இவர்களுக்காக கவலைப்பட யாருமில்லை! | தினகரன் வாரமஞ்சரி

இவர்களுக்காக கவலைப்பட யாருமில்லை!

கருணாகரன்...

ந்தக் கட்டுரையை உங்களில் பலர் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவுற்ற கையுடன் வாசித்துக் கொண்டிருக்கலாம். அல்லது எதைப் பற்றிய அக்கறையுமே இல்லாமல் நீங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டம் இன்னும் முடிவுறாத நிலையில் மகிழ்ச்சியாக இருக்கலாம். பண்டிகைகள் கொண்டாட்டத்துக்குரியவைதானே. கொண்டாட்டம் மகிழ்ச்சியானது. மகிழ்ச்சிதானே வாழ்க்கை! நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நாட்டின் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். “எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியதன்றி வேறொன்றறியேன் பராபரமே!” என அரசியல் தலைவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.

“இந்தப் புத்தாண்டு புதிய வாழ்க்கையை, புதிய ஒளியைத் தரவேண்டும்” என்று வாழ்த்தியிருப்பார்கள். இந்த மாதிரிப் பண்டிகைகளில் வாழ்த்துச் சொல்வது அவர்களுக்கு ஒரு பாரம்பரியத் தொழிலல்லவா!

ஆனால், இன்று இந்த நாட்டிலே இன்னும் ஒரு தொகுதியினர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல், கண்ணீரும் கவலையுமாகத் தங்களுடைய நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல, இவர்கள் ஆண்டுக்கணக்காக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் கவலையோடும் கண்ணீரோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் “கண்ணீரோடும் கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்வதே தவறு. மகிழ்ச்சியாக இருந்தால்தான் யாராலும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். இல்லையென்றால், அது வாழ்க்கையாக இருக்காது.

மரணக்களமாகவே இருக்கும். இப்படிக் கண்ணீரோடும் கவலையோடும் தினமும் இருப்பதென்பது, மெய்யாகவே தினமும் இறந்து கொண்டிருப்பதற்குச் சமம். தினமும் இறந்து கொண்டிருப்பவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இன்றைய நாளைக் கொண்டாட முடியும்?

இந்த நாட்டிலே இவர்களுக்குப் பண்டிகைகள் கிடையாது. மகிழ்ச்சி கிடையாது. கொண்டாட்டம் இல்லை. பண்டிகைக் காலத்திலும் இவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் முடிவு தெரியாமல், தகரக்கொட்டகைகளுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கைகளிலே பொங்கல் பிரசாதமோ இனிப்போ, மலர்களோ இல்லை. மனதிலே களிப்பில்லை. துக்கத்தாலும் அலைச்சல்களாலும் களைத்துப் போன உடலில் துயரம் இருளாக அப்பியிருக்கிறது. கைகளிலே மலர்களுக்கும் இனிப்புகளுக்கும் பதிலாக காணாமல் ஆக்கப்பட்ட இவர்களுடைய உறவுகளின் ஒளிமங்கிய புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. முன்பொரு காலம் இப்படியான புத்தாண்டு நாளில் காணாமல் ஆக்கப்பட்ட அந்த உறவுகள் தங்களோடு கூடிக் களித்திருந்த நினைவுகள் இவர்களுடைய நினைவுகளில் மேலெழுந்து வருகின்றன. கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.

இவர்களுக்கு ஜனாதிபதியின் வாழ்த்துகள் இல்லை. பிரதமரின் வாழ்த்துகள் கிடையாது. அரசியல் தலைவர்கள் யாரும் இவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதேயில்லை. அவர்கள் மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள யாருமே இவர்களைப் பற்றி, இப்படியானவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. பாருங்கள் நீங்கள் கூட இவர்களுடைய இன்றைய நாளைப்பற்றிக் கவலைப்படவில்லை என்பதை.

