குறுங்கதை | தினகரன் வாரமஞ்சரி

குறுங்கதை

கல்முனை பஸ் நிலையத்துக்கு கரீம் காலை 8.30 மணிக்கே வந்துவிட்டான் அங்கு அவன் யாரையோ எதிர்பார்ப்பது போல் அங்குமிங்கும் தன் கண்களை ஓடவிட்டான். அந்த பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களில் எல்லாம் அவன் ஏறி இறங்கினான். ம்ஹூம் அலுத்துப் போய் அவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்தான்.

இந்நேரத்தில் அவனது காதோரத்தில் கரீம் என்றொரு குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தான். தான் படிக்கும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் அந்த மாணவிதான். அவன் இவ்வளவு நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய இல்லை அவனுக்கு சொந்தமாகப் போகின்ற காமிலாதான். அவன் என்ன காமிலா, எவ்வளவு நேரமாக நான் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன் குறித்த நேரத்துக்கு வந்திருக்கக் கூடாதா? அவன் அதற்கு இப்போதுதானே 9.00 மணி ஆகிறது, 10 மணிக்குத் தானே பஸ் புறப்படும் என்று அப்போது சொன்னீங்கள். இல்ல காமிலா நாம் இருவரும் தனியாக கதைக்க வேண்டிய கதைகள் எவ்வளவோ இருக்கிறது என்று கூறிவிட்டு கரீம் மௌனமானான்.

என்ன கரீம் திடீரென மௌனமாகிவிட்டீர்கள். இல்ல காமிலா உங்களை எப்படி பிரிந்திருக்கப் போகிறேன் என்பதைப் பற்றி சற்று சிந்தித்தேன் அவ்வளவுதான். பிரிந்திருக்க வேண்டிய நேரத்தில் பிரிந்துதானே இருக்க வேண்டும். கரீம் ஒன்றை மறந்து போயிட்டேன், என்றவாறு தனது ஹேன்ட் பேக்கில் கையை விட்டு அதனுள்ளிருந்த பேனாவை எடுத்து கரீமின் சேட் பொக்கெட்டில் வைத்தாள் காமிலா.

இது ஹீரோ பேனா. நம்ம இருவரிலும் நீங்கள்தான் ஹீரோ அதை உங்களுக்கு ஞாபகமூட்டத்தான் இந்த ஹீரோ பேனா பரிசு. சரியாக சொன்னீங்கள் காமிலா. இதயம் இருக்கும் இடது பக்கத்திலேயெ பொக்கெட் இருக்கிறது. இதனுள் உங்கள் அன்புப் பரிசு ஹீரோ பேனா எனது இதயத்துக்குள்ளே நீங்கள். அதனை ஆமோதிக்கும் பாணியில் காமிலாவும் சிரித்துக் கொண்டாள்.

அப்போது இந்தாங்க நான் உங்களுக்கு கொண்டு வந்த பரிசு என்றவாறு ஒரு சொக்லேட்டை கரீம் காமிலாவிடம் நீட்டினான். காமிலாவும் அதனை வாங்கி அதில் ஒரு துண்டை உடைத்து கரீமிடம் கொடுத்தாள். அவன் ம்ஹூம் எனத் தலையையாட்டினான். ஏன் வேண்டாமா? அதற்கு அவன் சைகை மூலம் சொக்லேட் துண்டை தனது வாய்க்குள் வைத்துவிடும்படி கூறினான். காமிலா வெட்கத்தோடு, இவ்வளவு ஆட்களுக்குள் என்றாள்.

பரவாயில்லை வையுங்கள் என்றான் கரீம். தனது கையில் இருந்த சொக்லேட் துண்டை கரீமின் வாய்க்குள் திணித்தாள். அவன் சொக்லேட் துண்டுடன் அவளின் கைவிரலையும் சேர்த்துக் கடித்துவிட்டான். “ஆ” என்று அலற கரீம் தனது கைக்கடிகாரத்தை பார்த்தான். பகல் 12 மணியாகிவிட்டிருந்தது. இருவரும் இப்போது பஸ்ஸில் ஏறி அருகருகே இருக்ைகயில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு அருகில் எவருமே இல்லாததால் இருவரும் என்னவெல்லாமோ கதைத்துக் கொண்டனர். தங்களை மறந்த நிலையில் அவர்கள் கைகளும் வெட்கப்படும்படி அசைந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் யாரோ ஒருவர் பஸ்ஸைவிட்டு இறங்குவதற்காக மணியை அடித்ததும் இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.

கரீமும் காமிலாவும் கல்லூரி விடுமுறை நாட்களில் தத்தமது சொந்த ஊருக்குச் சென்று வருவது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் இந்த விடுமுறை நாட்கள் ஏன்தான் வருகிறதோ என்றொரு ஏக்கம் இருவருக்கும். காரணம் விடுமுறை தினங்களில் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாத நிலை. அதனால் தான் அப்படி ஓர் ஏக்கம். இப்படி இருந்த கரீமும். காமிலாவும் பிரியும் காலமும் நெருங்கிவிட்டது. அவர்கள் இருவரும் உயர்தர பரீட்சையும் எழுதிவிட்டார்கள். இப்போது பரீட்சை முடிவும் வெளிவந்துவிட்டது. என்ன செய்வது அவரவர் சொந்த ஊருக்கு போக வேண்டுமே இருவரையும் பிரிவுத் துயர் வாட்டியது. பிரிந்து சென்றார்கள்.

