மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் | தினகரன் வாரமஞ்சரி

மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

மலையகப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் அம்சங்கள் இன்று பல்வேறு சமூகப் பொருளாதார மாற்றங்களை காணவேண்டிய நிலையில் உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக இருந்துவரும் இம்மக்களின் வாழ்க்கையானது போராட்டங்கள், பிரச்சினைகள், ஏமாற்றங்கள் என தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக பெருந்தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களை மகளிர் தினங்களில் மட்டும் போற்றுவதும், கெளரவித்து, பரிசில்கள் வழங்குவதும் காலம் காலமாக செய்யப்படும் ஒரு விடயமாகும்.
நான்கு பரம்பரைக்கு மேலாக உழைக்கின்ற இப் பெண்களின் வாழ்வில் ஒரு நிம்மதி பெருமூச்சு எப்போது கிடைக்கும்? தினமும் வஞ்சகமின்றி, தொழில் பக்தியோடு, கடினமாக உழைக்கும் இப் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இந்த தேசம் எதனையும் செய்யவில்லை.
பெருந்தோட்டத்தில் 8 மணித்தியாலயம் வேலை.

ஒரு நாளைக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். நிர்வாக நிபந்தனைகளின் கீழ் வேலைசெய்ய வேண்டும். இன்றும் அதே கங்காணி முறை, தொழிலில் மாற்றம் எதுவுமில்லை. உலகத்திலேயே பயிற்சி எதுவும் இல்லாமல் கிடைக்கும் ஒரே தொழில் தேயிலைத்தோட்ட கொழுந்து பறிப்பதாகும்.
இவர்களுடைய தொழிலுக்கும், வேதனத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இன்றும் அதே நாட்கூலி முறைதான். இன்றைய வாழ்க்கைச் செலவை சமாளிக்கக்கூடிய வகையில் இவர்களுக்கு சம்பளம் கிடைக்கின்றதா? என்பதை யாரிடம் முறையிடுவது. ஏன்? இந்த நிலைமை. இந்நிலைமை தொடர்வதற்கு காரணங்கள் யாது? இப் பெண்களா? தோட்ட நிருவாகமா, சமூகப் பிரதிநிதிகளா, அரசா? யாரை குறை கூறுவது.

உலகத்தில் பல கோடி பெண்கள் வாழ்கின்ற இக்காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், தேசிய உற்பத்திற்கும் பங்களிப்புச் செய்கின்றவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றும் பெண்களும், தொழிலாளர் பெண்களினதும், ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களினதும் சேவை அளப்பரியது. பெண்ணியம் பேசுகின்றவர்களுக்கு மட்டும் மேற்கூறிய விடயங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இவர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகள் போதாது என்பது கவனிக்கத்தக்கது.

பெருந்தோட்டத்தில் எத்தனையோ பெண்கள் தங்களுடைய கல்வியை பல்வேறு காரணங்களால் இடைநடுவில் நிறுத்திவிட்டு, கொழுந்து பறிக்கச் சென்றிருக்கின்றார்கள். இவர்களுடைய பிள்ளைகளையாவது படிக்க வைத்து ஒரு தொழிலுக்கு அனுப்ப முயற்சி செய்தாலும் கூட, இவர்களுடைய குடும்பச் சூழல், வாழும் சூழல், வீட்டுச்சூழல், பொருளாதார சுமை போன்றன தடைகளாக இருக்கின்றன.
நாகரிக மாற்றத்திற்கும், உலக மாற்றத்திற்கும் ஏற்ப இப்பெண்களும் மாற வேண்டும். ஒரு சமூகத்தின் கண்களே பெண்கள்தான்.
பெருந்தோட்ட பெண்களினது தொடர்ச்சியான உழைப்பானது, அவர்களை உடல், உள ரீதியாக பாதித்துள்ளது என்பதை வெளிவுலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பெருந்தோட்டப் பிரதேசத்தில் இன்று அநேகமானப் பெண்கள் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும், தாதிகளாகவும், தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், ஆடைத் தொழிற்சாலைகளிலும், சுய தொழில்களிலும், அரச உயர் பதவிகளிலும், வெளிநாட்டிலும், உள் நாட்டிலும் வீட்டுப் பணிப்பெண்களாகவும் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பெருந்தோட்டத்தில் வேலை செய்கின்ற பெண்களுக்கு, சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்திலுள்ளவர்களின் பொறுப்பாகும். இதனை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.
குறிப்பாக இப்பெண்களுக்கான ஓய்வுநேரம் அதிகரிக்கப்பட வேண்டும். தகாத காலநிலைகளுக்கான உடைகள் வழங்க வேண்டும். பனி, குளிர், வறட்சி, மழை, வேலைத்தளங்களில் ஆபத்துக்கள் ஏற்படாமல் முன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தோட்டங்கள் தோறும் பெண்கள் கழகங்கள், பெண்கள் கல்வி அபிவிருத்திக் குழு,
(தொடர் 21ஆம் பக்கம்)

Comments