இப்படித்தானிருக்கிறது எல்லாமே. இப்படித்தானிருக்கிறோம் எல்லோரும். இதனால்தான், இந்த நாட்டிலே ஏராளமானவர்கள் வாழ முடியாமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச மன்னிப்புச் சபையின் அண்மைய தகவல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாக இலங்கையில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள என்று சொல்லியிருக்கிறது. இது சாதாரணமான ஓர் எண்ணிக்கையா? நம்முடைய காலடியிலும் நம்முடைய முகத்துக்கு நேரிலுமாகத்தான் இந்த எண்ணிக்கையான குடும்பங்கள் உள்ளன. இந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையானவர்கள் முடிவில்லாத பெருந்துயரத்தில் உழன்று கொண்டிருக்கும்போதுதான் நாங்கள் பண்டிகைக் கொண்டாட்டத்தில் திளைத்துப் போயிருக்கிறோம்.

“உண்டென்றால் எல்லோருக்கும் உண்டு. இல்லையென்றால் எல்லோருக்குமே இல்லை“ என்ற எண்ணத்தோடு வாழ முடியாதா நம்மால்? சிலர் பசித்திருக்க, நாம் அதைப் பொருட்படுத்தாமல் புசிப்பது நியாயமா நமக்கு? எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றுதானே நமக்கு மதங்களும் கல்வியும் பண்பாடும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் எப்படி இந்தளவு பெரிய இடைவெளியும் வேறுபாடும் வந்தது? அறிவிப்புகளுக்கும் நடைமுறைக்கும் இடையில் ஏன் இத்தகைய முரண்கள்? “எல்லோரும் மகிழ்ச்சியாகப் புத்தாண்டுப் பண்டிகையைக் கொண்டாடுங்கள்” என்று அறிவிக்கும் தலைவர்களுக்கு, வீட்டிலே இல்லாமல் போராடும் இடங்களிலும், வீட்டுக்குச் செல்ல முடியாமல் அகதி முகாம்களிலும் இருக்கின்ற சனங்களைப் பற்றித் தெரியாதா?

இப்படித்தானிருக்கிறது இந்த நாட்டிலே எல்லாமும். சம்பிரதாயமான அறிவிப்புகள். சம்பிரதாயமான ஆட்சி. சம்பிரதாயமான தலைவர்கள். சம்பிரதாயமான மக்கள். ஒன்றுமே புதிதில்லை. தலைவர்கள் சனங்களைப் பற்றிப் பொருட்படுத்தாமலே சம்பிரதாயமாக ஆட்சி செய்கிறார்கள். தலைவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள், ஆட்சியென்றால் இப்படித்தான் இருக்கும் என்று சம்பிரதாயப்படி மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகளும் அறிவிப்புகளும் நடைமுறைகளும் கூட அப்படித்தான், ஏதோ சம்பிரதாயமாக சொல்லப்பட்டும் நடந்து கொண்டுமிருக்கின்றன. இந்தச் சம்பிரதாயம் என்றால் என்ன என்பதே இங்கே கேள்விக்குரியது.

காலாதிகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழமையை நாங்கள் எப்படி மீறுவது என்ற நினைப்பில் ஏதோ நடக்கிறது. நடக்கட்டும் என்ற விதமாக மக்கள் நடந்து கொள்கிறார்கள். சனங்கள் திரும்பிப் பார்த்துக் கேள்வி எழுப்பாத வரையில் தாம் எதற்காகப் புதியனவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், புதியனவற்றை எதற்காகச் செய்ய வேண்டும் என்று தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆகவே, நாடு உறை நிலையில் அப்படியே கெட்டிபட்டுப்போயிருக்கிறது. இதனால்தான் இந்த நாட்டிலே எத்தகைய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உண்டாக்க முடியவில்லை. குறைந்த பட்சம் சின்னஞ்சிறிய பொருட்களைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் இந்த நாடு இன்று மாறி விட்டது. குண்டூசியைக்கூட நாம் வெளியிலிருந்தே இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய உணவுக்குத் தேவையான அரிசியைத் தாராளமாக உற்பத்தி செய்து வந்தவர்கள், இன்று வெளிநாட்டு அரிசிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயம் செய்த குடும்பங்களில் நாற்பது வீதமான குடும்பங்கள் இன்று விவசாயம் என்றால் என்ன என்று கேட்கின்றன. இப்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளில் பாதிப்பேருக்கு தங்கள் குடும்பம் செய்து கொண்டிருக்கும் தொழிலில் அனுபவமே கிடையாது. அவர்கள் குடும்பத்தின் தொழில் பற்றித் தெரிந்து கொள்ளாமலே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தனியே விவசாயத்துக்கு மட்டும் நேர்ந்த கதி என்றில்லை. கடற்றொழிலுக்கு, தச்சுத்தொழிலுக்கு, மட்பாண்டத்தொழிலுக்கு என எல்லாப் பாரம்பரிய, சுயதொழிலுக்கும் நேர்ந்த விளைவு.

