பத்திகள் | தினகரன் வாரமஞ்சரி

பத்திகள்

ராமண்ணே

“வந்துட்டுது வந்துட்டுது இங்கயும் வந்துட்டுது. வரக் கூடாது எண்டு நினைச்சனாங்கள் ஆனா இங்கயும் வந்திட்டுது அண்ணே.”

“என்ன சின்னராசா வந்துட்டுது வந்துட்டுது என்று உலாத்துறாய் அப்படி என்ன வந்துட்டுது?”

“கூடாதது வந்துட்டுது, இங்கயும் வந்துட்டுது.”

“பொறு பொறு ஒரு இடத்தில நிண்டு சொல்லன். அப்படி என்னதான் கூடாதது வந்துட்டுது.?”

“வடமேல் மாகாணம் வட மத்திய மாகாணம் எண்டு அங்க இங்க எண்டு பரவி வட மாகாணத்துக்கும் வந்து போட்டுது.”

“என்ன எண்டு கெதியா சொல்லன்.”

“சிறுநீரக நோய்தான். இப்ப வட மாகாணத்துக்கும் வந்துட்டுது.”

“யாருக்கு வந்துட்டுது ”

“உவன் குணசீலன்ட மாமாவுக்கு சிறுநீரக நோய் வந்துட்டுது.. ஆஸ்பத்திரியில சோதின நடத்தி இண்டைக்குதான் சொன்னவையாம்.”

“இங்க பார் இப்ப நாட்டில உள்ள பெரிய பிரச்சினைகளில் ஒண்டுதான், இந்த சிறுநீரக நோய்ப் பிரச்சினை. நாட்டில உள்ள 14 மாவட்டங்களில வந்திட்டுது. அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, குருணாகல், புத்தளம், மொனராகலை, பதுளை, முல்லைதீவு, மன்னார், திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில 10 சதவீத மக்களுக்கு உந்த நோய் வந்து கிடக்குது. 18 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட ஆம்பிளயள் உதால பாதிக்கப்பட்டிருக்கினம் எண்டு பேப்பர்ல கிடக்குது.

“வட பகுதிக்கு வருமெண்டு நினைக்கேல்ல.. ஆனா இங்கேயும் வந்துட்டுது பாருங்கோ.”

“நாட்டில பல இடங்களில வறட்சி இன்னும் நீடிக்குதில்ல. உந்த வறட்சிதான் சிறுநீரக நோய் வேகமாக பரவுறதுக்கு உதவுது எண்டும் வைத்தியர்கள் சொல்லினம். ஒன்னு தெரியுமோ சின்னராசா”

“என்ன அண்ணே”

“நாட்டில ரெண்டு வகை சிறுநீரக நோயாளியள் இருக்கினம். ஒண்டு நகர்ப்புற சிறுநீரக நோயாளியள் மத்தவை விவசாய சிறுநீரக நோயாளியள். நகர்ப்புற சிறுநீரக நோயாளியள் கொழும்பு மாவட்டத்திலதான் அதிகமா இருக்கினம். அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரோல் ஆகியவற்றாலதான் இவையளுக்கு உந்த நோய் வந்திருக்குது. ஆனா சரியா மருந்து எடுத்தினமெண்டா உதை லேசா குணப்படுத்த முடியுமென்டும் சொல்லினம்.”

“அப்பிடியெண்டா அது வேற இது வேற என்ன”

“ஓம் சின்னராசா. வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம், அதோட இப்ப வடக்குக்கு வந்திருக்கிற சிறுநீரக நோய் விவசாய சிறுநீரக நோய் எண்டு சொல்லினம். உது எதால வருகுது எண்டு இன்னும் ஆராய்ச்சி செய்யினமாம். உந்த விவசாய சிறுநீரக நோயாளியள் 9 ஆயிரம் பேர் மட்டில நாட்டில இருக்கினம் இது வரை உந்த விவசாய சிறுநீரக நோயால 25 ஆயிரம் பேர் மோசம் போயிருக்கினம். 4500 பேர் வருஷா வருஷம் இந்த நோயால பாதிக்கப்பட்டிருக்கினமாம். ”

“விவசாயியள் தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்கினமென்ன?”

