உயிர்ப்புப் பெருவிழா சிறப்பிதழ் | தினகரன் வாரமஞ்சரி

உயிர்ப்புப் பெருவிழா சிறப்பிதழ்

அருட்பணி ரவிகாந்த்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தான் முன்னுரைத்ததன்படியே சாவை தன் சாவால் வீழ்த்தி மாபெரும் வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த நாளை இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவாக, உயிர்ப்பு ஞாயிறாக கொண்டாடுகிறோம்.

“இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார் இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கின்றோம்” (உரோ. 6:9).

வரலாற்றில் பல மாமனிதர்கள் தடம் பதித்து இடம்பிடிக்கின்றார்கள். வரலாற்றை வியக்க வைத்த மனிதர்களும் உண்டு. இங்கு வரலாறே வியக்கும் அளவிற்கு இயேசுவின் உயிர்ப்பு இடம் பெற்றது என்பது தான் எதார்த்த உண்மை.

வெற்றுக் கல்லறை:

இயேசுவின் உயிர்ப்பை ஒட்டிய நிகழ்வுகளை பார்க்குமிடத்து அவை குழப்பத்தில் தான் ஆரம்பிக்கின்றன. அதிகாலையில் இயேசுவை காணச்சென்ற பெண்கள் ‘வெற்றுக் (வெறுமையான) கல்லறையைத் தான் காண்கின்றனர். ஆதலால் கலக்கம் கொள்கின்றார்கள். அதுவே அவர்களின் குழப்பமாகவும் மாறுகின்றது.

அதே வேளை சீடர்களிடம் இவை கூறப்பட்ட போது, சீடர்களும் நம்பத் தயங்கினார்கள். அந்த நம்பிக்கையின்மையே அவர்களது குழப்பமாகவும் மாறியது. குழப்பங்கள் நீடிப்பதற்குள் விரைந்து ஓடின கால்கள் நான்கு. பேதுருவும் அன்புச் சீடன் யோவானும் கல்லறையை அடைந்தனர். பேதுரு உள் நுழைந்தார். கண்டார், நம்பினார் (யோவான் 20:8).

வெற்றுக் கல்லறை விடும் அழைப்பும் வாழ்வும்:

இறந்த இயேசு உயிருடன் இருக்கின்றார். என்பது அவரது உயிர்ப்பில் நாமும் பங்கு பெறுவோம் என்னும் நம்பிக்கையைத் தருகின்றது. இந்த நம்பிக்கை பிறருடனும் பகிரப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்கின்றது.

‘இறந்தோர் உயிர்த்தெழமாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்” (1கொரி. 15:13). கிறிஸ்தவ வாழ்வு என்பதே ஒரு விசுவாசப் பயணம் தான். கிறிஸ்து கொண்டுவந்த நிலையான வாழ்வு எமக்கு நிச்சயம் என்பதே நாம் அவரின் நற்செய்தியில் கொள்ளும் நம்பிக்கைதான் (1கொரி. 15:14).

இயேசுவின் வெறுமையான கல்லறை நமக்கு உணர்த்தும் பாடம் ‘வெறுமை’. வெறுமை வெறுப்பில் தோன்றுவது அல்ல, இந்த வாழ்வைக் கடந்து செல்லும் அனுபவம். இந்த உலகின் கட்டமைப்புக்கள் அனைத்தும் கடந்து செல்லும் என்கின்ற நிலைப்பாடு, “நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்” (கொலோ. 3:1). ஆக உலகப் பொருட்களின் ஆறுதலை தேடாது ஆண்டவரின் ஆறுதலைத் தேடுகின்ற நிலை. எனவே, கடவுளின் முன்னிலையில் நாம் வெறுமையில் செல்லுகின்ற போது அவரே அதை நிறைவாக மாற்றுவார்.

இயேசுவின் காலியான கல்லறை சொல்லும் சாட்சிய வாழ்வு. இயேசுவின் மரணத்தில் அஞ்சிய சீடர்கள் இயேசுவை விட்டு ஓடிச் செல்கின்றனர். உயிரைக் கொடுப்போம் என்று சொன்னவர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளவே ஆர்வம் காட்டினார். அச்சம் அவர்களை சூழ்ந்திருந்தது. ஆனால் வெறுமையான கல்லறையை கண்டவுடன் நம்பிக்கை கொண்டார்கள். உயிர்த்த இயேசுவின் தொடர் காட்சி அச்சத்தை நீக்கி புதிய சக்தியை கொடுத்தது. அதுவே கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பலமான சாட்சியாக மாறியது.

‘வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்” (தி.பா 3:15-16). எவ்வாறு அஞ்சிய சீடர்கள் துணிவு கொண்டார்களோ, ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கும் தண்டனைகளுக்கும் தயங்காமல் அசாத்திய பலத்தோடு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகர்ந்தார்களோ அவ்வாறு நாமும் உயிர்த்த கிறிஸ்துவை நம் வாழ்நாள் முழுவதும் எம் சொல், செயல்களில் சான்று பகர்ந்து அவரின் உயிருள்ள சாட்சிகளாக மாற அழைக்கப்படுகின்றோம்.

எனவே, இன்று அனைத்து கிறிஸ்தவ மக்களும் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய மாபெரும் விழாதான் இந்த உயிர்ப்பு ஞாயிறு. உயிர்ப்பு என்பதே கொண்டாட்டம் தான் ‘ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்களிப்போம். அக மகிழ்வோம் (திபா 118:24) உயிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னம் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றத்தை சீடர்களுக்கு கொடுத்தது. உயிர்த்த கிறிஸ்து என்பதே ஒரு அனுபவம். அதனை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் ‘கிறிஸ்துவின் உடலை உண்டு அவரது இரத்தத்தில் பருகுவோர் நிலைவாழ்வை கொண்டுள்ளனர் (யோவா. 6:54).

உயிர்த்த கிறிஸ்து எம்மிடையே இருக்கின்றார் எந்நாளும் எங்களோடு இருக்கின்றார். உலகம் முடியும் வரை எங்களோடு இருப்பார். அப்ப வடிவில் நற்கருணைப் பிரசன்னத்தில் எங்களோடு இருக்கினறார். இதை நம் அகக் கண்களால் காணும் போது நமக்கும் உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகின்றது. பெறுகின்ற இறை மகிழ்ச்சியை பிறரோடு பகிர்வதும் புது உயிர்ப்பே. 

Comments