இது மட்டுமல்ல, தீர்க்கக் கூடிய, தீர்க்க வேண்டிய சிறிய பிரச்சினைகளைக் கூடத் தீர்க்க முடியாமல் நாட்டிலே ஏராளம் பிரச்சினைகள் உள்ளன. அரசியல் பிணக்குகள், பிரச்சினைகள் மட்டுமல்ல, சாதாரணமான வழக்குகளே ஆண்டுக்கணக்காக நீதிமன்றங்களில் தேங்கிப் போயிருக்கின்றன. சமூகமே தீராப் பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு போயிருக்கிறது. இப்படியெல்லாம் இருந்தால் எப்படி நாடு சிறக்க முடியும்?

அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றி இன்னும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசியல் கட்சிகளும் பொதுஅமைப்புகளும் மக்களும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அவர்களை விடுதலை செய்வதைப் பற்றி அரசாங்கம் எந்தப் பதிலையும் சொல்லவேயில்லை. சொல்லவும் தயாரில்லை. இதில் ஏன் இந்தக் மௌனம்? இன்ன காரணங்களினால், அரசியல் கைதிகளை அரசாங்கத்தினால் விடுதலை செய்ய முடியாது. ஆகவே, அதைப் பற்றிப் பேசுவதை விடுங்கள் என்று சொல்வதற்கு அரசாங்கத்தினால் முடியாமலிருக்கிறது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, அல்லது அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவைக் காண்பதற்கு அரசியல் கட்சிகளுக்கும் பொதுஅமைப்புகளுக்கும் இயலாதிருக்கிறது. அப்படியென்றால், இந்த விவகாரம் கூடச் சம்பிரதாயமாகத்தான் அணுகப்படுகிறதா? என்றால், அப்படித்தான் கையாளப்படுகிறது.

ஆகவே இப்படியே நாடு உழுத்துப் போன சிந்தனைகளாலும் நடைமுறைகளாலும் சீரழிந்து கிடக்கிறது. இதற்குள்தான் நாம் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணீரின் மத்தியிலும் குப்பை கூழங்கள், மலம் போன்றவற்றின் மத்தியிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நமக்கு எதுவுமே தெரிவதில்லை. எல்லாம் ஒன்றுதான். இரத்தமும் ஒன்றுதான். பாலும் ஒன்றுதான். அப்படிக் கருதிக் கொண்டுதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது வீடுகளில் படித்துப் பட்டம் பெற்று விட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்குப் போதிய சந்தை வாய்ப்பில்லாமல் இருக்கிறது. நம்முடைய பிள்ளைகளைப் படிப்பிப்பதற்கும் அவர்களுக்குச் சரியாகச் சாப்பாடு கொடுப்பதற்கும் முடியாதவர்களாக இருக்கிறோம். பல பாடசாலைகளில் தேவையான ஆசிரியர்களே இல்லை. எதுவெல்லாம் வளர்கிறதோ இல்லையோ வேலையில்லாப் பிரச்சினையும் கவலைகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டிலே எண்பதாயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இவர்களுக்கு இன்னும்தான் முறையான நிவாரணமோ வாழ்க்கைப் பாதுகாப்போ வழங்கப்படவில்லை. போரிலே கொல்லப்பட்டவர்களுக்கு சிறிய அளவிலான நட்ட ஈட்டைக்கூட வழங்கவில்லை எந்த அரசாங்கமும். இதில் மைத்திரி – ரணிலும் ஒன்றுதான். மகிந்த ராஜபக்சவும் ஒன்றுதான்.