“பரவிய பிரதேசங்களில உள்ளவையில நிறைய பேர் உந்த விவசாய சிறுநீரக நோயால செத்திருக்கினம் எண்டு ஒரு விவசாயி சொல்லுறார். உதுக்கு காரணம் இரசாயன பசளையும் கிருமி நாசினியும்தான் எண்டும் அவர் சொன்னவர். எங்கட ஊரில கிருமிநாசினி மருந்து தெளிக்கிற 10 பேர் இருந்தினம். அவையள் அத்தன பேருக்கும் உந்த நோய் வந்த கஷ்டப்படுகினம் எண்டு அவர் சொன்னார். குடும்பத்தில பெரியவருக்கு உந்த சிறுநீரக நோய் வந்ததெண்டா அந்த முழு குடும்பத்துக்கும் சிரமந்தான். அவைய கவனிக்கவும் ஆளில்லை. அவயின்ட வயலைக் கவனிக்கவும் ஆளில்ல எல்லாமே பாழாப் போன கதைதானாம்.”

“விவசாயிகள் இல்லையெண்டா எங்களுக்கு சாப்பிட அரிசியுமெல்லோ இல்லாமற் போகும்.”

“அரசாங்கம் உந்த விவசாயிகள காப்பாற்ற நிறைய முயற்சி செய்யுதுதான். ஆனா உது லேசுப்பட்ட காரியம் இல்ல கண்டியோ.”

“உந்த விவசாய சிறு நீரக நோய் ஏற்படுறதுக்கு பிரதான காரணம் பூமியில உள்ள புளோரயிட் சேர்மானம்தான் எண்டு பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஒருவர் கூறினவர். உந்த புளோரயிட் சேர்மானம் அதிகமா உள்ள இடங்களில இருக்கிற வயல்களில வேலை செய்யிறவை நிறைய தண்ணீர் குடிக்கிறதில்லை.”

“அது ஏன் அண்ணே?”

“வறட்சிக் காலத்தில் உலர் வலயத்தில வேலை செய்யிறவைக்கு நிறைய ேவர்க்கும். அதால அவைக்கு நல்ல தாகமெடுக்கும். ஆனா சுத்தமான குடி நீர் கிடைக்கிறதில்லையெண்டு அவை சரியா தண்ணீர் குடிக்கிறதில்ல. குறைஞ்சது 4 லீட்டர் தண்ணி குடிக்க வேணும் ஆனா அவையள் ஒரு லீட்டர் தண்ணிதான் குடிப்பினம். தேவையான அளவு தண்ணி குடிக்காததால அவையளின்ட சிறு நீரகம் மோசமா பாதிக்கப்படுதெண்டு உந்தப் பேராசிரியர் சொன்னவராம்.

“தேவையான அளவு தண்ணி குடிக்காவிட்டாலும் பிரச்சினையென்ன”

“தண்ணி மட்டுமில்ல சாப்பாடும் உப்பிடித்தான். குறைஞ்சாலும் சிக்கல்தான் கூடினாலும் சிக்கல்தான்”

“எல்லாம் அளவோட இருக்க வேணுமென்ன.”

