உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த அரசு அஞ்சவில்லை | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த அரசு அஞ்சவில்லை

 

 கேள்வி: - நல்லாட்சி அரசு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டு பின்போட முயற்சிப்பதாக எதிரணி தரப்புகளால் குற்றம் சுமத்தபட்டு வருகின்றதே. இதில் உண்மை இருக்கின்றதா?

பதில்: - இது வெறும் கட்டுக்கதை, அவ்வாறான எண்ணமெதுவும் அரசுக்குக் கிடையாது. மஹிந்த ஆட்சியில் போன்று எந்தவொரு தேர்தலையும் பிற்போட்டு துண்டு துண்டாக தேர்தலை நடத்தும் எண்ணமும் எமக்குக் கிடையாது. எல்லை நிர்ணய சபை அதற்குரிய பணியை நிறைவு செய்வதில் ஏற்பட்டிருக்கும் தாமதமே இதற்கு தடையாக உள்ளது. எவ்வாறெனினும் கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது கட்சிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலை குழப்புவதே எதிரணிகளின் திட்டமென நான் நினைக்கின்றேன். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

கேள்வி: - எல்லை நிர்ணய சபையின் செயற்பாடுகளை தாமதப்படுத்துவதற்கு அரசாங்கம் பின்னாலிருந்து செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றதே?

பதில்: - இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. எல்லை நிர்ணய சபை சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு எவ்விதத்திலும் தலையிடப் போவதில்லை.

எல்லை நிர்ணய சபைக்கு 1036 திருத்தங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இதில் 133 உள்ளூராட்சிச் சபைகளுக்கு எல்லை நிர்ணயம் தொடர்பில் எவ்வித திருத்தங்களும் முன்வைக்கப்படவில்லை. முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களில் பாதிக்கும் மேலானவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொற்ப அளவுக்கே தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.

இந்த வட்டார எல்லை நிர்ணய தேசியக் குழு இந்த அரசு பதவிக்கு வந்ததன் பின்னர் நியமிக்கப்பட்டதல்ல 2012.12.07 ம் திகதி நியமனம் செய்யப்பட்டதாகும். அதன் பதவிக் காலம் அவ்வப்போது பல சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டுள்ளது. 2015.05.31 ம் திகதியுடன் அதன் பதவிக் காலம் முடிவடைந்தது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதியால் 2015.08.21 ஆம் திகதி உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு பல மேன் முறையீடுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கவனத்தில் கொண்டு வட்டார எல்லைகளை மாற்ற வேண்டுமானால் அதனைச் செய்வதற்கு சட்டத்தின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் உண்மை.

கேள்வி: - எல்லை நிர்ணயம் ஒரு புறமிருக்க புதிய தேர்தல் முறைக்கமைய தொகுதிவாரி அல்லது வட்டார முறையில் தேர்தல் நடத்தப்படுமானால் சிறுபான்மை சமூகங்களும், சில கட்சிகளும் பாதிக்கப்படலாமென்ற முறைப்பாடு தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையிலேயே புதிய தேர்தல் முறையில் தொகுதிவாரி அல்லது வட்டாரமுறையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் விகிதாசார முறையும் பேணப்படவுள்ளது. இவ்வாறான கலப்புத் தேர்தல் முறையொன்றே அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அது குறித்து தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இது விடயத்தில் சிறிது தாமத மேற்பட்டாலும் புதிய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். எனினும் இது குறித்து பிரதான இரண்டு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. விரைவில் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும். சகல சமூகங்களதும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலேயே தேர்தலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் மனோ கணேசன் உட்பட சிறிய, சிறுபான்மைக் கட்சிகள் இந்த உள்ளூராட்சித் தேர்தலை பழைய முறைப்படி அதாவது விகிதாசார முறையில் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனவே?

பதில் : ஆம். புதிய முறையில் வட்டார எல்லைப்படி தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பில் ஒரு அச்சப்பாடு நிலவுகின்றது. விகிதாசார முறையின் மூலம் தமது மக்களுக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதே அவர்கள் பக்க வாதமாகும். இந்த வாதம் நியாயமானதும் கூட.

ஆனால் நாம் முன்பு குறிப்பிட்டது போன்று கலப்புத் தேர்தல் மூலம் சிறுபான்மை பிரதிநித்துவங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என நம்புகின்றோம். இது குறித்தே தற்போது அரசு ஆராய்ந்து வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் இன்னமும் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

கேள்வி: விகிதாசார முறையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் அதற்கு நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என அக்கட்சிகள் அடித்துச் சொல்லி வருகின்றனவே?

