மனமாற்றம் எதுவும் என்னிடம் இல்லை | தினகரன் வாரமஞ்சரி

மனமாற்றம் எதுவும் என்னிடம் இல்லை

அரசுடன் இணைந்து செயற்படுவதே சாலப்பொருத்தமானது என்று நீங்கள் அண்மையில் அறிவித்திருப்பது அனேகரது வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. நேரடியாக வரவேற்காவிட்டாலும் கூட, பலர் தங்கள் முகப்புத்தகத்தில் அதனைப் பதிவேற்றியதன் மூலம் மறைமுகமாக அங்கீகாரமளித்திருக்கின்றார்கள். உங்களது இந்த திடீர் மனமாற்றத்துக்கான காரணம் என்ன?

எந்த வித மனமாற்றமும் இல்லை. யதார்த்தமாக நடந்து கொள்வது எனது வழி. அதையே செய்தேன். பத்திரிகைகள் வித்தியாசமாகப் புரிந்து கொண்டுள்ளன. அதில் என் பிழையும் உண்டு. “ஒத்துழைக்க வேண்டும்” என்றதை “கூட்டுச் சேர வேண்டும்” என்று கூறி விட்டேன். கூட்டுச் சேருதல் என்பது எங்கள் அரசியல் அகராதியில் இணைந்து ஓரணியாகச் செயல்படுதல் என்று அர்த்தம் பெற்றுவிட்டது. நான் கூறியவற்றை அதன் பின்னணியில் இருந்து பெயர்த்தெடுத்து வியாக்கியானம் கொடுத்துவிட்டார்கள் எமது பத்திரிகை நண்பர்கள். என் மண்கும்பான் பேச்சை எடுத்துப் பார்த்தீர்களானால் நான் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் அண்மைய விஜயத்தைப் பற்றியே கூறியிருந்தேன். எமது பிரதேச ஏற்றுமதியாளர்களுக்கு தம்மால் இயலுமான எல்லா உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார். அவரைப் போன்றவர்களுடன் கைகோர்த்து நன்மைகள் பெறுவது தவறல்ல என்று கூறினேன். அவர் வந்தமையை தரக் குறைவாக சிலர் விமர்சித்ததால்த்தான் வெறுப்பின் அடிப்படையில் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றேன். காலத்திற்கு ஏற்றவாறு எமது சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம் என்றேன். சிலர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று அடித்துக் கூறிக் கொண்டு வருவர். முயலுக்கும் நான்கு கால்களே என்றால் ஏற்கமாட்டார்கள். அதனால்த்தான் சிந்தனையில் மாற்றம் வேண்டுமென்றேன்.

எமது பொருளாதார முன்னேற்றத்தை மையமாக வைத்து நான் கூறியதை வைத்துக் கொண்டு பலர் வித்தியாசமாக என்னைக் கணிக்கத் தலைப்பட்டு விட்டார்கள். எனினும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு இப்பொழுதும் கொடுத்துக் கொண்டே வருகின்றோம் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பொருளாதார ரீதியாக ஒத்துழைப்போம் என்று கூறுவதை விட்டு “கூட்டுச் சேருவோம்” என்ற எனது சொற்றொடர் இவ்வளவையும் உண்டு பண்ணி விட்டது. உங்களைப் போன்றவர்கள் நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். நாங்கள் தான் இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தோம். ஆகவே அவர்களுடன் நெருங்கி ஒத்துழைப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் அரசாங்கம் அதற்கான மனமாற்றத்தைக் காட்ட வேண்டும். சிந்தனை மகிந்தவாக இருக்கும் போது மனதில் மைத்திரி வியாபித்துள்ளது என்று நாங்கள் எவ்வாறு கணிப்பது?

உங்களில் இத்தகையதொரு மாற்றம் நீடிப்பதை உங்கள் சகபாடிகள் விரும்பமாட்டார்கள் என்றதொரு கருத்தும் உள்ளதே? அவ்வாறானால் உங்களது இந்த மாற்றம் நிரந்தரமானதாக இருக்குமா?

நான் மாறவுமில்லை என் சகபாடிகள் என்னை வையவும் இல்லை. ஒரு வேளை என்னை விமர்சித்தவர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டார்களோ நான் அறியேன்.

வடக்கு அபிவிருத்தி கண்டுவிட்டால், தங்களால் அரசியல் செய்ய இயலாது என நினைப்பவர்கள் தான் நீங்கள் குறிப்பிட்டதைப்போல எந்த முன்னேற்றத்திலும் ஈடுபடாமல் இருப்பதே தோதான அரசியல் என்று நினைக்கின்றார்களா ?

அபிவிருத்தி கண்டால் அரசியல் செய்ய இயலாது என்று எம்மவர் நினைப்பது இல்லை. அவர்களுக்காக நீங்கள் தான் அவ்வாறு நினைக்கின்றீர்கள். நான் குறிப்பிட்டது போர்க்கால வைரியத்தை வைத்துக் கொண்டு எந்த முன்னேற்றத்திலும் ஈடுபட முடியாது என்பதை. மனதில் வைரியத்தையும் வெறுப்பையும் எவ்வளவு காலம் தாங்கிநிற்கப் போகின்றோம்? அரசியல் ரீதியாக முழு மனதுடன் போராடும் அதே நேரம் நாங்கள் வெறுப்பு, துவேஷம், பொறாமை போன்ற குணங்களுக்கு இடங் கொடுக்காது இருத்தல் நன்மை பயக்கும். வெறுப்பானது ஒரு வலுவான சக்தி. அந்த சக்தி தான் தற்கொலை தாரிகளாக எங்களை மாற்ற உதவியது. எனினும் நடந்தது என்ன? ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுவிட்டன. எனவே மீண்டும் மனிதாபிமான நிலையில் இருந்து வெறுப்பின்றி போராடுவோம் என்றே கோரியிருந்தேன். ஜனநாயக ரீதியாகப் போராடும் போது வெறுப்புக்கு இடமளிக்கக் கூடாது. மகாத்மா காந்தி எமக்குச் சொல்லித்தந்த பாடம் அது.

