக் கூடியவகையில் தரமானதாகக் காணப்படவில்லை. அதனால் வைத்தியசாலைக்கு முன்பாகக் காணப்படும் வடிகானில் கூட டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக குடம்பியியல் நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு இப்பிரதேச சுற்றுச்சூழல் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதையம் கூட அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

“சுத்தம் சுகம்“ தரும் என்பார்கள். அந்த சுத்தம் பேணப்படாததால் இப்போது கிண்ணியாவே கண்ணீர் வடிக்கின்றது. இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. பாடசாலைகளுக்கும், பிரத்தியேக வகுப்புகளுக்கும் மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் கிண்ணியா பிரதேசத்திலுள்ள 66 பாடசாலைகள் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டள்ளன.

என்றாலும் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கைக் கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகள் விரிவாகவும் பரந்தடிப்படையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தினமும் மாலை வேளையில் மழை பெய்யவும் செய்கின்றது. அது டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு மேலும் துணை புரியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த சூழலில் இப்பிரதேசம் அமைந்திருக்கும் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் 400 பேரும், திருமலை நகரில் சுமார் 380 பேரும் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் உடனடியாகவும் (தொடர் 21ஆம் பக்கம்)

Comments