டெஸ்ட் வரலாற்றில் அணிகளின் 100ஆவது போட்டி! | தினகரன் வாரமஞ்சரி

டெஸ்ட் வரலாற்றில் அணிகளின் 100ஆவது போட்டி!

சுமார் 140 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற 10 அணிகள் இது வரை 100 போடடிகளில் விளையாடியுள்ளன. அந்த வரிசையில் பங்களாதேஷ் அணி கடந்த 15ம் திகதி முதல் கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கில் இலங்கை அணியுடன் தனது 100வது போட்டியில் மோதி வருகிறது.

இதுவரை தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணிகளில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன. அதேவேளை இங்கிலாந்து, தென்னாபிரிக்க, இந்தியா. இலங்கை, சிம்பாப்வே, ஆகிய அணிகள் தங்களது 100வது போட்டியில் தோல்வியுற்றன.

தனது 100 வது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்ட ஒரே அணி நியூசிலாந்து அணியாகும். அவ்வணி 1972ம் ஆண்டு பிரிட்ஜ்டவுணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் நடைபெற்ற 100வது போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.

டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இங்கிலாந்து அணியே முதல் முதலில் தனது 100வது போட்டியில் விளையாடியது. 1909ம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெடின்லீயில் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற இப்போட்டியில் 126 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது.

இவ்வரிசையில் இரண்டாவதாக 100 போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 1912ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளரான ஜிம்மி மெத்தியூஸ் டெஸ்ட் வரலாற்றில் முதன் முதலாக இரு இன்னிங்ஸிலும் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

முக்கியமான போட்டிகளில் துரதிர்ஷ்டத்துக்கு முகம் கொடுக்கும் தென்னாபிரிக்க அணி தனது 100வது போட்டியில் கூட அவ்வாறான துரதிருஷ்டவசத்தால் தோல்வியுற்றது. 1949ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக போட் எலிசபெத் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டம் நிறைவுபெற சுமார் ஒன்றரை மணித்தியாலங்களே இருந்த நிலையில் தனது இரணடாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பு 188 ஓட்டங்களை எடு்த்திருந்த தென்னாபிரிக்க அணி திடீரென தனது இன்னிஸ்ஸை இடைநிறுத்தி கடைசி நாளில் சுமார் 15 ஓவர்கள் மீதமிருக்க 172 ஓட்டங்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக ஆடி 3 விக்கெட் வெற்றியை இங்கிலாந்து பெற்றது. தனது 100வது போட்டியில் தென்னாபிரிக்க அணி பரிதாபமாகத் தோற்றுப் போனது.

இந்திய அணியின் 100வது போட்டி 1967ம் ஆண்டு பெர்மிங்ஹாம்மில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது. 3 நாட்களில் முடிவடைந்த இப்போட்டியில் இந்திய அணி 132 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணியின் 100வது டெஸ்ட் போட்டி 1979ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றது அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர் சப்ராஸ் நவாஸ் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் 86 ஓடடங்களுக்கு 9 விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்டார்.

2001ம் ஆண்டு எஸ். எஸ். ஸி. மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இலங்கை அணியின் 100வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற அதிக வாய்ப்பிருந்தது. என்றாலும் பாகிஸ்தான் சகலதுறை வீரரான வஸீம் அக்ரம் முதல் இன்னிஸ்ஸில் 10வது விக்கெட்டுக்காக அர்ஷாத் கானுடன் 90 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியின் 100 வது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணமானார்.

சிம்பாப்வே அணியின் 100வது டெஸ்ட் போட்டி 2016ம் ஆண்டு ஹராரேயில் இலங்கை அணியுடன் நடைபெற்றது. இப்போட்டியில் சிம்பாவே 225 ஓட்டங்களால் தோல்வியுற்றது. சிம்பாப்வே அணித் தலைவர் கிரேஹம் கிரீமர் இரு இன்னிஸ்ஸிலும் சிறப்பாக ஆடியும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

எம். எஸ். எம். ஹில்மி 

Comments