இரத்தினபுரி தமிழ் கல்வித்துறையில் விரைவில் சிறந்த மாற்றம் ஏற்படும் | தினகரன் வாரமஞ்சரி

இரத்தினபுரி தமிழ் கல்வித்துறையில் விரைவில் சிறந்த மாற்றம் ஏற்படும்

மாகாண சபை உறுப்பினர் லலிதா கே. இராமச்சந்திரன்   

எம்.சந்திரகுமார்,  இறக்குவானை தினகரன் நிருபர்   

வடக்கு, கிழக்கிற்கு வெளியே மலையத்திற்கு அடுத்தபடியாகத் தமிழர்கள் செறிந்து வாழும் ஒரு மாவட்டமாகத் திகழ்வது இரத்தினபுரி மாவட்டம். எஹலியகொடை முதல் சூரியகந்தை வரையிலும் பதுளை வீதியில் பெலிஹுல் ஓயா வரை எல்லையைக் கொண்டிருக்கும் மாவட்டம். மலையகத்திற்கு மிக அண்மித்திருப்பதுடன் காட்டு வழி நடை பயணமாக சுமார் மூன்று மணித்தியாலத்தில் மஸ்கெலியா எல்லையை அடைய முடியும்.

சிவனொளிபாத மலைக்கான மூன்று வழிகள் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன. திரிபுரசுந்தரி சமேத சிவனாலயம், திருவானைக்கட்டை முருகன் ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள் கொண்ட மாநகர். பெர்குசன், சீவலி, சென்.லூக்கஸ், அலோசியஸ், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், பரி.யோவான் தமிழ் மகா வித்தியாலயம், சீசீ தமிழ் மகா வித்தியாலயம், அல்-.மக்கிய முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலான பழம்பெரும் கல்விக் கூடங்களைக் கொண்ட மாவட்டம்.

மாணிக்கக் கல், தேயிலை, இறப்பர் விளைவதைப் போன்று அரசியலிலும் பலரை உருவாக்கித் தந்திருக்கிறது இரத்தினபுரி மாவட்டம்.

சரத் முத்தெட்டுவேகம, நந்தா எல்லாவள, வாசுதேவ நாணாயக்கார, எம்.எல்.ஏ.எம்.அபுசாலி, மொகான் எல்லாவள, டபிள்யூ.ஏ.வில்லியம், புஞ்சிநிலமே, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பவித்ரா வன்னியாராச்சி, சந்திரா கங்கந்த, காமினி அத்துக்ேகாறள எனப் பலரை தேசிய ரீதியில் அறிமுகப்படுத்திய மாவட்டம். வடக்கின் கல்விச் சமூகத்தின் பங்களிப்பில் கல்விக் கண் திறக்கப்பட்ட மாவட்டம். வடக்கின் தொழில் அதிபர்கள் வியாபாரத்தில் கோலோச்சிய மாவட்டம். ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் வாக்குகள் மூலமாக ஒரு தமிழ்ப்பிரதிநிதியைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்துகொள்ள முடியாத ஒரு மாவட்டம். பல இனக்கலவரங்களில் அனுபவத்தால் பல கல்வியாளர்களையும், செல்வந்தர்களையும் வேருடன் பிடுங்கி எறிந்த மாவட்டம். தமிழர்கள் அரசியலில் தலையெடுக்க இன்னமும் பிரயத்தனப்பட்டுக் ெகாண்டிக்கும் ஒரு பழம்பெரும் பகுதி.

குறிப்பாகத் தமிழ் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய வேவல்வத்தை தோட்டம் அமைந்திருப்பது இந்த மாவட்டத்தில்தான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் தேசிய பட்டியல் உறுப்பினராக நீண்டகாலம் செயற்பட்டவர் ஏ.எம்.டி.இராஜன். அவருக்கு சிம்ம சொப்பனமாகக் களமிறக்கப்படவர்தான் லலிதா கே. இராமச்சந்திரன். நகைக்கடைகளுக்குச் சொந்தக்காரர். காங்கிரஸ் தலைவர் அமரர் சௌமியமூர்த்தியாரின் அன்புக்குப் பாத்திரமானவர்.