இந்தியா தனது மாநிலங்களுக்கு ஒப்பான அதிகாரங்கள் கொண்டவையாகவே எங்கள் மாகாண சபைகளை உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட போதும் அவை அதிகாரங்களற்றுக் காணப்படுவதேன்?

நல்ல கேள்வி! 1987ல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்களில் முடிவு எடுத்துக் கொண்டது என்னவோ நீங்கள் கூறியதை ஒட்டியே. ஆனால் எமது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆரின் நரிக் குணம் எங்களுக்குத் தந்தது அதிகாரங்கள் அற்ற மாகாண சபையையே. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மக்கள் மதிப்பைப் பெற்றிருந்த அந்த காலகட்டத்தில் மிக அழகாக எமது அதிகாரங்கள் பற்றி கூறியிருந்தார். ஒரு கையால்த் தந்து மறு கையால் எடுத்து விட்டார்கள் என்றார். அதிகாரங்களைத் தருவது போல் தந்து விட்டு மாகாண சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளால் ஆளுநரை அரசராக்கி விட்டார்கள்! பின் வந்த சட்டத்தால் முக்கியமான சில அலுவலர்களை எமது கண்காணிப்புக்கு வெளியில் எடுத்து விட்டார்கள். அதனால்த்தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒருவர் சுகாதாரத் தொழிலாளி ஒருவரைக்கூட நியமிக்கும் அதிகாரம் எனக்கில்லை என்று அங்கலாய்த்தார்.

கடந்த ஆண்டின் இறுதியில் உங்கள் பிரிட்டன் விஜயத்தின் போது பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டீர்கள். இதனால் யாழ்ப்பாணம் அடையும் நன்மைகள் எவை?

இரு தரப்பாரின் பிரதிநிதிகளும் அண்மையிலும் பேசிக் கொண்டுள்ளனர். சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், விளையாட்டுத்துறை போன்ற பலதையும் உள்ளடக்கி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நன்மைகளை செம்மையாக அடையாளப்படுத்திய பின் கேளுங்கள் சொல்கின்றேன்!

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே வட மாகாண சபை அதிக அக்கறை காண்பிக்கின்றது என்ற குற்றச்சாட்டுப்பற்றி....

இரண்டும் சமாந்திரமாகச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் ரீதியாக மாற்றங்கள் வரும் வரையில் காத்திருக்க முடியாது. அதனால்த்தான் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பொருளாதார ரீதியான நன்மைகளை பெறவேண்டும் என்று கூறினேன். அவ்வாறு கூறியதால் அரசியலில் அக்கறை இல்லை என்று ஆகிவிடாது. தரமாட்டோம் என்று கூறும் அரசாங்கத் தரப்பினரைத் தரவைக்க நாம் போராடியே தீர வேண்டும். அவர்களுடன் பேசி எதுவும் கிடைக்காது. ஏன் என்றால் அவர்கள் தரக் கூடாது. கொடுக்கக் கூடாது என்று ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்டார்கள். அவர்களுடன் நைசாகப் (Nice) பேசி வைசாக (wise) எடுத்து விடுவோம் என்று நினைப்பது முட்டாள்த்தனம்.

இணைந்த வடக்கு கிழக்கு என்பது சாத்தியப்பட வேண்டுமெனில், இருதரப்பினருக்குமிடையில் பரஸ்பரம் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாக, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுபோல, முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்தும் வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றுமா?

வடக்கில் இருந்து தமிழர்களுந்தான் வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல. நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல் வெறும் பேச்சளவில் அல்லது தீர்மானம் நிறைவேற்றி ஏற்படுத்தக் கூடியதொன்று அல்ல. நான் மட்டக்களப்பில் அண்மையில் தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தின் பின்னர் முஸ்லிம் சிவில் சமூகத்தினரைச் சந்தித்தேன். தமக்கென ஒரு அலகு தந்தால் வடக்கு கிழக்கு இணைப்பைத் தாம் வரவேற்பதாக அவர்கள் கூறினார்கள்.

எப்போதும் திருநீற்றுப் பூச்சுடனும் குங்குமத்துடனும் நீங்கள் காட்சி தருகின்றீர்கள். இது வடக்கின் அனைத்து இன, மதங்களுக்கும் பொதுவானவரல்ல நீங்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடாதா?

ஒபாமா முஸ்லிம் எனப்பட்டார். அவர் ஜனாதிபதியாக இருந்த போது அவர் அமெரிக்க மக்களுக்குப் பொதுவானவர் இல்லை என்று மக்கள் அவரைக் குறை கூறவில்லையே!

உண்மையில், எனது முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்கள் பலர் வெளிப்படையாகவே என் நடை உடை பாவனைகளை மெச்சியுள்ளார்கள். நடை உடையல்ல மனிதனின் ஆணிவேர். அவனின் சிந்தனைகளும் உளப்பாங்குமே அவை. திருநீறானது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் அழிக்க வேண்டும் என்கின்றது. குங்குமம் எல்லாம் சக்தி மயம் என்கின்றது. தூய்மையும் தெய்வ நம்பிக்கையுந் தான் ஒருவரை சகல மக்களினதும் நண்பன் ஆக்குகின்றது. இவை இரண்டையும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆகவே நீங்கள் கூறும் தோற்றப்பாடு எழ நியாயமே இல்லை. 

 

Comments