பதில் : இது தொடர்பில் என்னால் எந்தவித பதிலையும் தர முடியாது. அது அரசு மட்டத்தில் பேசித் தீர்க்கப்பட வேண்டியதொன்றாகும். கலப்புத் தேர்தல் முறையில் சிறுபான்மைச் சமூகங்களுக்குரிய சரியான பிரதிநிதித்துவத்தை வழங்க உத்தரவாதமளிக்கப்பட்டால் பிரச்சினை ஏற்படாது என்பதே எனது அபிப்பிராயமாகும்.

கேள்வி: இத்தகைய வாதப் பிரதிவாதங்கள் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு தடைக்கற்களாக அமையமாட்டாதா?

பதில்: நான் அவ்வாறு எண்ணவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி வருகின்றனர். அது சாதகமாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.

தேர்தல் மறுசீரமைப்புத் திட்டம் தயாரிக்கப்பட்ட போதே இந்த கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது அனைத்துத் தேர்தல்களுக்கும் பொருத்த முடையதாகவே உள்ளது. எந்தவொரு சமூகத்தினதும் பிரதிநிதித்துவத்தையும் பறிக்கும் எண்ணம் அரசுக்குக் கிடையாது. அவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒருபோது இடமளிக்கப் போவதுமில்லை.

கேள்வி: - கடந்த காலத்தைப் போலன்றி தற்போது தேர்தலை எதிர்பார்க்க முடியாதுள்ளது. அன்று சிறுபான்மைச் சங்க வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை இன மக்கள் வாக்களித்து தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தனர். அந்த நிலை இன்று மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. இனவாதச் செயற்பாடுகளே இதற்குக் காரணமெனக் கொள்ளப்படுகின்றதே?

பதில்: இக்கூற்றை நான் முழுமையாக ஏற்க மாட்டேன். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு செய்யவில்லையா? சில இடங்களில் அவர்கள் கூறுவது உண்மையாக இருக்க முடியும். அதனை 100 வீதம் எனக் கூற முடியாது.

அவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்க்கும் வகையில் தானே கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் செயற்பட்டால் இவ்வாறான தவறான எண்ணங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் எனதான் நம்புகின்றேன்.

கேள்வி: தேர்தல் மறுசீரமைப்பு, எல்லை நிர்ணயம் என்பன பற்றியெல்லாம் பேசிப் பேசி காலம் கடந்து கொண்டே போகின்றது. எப்போது தேர்தல் நடக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர். உள்ளூராட்சிச் சபைகள் அனைத்தும் கணக்கிட்டுள்ளன. இதற்கு என்ன பதிலைக் கூறப் போகிறீர்கள்?

பதில்: முதலில் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாட்டிலுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபையும் கலைக்கப்படவில்லை. அனைத்துச் சபைகளினதும் பதவிக் காலம்தான் முடிவடைந்துள்ளன.

பதவிக் காலம் முடிவடைந்ததால் வட மாகாணத்தில் வவுனியா நகர சபைத் தேர்தல் மூன்றரை வருடங்களாக நடத்தப்படாத நிலையில் உள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் 2 1/2 வருடங்களாக நடத்தப்படவில்லை.

கிழக்கில் 9 உள்ளூராட்சிச் சபைகளின் பதவிக் காலம் முடிவுற்று நான்கு ஆண்டுகளாகின்றன. இது போன்றே ஏனைய சபைகளதும் பதவிக் காலம் முடிவுற்றுள்ளன. சிலவற்றுக்கு பதவிக் காலம் சிறிதளவு நீடிக்கப்பட்டன. இப்போதும் அனைத்தினதும் பதவிக் காலம் முடிவுற்று உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆணையாளரொருவரின் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றன. இதுதான் உண்மை.

அடுத்தது தேர்தலை நடத்தும் பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணையகத் தலைவரிடமே உள்ளது. அதில் எம்மால் தலையிட முடியாது. தேர்தலை உரிய திகதியை அறிவித்து அவர் தேர்தலை நடத்துவார் என்பதை மட்டுமே எம்மால் கூற முடியும். எதிரணிகள் இதனை வைத்து அரசாங்கத்தின் நல்லாட்சிப் பயணத்தைக் குழப்ப முனைகின்றன. அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.

எதிரணிச் சக்திகளின் தவறான வழிநடத்தலுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது என்பதே தமது வேண்டுகோளாகும். 

Comments