1998ஆம் ஆண்டு வேவல்வத்தையில் இரண்டு பெரும்பான்மையின இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதனால், முழுத்தோட்டத்துக் குடியிருப்புகளையும் தீயிட்டுத் துவம்சம் செய்கிறார்கள் பெரும்பான்மையினத்தவர்கள். தோட்ட மக்கள் அனைவரும் அகதிகளாகிறார்கள். மாவட்டத்தின் தமிழ்ப்பிரதிநிதி கொழும்பில். சௌமியமூர்த்தியிடம் முறைப்பாடு செல்கிறது. உடனே அவர், "லலிதா இராமச்சந்திரனைப்போய் பாரங்கப்பா" என்று அனுப்பி வைக்கிறார். அவரை காங்கிரஸின் அமைப்பாளராக நியமிக்கிறார் சௌமியமூர்த்தி. இத்தனைக்கும் அமரரின் சார்பில் 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டவர்தான் இந்த லலிதா! ஆனால், தேசிய பட்டியல் கிடைத்ததோ இராஜனுக்கு. அதன் பின்னர் சௌமிய மூர்த்தியாரின் ஒத்துழைப்புடன் அவர் மாகாண சபைக்குக் கொண்டு வரப்பட்டார். இப்போது மூன்றாவது முறையாக சப்ரகமுவ மாகாண சபையில் உறுப்பினராக இருக்கிறார் இராமச்சந்திரன். அரசியலுக்காகச் சொத்துகளை இழந்தவர்கள் பலர். இன்னும் பலர் சொத்துகளைச் சேர்த்துக்ெகாண்டிருக்கிறார்கள். இதில் இராமச்சந்திரன் முதலில் குறிப்பிடப்பட்ட ரகம். அரசியலுக்காகத் தன் சொத்துகளை இழந்தபோதிலும், மக்கள் பணியில் அணுவளவும் பிசகமாட்டேன் என்கிறார் அவர்.

"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியே என்னை அரசியல் பயணத்திற்கு அடித்தளமிட்டது. அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களின் காலத்தில், இரத்தினபுரி வேவல்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வரும். மாவட்டத்திற்குரியவர் கொழும்பில் இருந்ததால், அமைச்சருக்குத் தகவல் கிடைக்கவில்லை. அப்போது தான் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா எனக்கு அமைப்பாளர் பதவியைக் கொடுத்தார். இரத்தினபுரியில் லலிதா இராமச்சந்திரனைச் சென்று சந்தியுங்கள் என்று அவரைச் சந்தித்தவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். அப்போதிருந்துதான் தீவிர அரசியலில் பிரவேசித்தேன் என்கிறார் இராமச்சந்திரன்.

"தங்களது அரசியல் காலக்கட்டத்தில் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி விரிவாகக் கூற முடியுமா?"

1998ஆம் ஆண்டு இலங்கை இந்திய சமுதாய பேரணி கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2012ஆம் வருடம் நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது வரலாற்று சாதனைகள். அதுமட்டுமன்றி 1998ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண சபையில் உபதலைவராகவும் பதவி வகித்தேன். அன்று சப்ரகமுவ மாகாண சபையில் ஆளும் கட்சிக்கு நான் ஒரு முக்கியமானவராக இருந்தேன். சில தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதாகவும் காணப்பட்டது. அப்போது மாகாணசபை உறுப்பினர்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 10 இலட்சம் ரூபாவே ஒதுக்கப்பட்டது. தோட்ட ஆலயங்களுக்குப் பணம் ஒதுக்கப்படுவதில்லை. தோட்டங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென போராடினேன். சபையை விட்டு வெளிநடப்புச் செய்தேன் அதன் மூலமே பின்னர் ஆலயங்களுக்கும் நிதி, ஒதுக்கீடு செய்யும் நிலை உருவாகியது. இரத்தினபுரி திருவா​ைனக்கட்டை முருகன் ஆலயத்தை வீதி அபிவிருத்திக்காக உடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை முதலமைச்சருடன் பேசி அவரின் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் உத்தரவின்பேரில் நிறுத்தப்பட்டது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் பாடசாலைகள், தோட்டவீதிகள், குடிநீர் சுகாதார வசதிகள் உட்பட பலவசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

"சப்ரகமுவ மாகாண சபையில் தமிழ் உறுப்பினர்கள் மக்களுக்கு முறையான சேவையை பெற்றுக் கொடுக்கவில்லையென குற்றச்சாட்டுள்ளது, அத பற்றி உங்களின் கருத்து?"