அதன் பிறகு காமிலாவோடு கதைப்பதற்கு அவளுடைய கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டும் அவனால் முடியவில்லை. இருந்தும் இருவரும் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு வந்தனர். இந்த வேளையில்தான் கரீமுக்கு அரச உத்தியோகம் ஒன்று கிடைத்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை காதலி காமிலாவிடம் சென்று கூறி மகிழ வேண்டுமே என்று உடனே பஸ் ஏறி புறப்பட்டான் கரீம், ஆனால் கண்டியில் இருக்கும் காமிலாவின் வீடு எங்கிருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. கண்டியில் ஓர் இடத்தில் பஸ்ஸைவிட்டு இறங்கினான். எத்திசையில் செல்வதென்றே தோணாத கரீம் அவ்வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் நானா, மனேச்சர் மகள் காமிலாவின் வீட்டுக்கு எதால போகவேண்டும் என்று கேட்டான்.

தம்பி அதோ தெரிகிறது கடை அதற்குப் பக்கத்திலதான் காமிலாவின் வீடு. இன்று மனேச்சரின் மகள் காமிலாவுக்கு கல்யாணம். அதற்காகவா வந்தீர்கள். இந்த வார்த்தையைக் கேட்டதும் கரீம் நிலைகுலைந்துவிட்டான். என்ன காமிலாவுக்குக் கல்யாணமா? தலைசுற்ற ஆரம்பித்து வீதி ஓரத்தில் அவன் குந்திவிட்டான்.

நோ, நோ. நோ காமிலாவுக்கு கல்யாணம் இல்லை. கல்யாணம் நடக்காது. நடக்கவே கூடாது. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. காமிலா எனக்கு உத்தியோகம் கிடைத்துவிட்டது. இதை நீ கேட்டா எவ்வளவு சந்தோஷப்படுவாய் என்று ஓடோடி வந்தேன். ஆனா உனக்கு கல்யாணமாமே என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். பிறகு தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு நீயாரையாவது திருமணம் செய் அது உன் உரிமை.

காமிலா நீ யாரை திருமணம் செய்தாலும் நன்றாக இரு என்று வாயார வாழ்த்தியவனாக காமிலாவைத் திருமணம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவிட்டாலும் அவளை அடையப் போன்ற அந்தப் பாக்கியசாலியின் முகத்தை ஒரே ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் காமிலாவின் வீட்டை அடைந்தான் கரீம். அங்கே கல்யாண வேலைகள் தடல் புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக்கல்யாண வீட்டில் ஓரமாகப் போடப்பட்டிருந்த ஒரு கதிரையில் கரீம் அமர்ந்து கொண்டான். கல்யாண வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காமிலா கரீமைக் கண்டு கொண்டாள்.

உடனே ஓடோடி வந்தாள், 'என்ன கரீம் இங்கே இருக்கின்றீர்கள். உள்ள வாங்க' என்று அவனை அவள் அழைத்த போது, வெறித்துப் பார்த்தான் 'வாங்க கரீம் வாங்க, எழும்புங்கள்' என்ற போது இனிமேலும் இருக்க முடியாமல் எழுந்து அவளைப் பின் தொடர்ந்தான்.

'இப்படி இருங்க கரீம்' என்று அவள் ஒரு கதிரையை காட்டிய போது, என்ன இது மணப்பெண் அதுவும் கழுத்தில் தாலி ஏறும் நேரம் என்று தனக்குள் நினைத்துக் கொண்டு அவன் அவள் காட்டிய அந்தக் கதிரையில் இருக்காமல் 'என்ன காமிலா இன்று உனக்கு கல்யாணம் என்று சொன்னாங்க நீ இப்படி எனக்குப் பக்கத்தில் நின்கின்றாய்' என்றான்.

இதைக் கேட்ட காமிலா சலசலவென்று சிரித்துவிட்டு, 'எப்படி சொன்னாங்க காமிலாவுக்கு இன்றைக்கு கல்யாணம் என்று சொன்னாங்களா? நீங்கள் இதை நம்பி விட்டீர்களா?', 'என்ன காமிலா எனக்கு என்றுமே புரியவில்லை கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்'.

'அப்படியா என் பெயர் சபினா காமிலா, எனது சகோதரியின் பெயர் சரினா காமிலா. சரினா காமிலாவுக்குத்தான் இன்று கல்யாணம். சுருக்கமாக காமிலாவுக்கு கல்யாணம் இன்று என்று உங்களிடம் சொல்லி இருப்பாங்க, என்ன கரீம், எப்போது குழப்பம் எல்லாம் தீர்ந்து போச்சா'. 'ஆம் காமிலா, ஆம்' என்றாவறு அவளை அப்படியே கட்டி அணைத்தான் கரீம். 

எம். சி. கலீல், 
கல்முனை – 05  

Comments