“சிறுநீரக நோயைப் பத்தி இலங்கையில உள்ள பேராசிரியர்கள் குழுவோட உலக சுகாதார அமைப்பை சேர்ந்த மூண்டு விசேட குழுக்கள் ஆராய்ச்சி நடத்தினம். உந்த ஆராய்ச்சியில கிடைச்ச அதிர்ச்சியூட்டுற செய்தி என்னெண்டா விவசாய சிறுநீரக நோயால வருஷத்தில 1200 க்கும் 2000 க்கும் இடைப்பட்ட சனம் மோசம் போகுதாம். ஆனா சுத்தமான குடி நீர் வழங்கின பிறகு உந்த மரண விகிதம் குறைஞ்சு கொண்டு வருகுது எண்டும் தெரிய வருகுது. உது மட்டுமில்ல நாட்டில விவசாயியள் பாவிக்கிற களைகொல்லி, கிருமி நாசினி, இரசாயன பசளையில கிடக்கிற ஆர்சனிக் கட்மியம் மெர்க்குரி எண்ட உலோகங்கள் எல்லாம் அவையள் பாவிக்கிற நீரிலயும் சாப்பாட்டிலயும் கலந்து உடம்பில சேருது. உதாலதான் சிறு நீரகங்களுக்கு பாதிப்பு வருகுது. எண்டபடியா சிறு நீரகநோய் இருக்கிற இடங்களில சுத்தமான குடி நீரை வழங்கச்சொல்லி அரசாங்கம் சொல்லிட்டுது. சுத்தமான குடி நீர் வழங்கிய இடங்களில நோயின்ட தாக்கம் குறைஞ்சிருக்ெகண்டும் தெரிய வருகுது.”

“அப்பிடியோ?”

“உந்த சிறு நீரக நோயாளியள நல்ல படியா காப்பாத்தவேணுமெண்டு எங்கட ஜனாதிபதி கரிசனையா இருக்கின்றார். உதுக்காக ஒரு செயலணிய அமைச்சிருக்கினம். தெரியுமோ? ”

“அது ஏன் அண்ணே?”

“ஏனோ.? அவரும் விவசாய குடும்பத்து ஆள்தானப்பா. அதாலதான். ரெண்டு வருத்துக்கு முன்னால அவர் சீனாவுக்கு போன சமயத்தில சீன ஜனாதிபதியோட எங்கட சிறுநீரக நோயாளியின்ட பாதிப்பு பற்றி கதைச்சவராம். இலங்கையில உள்ள சிறுநீரக நேயாளியளுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தாறம் எண்டு சீன ஜனாதிபதி சொன்னவராம்.”

“அப்பிடிச் சொன்னவரோ ”

“சொன்னது மட்டுமில்ல. ஆஸ்பத்திரி கட்டுறத்துக்கு இடத்தையும் தெரிவு செஞ்சு போட்டினம்”

“ஆஸ்பத்திரிய எங்க கட்டப் போயினம்”

“பொலன்னறுவையில இன்னும் ரென்டு மாசத்தில கட்டிட வேலைய தொடங்கப்போயினம்.”

“பொலன்னறுவையில கட்டினமோ?”

“இப்ப பொலன்னறுவை தேசிய ஆஸ்பத்திரி இருக்கிற இடத்துக்கு அருகில உந்த சிறு நீரக ஆஸ்பத்திரிய கட்டப் போயினம். உதில சிறுநீரக நோயாளியளுக்கெண்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம் இலவச போக்குவரத்து சேவைய ஆரம்பிச்சிருக்கினம் தெரியுமோ”

“நல்ல விஷயமென்ன”

“நாட்டில இருக்கிற சிறுநீரக நோயாளியளின்ட நன்மைக்கு அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கையில ஒண்டு உந்த இலவச போக்குவரத்து திட்டம். உந்த திட்டத்தோட வடக்கு மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில சுத்தமான குடிநீர் வழங்க வேணும் எண்டபடியா 668 நீர் சுத்திகரிக்கிற இயந்திரங்கள கொடுத்திருக்கினம்.”

“யார் குடுத்திருக்கினம்?”

“சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியள்தான் குடுத்திருக்கினம்.”

“ யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில சிறுநீரக மாற்று சிகிச்சை தொகுதியொண்ட நிர்மாணிக்கவும் அதுக்கான உபகரணங்களை வாங்கவும்”

அரசாங்கம் 750 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருக்கெண்டும்”

ஆனா அதுக்கு பொருத்தமான இடமில்லாம இருக்கினம்

எண்டும் கேள்விப்பட்டன்.”

“யாரும் இடம் கொடுப்பினமே?”

“நல்ல விஷயத்துக்குத்தானே. எங்கட ஆக்கள் கொடுப்பினம்.”

Comments