"அது சுத்தப் பொய். அதை மறுக்கின்றேன். 2012 இலிருந்து மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு அது ஒரு கோடி ரூபாவாகியது. இதன் மூலம் தோட்டப்பகுதிகளில் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பிதற்காக மைதானம், சுயதொழிலுக்கு தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கணினி இயந்திரம் வழங்கப்பட்டது. தோட்டப்பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பொது விடயங்களுக்கு கூடாரம் உட்பட ஏனைய உபகரணங்கள், அபிவிருத்தி வேலைகள் எனப் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் வெளிவருவது குறைவாகவே காணப்பட்டது. அதுமட்டுமன்றி மாகாண சபை ஊடாக பாடசாலைக்களுக்கு வழங்கப்பட்ட காவல் தொழில் குறிப்பிட்ட தொகையினருக்கு எனது சிபார்சில் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவைகள் எனக்கு ஒதுக்கப்பட்ட கோட்டா. ஹப்புகஸ்தென்ன வைத்தியசாலையை மாகாண சபை பொறுப்பேற்று நடத்தப்படுகின்றது. அனைத்து வேலைத்திட்டங்களும் இரத்தினபுரி காவத்தை, இறக்குவானை, நிவித்திகலை, பலாங்கொடை, எஹலியகொடை, குருவிட்ட, தும்பர, கலவான, பெல்மதுளை ஆகிய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இதில் முக்கிய நோக்கமாக கல்வி அபிவிருத்திக்கே கூடுதலாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

"இரத்தினபுரியில் தனியாக வேறு இடத்தில் தமிழ்ப் பாடசாலை அமைக்கும் திட்டம் இதுவரை நிறைவேறவில்லையே?

தற்போது இயங்கி வரும் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் இட வசதியின்மையாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட மண் சரிவு அபாய அறிகுறி காரணமாகவும். இரத்தினபுரி புதிய நகரத்தில் தனியாகத் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட காணியில் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் தலையீட்டினால் முடியவில்லை. இப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் பல தடவைகள் இரத்தினபுரிக்கு வந்து முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பிறகு ஆட்சி மாற்றமும் இடம்பெற்றது. இதனால் கைகூடவில்லை. மீண்டும் மாகாண சபை மூலம் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. கடந்த மார்ச் 23ஆம் திகதி மாதாந்த மாகாண சபை கூட்டத்தில் முதலமைச்சருடனும், கல்வியமைச்சருடனும் இதுபற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் கல்வியில் கூடிய விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது. நான்கு நகரங்களில் நான்கு பாடசாலைகளில் உயர் தரத்திற்கு கணித, விஞ்ஞானம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திடீரென ஆரம்பிக்க முடியாது ஆசிரியர்கள் தேவை; வளங்கள் தேவை. ஆனால் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும்.

"தோட்டப்பகுதிகளில் மக்களின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படவுள்ளன. இதில் முக்கியமாக சிறுவர் அபிவிருத்தி நிலையம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்கிறார்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"முதல் கூறியது போல் தோட்டப் பகுதிகளில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை வெளிவருதில்லை. சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாலர் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முறையான கல்வித் திட்டமில்லை. சில நிலையங்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் இருக்கின்றனர். இச்சிறுவர்கள் முதலாம் தரத்திற்கு உள்வாங்கும் போது ஒன்றுமே தெரியாது. கட்டாயமாக இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

"மாகாண சபையின் மூலமாகத் தோட்டங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கும் போது தடைகள் ஏற்படுகின்றனவா?"

"ஆம். தடைகள் இருக்கின்றன. ஆனால் விட்டுக் கொடுப்பதில்லை. எமது மக்களுக்கு கிடைக்க கூடிய தேவைகள், அனைத்தையும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் செய்துக் கொடுக்கப்படும்."

"இவ்வருடம் செப்டம்பர் மாதம் மாகாண சபை காலம் முடிவடைகின்றது. தங்களின் எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறு இருக்கும்?"

"இது சம்பந்தமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை மேற்கொள்ளும். அந்த சந்தர்ப்பத்தில் தான் கூறமுடியும்.மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தேர்தல்களில் தமிழ் கட்சிகளிலும் பெரும்பான்மைக் கட்சிகளிலும் தமிழர்கள் களமிறங்குகின்றனர், ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீவிரமாக செயற்படுகின்றனர். ஆனால் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு, மக்களை ஏமாற்றியே வருகின்றனர். இதை விமர்சிப்பது குறைவாகவே உள்ளது. 

 

 

 

 

 

Comments