கோயில்களில் ஆறுகாலப் பூசை நடக்கிறது. ஆலயமணிகள் ஒலிக்கின்றன. விஹாரைகளில் பிரித் ஓதப்படுகிறது. தீபாராதனைகள் நடக்கின்றன. பள்ளிவாசல்களில் பாங்கொலிக்கிறது. தேவாலயங்களில் மெழுகுதிரிகள் சுடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் எந்தக் கடவுளரும் பாவப்பட்ட சனங்களை இரட்சிக்கவில்லை. நாட்டின் தலைவர்கள் மட்டுமல்ல, கடவுளரும் அவர்களைக் கைவிட்டேயிருக்கின்றனர்.

இந்த நாட்டிலே வாய்ப்புகளையும் வசதிகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

அப்படியானவர்கள் இலட்சக்கணக்கில் உண்டு என்பது நமக்கும் தெரியும். அவர்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த நாடு இருக்கிறது, இயங்குகிறது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்தை அமைப்பதற்கு இந்தப் பாவப்பட்ட சனங்களின் வாக்குகள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை இந்த நாட்டின் மன்னர்களும் விண்ணர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினைகளோடு தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டு எந்த மனிதரும் வாழ முடியாது. அப்படி யாரும் வாழவும் மாட்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்களே பிரச்சினையாக மாறுவார்கள்.

அப்படித்தான் இந்த நாட்டிலே ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரச்சினைகளால் பிரச்சினைக்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள் சனங்கள். அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குப் பதிலாக அவர்களைக் கொன்றும் சிறைப்பிடித்தும் காயப்படுத்தியுமே அடக்கியிருக்கிறது அரசு. இதனால் அத்தனை பிரச்சினைகளும் பல்கிப் பெருகிக் குட்டி போட்டுக் கிளைவிட்டு வளர்ந்திருக்கின்றன. இப்போது நாடே பிரச்சினை மயமாகியிருக்கிறது. அதனால்தான் எங்கெங்கு காணினும் போராட்டமடா என்று சொல்லும்விதமாக சனங்களின் எதிர்ப்புக் குரலைக் காணக் கூடியதாக உள்ளது.

ஒரு பக்கத்திலே அழுகை ஒலியும் எதிர்ப்புக் குரலும். மறுபக்கத்திலே பாட்டும் ஆட்டமும் கொண்டாட்டமும் களிப்பும். ஒரு பக்கத்திலே பசியும் பட்டினியும் கண்ணீரும் கம்பலையும். மறு பக்கத்திலே விருந்தும் வேடிக்கையும் என்று இருப்பது அழகல்ல. அது மனித மாண்புமல்ல.

அறிவுடையோரின் பண்புமல்ல. ஆனால் என்ன செய்வது, இப்படித்தானே உலகம் முழுவதிலும் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கிறது. இதில் நாங்கள் என்ன விதிவிலக்கா? என்று கேட்டு இதற்கொரு நியாயத்தைக் கற்பிக்க முயற்சிக்கலாம்.

என்னதான் உலகம் வளர்ந்தாலும் பாதுகாப்புகளுக்குப் புதிய உபாயங்களும் ஏற்பாடுகளும் நடந்தாலும் இன்னும் உலகம் அபாயங்களின் மேலேயே இருப்பதற்குக் காரணம், அவை தங்கள் மடியில் தீர்வுகளுக்குப் பதிலாகப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருப்பதே. எந்த நாடு அதிகமாகப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த நாடே கூடுதலான அபாயத்தில் இருக்கிறது.

பண்டிகைக்கு வெடிக்கப்படும் வெடியை விட அபாயத்தின் வெடி பயங்கரமானது. இதுதான் புத்தாண்டுச் சேதி.

 

Comments