எமது நாட்டின் வரிமுறைகள் பாராட்டுக்குரியவை | தினகரன் வாரமஞ்சரி

எமது நாட்டின் வரிமுறைகள் பாராட்டுக்குரியவை

உள்நாட்டு இறைவரி ஆணையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பங்குபற்றும் முதலாவது அரச தலைவராகக் கலந்துகொள்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு உயிர் கொடுப்பவர்கள் நீங்களே. உங்களது அர்ப்பணிப்பு, அறிவு, சக்தி மற்றும் முயற்சியினாலேயே எமது பொருளாதாரம் வலுப்படுகிறது என்பதை அனைவரும் மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்வார்கள். நீண்ட காலமாக இந்த திணைக்களத்தில் சேவையாற்றிய மற்றும் சேவையாற்றும் அனைவரையும் நான் நினைவுகூருகிறேன். அவர்களது சேவையை பாராட்டுகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் தோன்றும் பிரச்சினைகள், நெருக்கடிகள் மற்றும் சிக்கல்களை நேரடியாக எதிர்கொள்ளும் திணைக்களம் இது. இன்றைய தினம் உங்களுக்கும், நாட்டிற்கும், சகல நாட்டு மக்களுக்கும் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் நாட்டிற்காக ஆற்றவேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவுபடுத்தவோ அல்லது அறிவூட்டவோ தேவையில்லை என நான் நினைக்கிறேன். இந்த துறை தொடர்பாக உங்களுக்கு காணப்படும் அறிவு, சமூகத்தை பற்றிய உங்கள் புரிந்துணர்வு மற்றும் அனுபவங்களுடன் நாம் கடமைகளை நிறைவேற்ற கட்டுப்பட்டவர்களாக காணப்படுகிறோம்.
எமது நாட்டில் காணப்படும் வரி முறைமைகள் தொடர்பாக பல்வேறு பாராட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவை எமக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டவையல்ல.

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில், வலுவான பொருளாதாரத்தையுடைய நாடுகளில் காணப்படும் வரி முறைமைகள் புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ள முறையை தெரிந்துகொள்ளவும், அவை தொடர்பாக புரிந்துணர்வையும், பயிற்சிகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
தேவையான பயிற்சித்திட்டங்கள் தொடர்பாக சங்கத்தின் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும் வளர்ச்சிக்கும் உயர் நியமங்களை ஏற்படுத்துவதற்கும் இத்திணைக்களத்தில் சேவையாற்றும் உங்கள் அனைவருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் புதிய வரி முறைமைகள் தொடர்பாக கற்கைகள், தெளிவூட்டல் மற்றும் பயிற்சிகள் அவசியமாகும். நாம் அரசாங்கம் என்ற வகையில் அதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகும்.
எமது நாட்டில் காணப்படும் வரி முறைகளில் தனிநபர் வருமானம் அதிகரிக்கின்றது. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் போது எமது வரி அறவிடும் முறையில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நேரடி வரி அறவீடுகளில் காணப்படும் குறைபாடுகள் பாரிய சிக்கலாக உள்ளன. அரசின் வருமானங்களைப் பற்றி பேசும் போது கடந்த காலங்களில் உங்களது திணைக்களத்தில் காணப்படும் கோவைகளின் எண்ணிக்கை தொடர்பாக பலரும் கதைத்தார்கள். சிலரிடமே வரி அறவிடப்படுகிறது. நாட்டில் வரி செலுத்தாத எத்தனையோ பேர் காணப்படுகிறார்கள். இந்த வரிகள் ஏன் அறவிடப்படுவதில்லை என்ற விடயம் உங்கள் திணைக்களத்திற்கு போலவே அரசியலிலும், அரசாங்கம் மற்றும் பொது மக்களிடமும் உரையாடலுக்கும் வாதங்களுக்கும் உட்படுகின்றது. அரசின் சிறந்த நிலவுகைக்காக வரி அறவிடுதல் எமது நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் காணப்படும் நிலையாகும்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட மன்னர் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்கப்பட்ட முறை தொடர்பாக குறிப்புக்கள் மற்றும் வரலாற்று ரீதியான அறிக்கைகளுடன் சில வரி அறவீடுகள் தொடர்பாக காணப்பட்ட அசாதாரண நிலைகளுக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சிக்காலத்திலும் மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் நாட்டில் இடம்பெற்ற வரி அறவீடுகள் தொடர்பில் சாட்சியங்கள் காணப்படுகின்றன. மறு முறையில் நோக்கினால் இருப்பவர்களிடம் அரசு வரி வசூலிப்பது அவசியமாகிறது. பெளத்த மதக் கோட்பாடுகளிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரசர்களின் ஆட்சிக் காலத்தில் காணப்படும் வரி அறவிடல் தொடர்பான கதைகள் மிக வேடிக்கையானவை. அவசரமாக மேற்கொள்ளப்பட்ட வரி அறவிடல் என்பதாக சிலரால் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஞாபகமூட்டுவதற்காகவே நான் இந்த கதைகளை நினைவுபடுத்தினேன்.
எமது நாட்டில் அரச வருமானம் அதிகரித்தால் தனிநபர் வருமானம் அதிகரிக்கும். எனினும் நேரடி வரி அறவீட்டில் குறைபாடுகளை நாம் அவதானிக்கிறோம். அதேபோல் மகாவலி அதிகார சபை போன்ற அரச நிறுவனங்களை கருத்திற்கொள்ளும்போது அவற்றினுௗடாக மேற்கொள்ளப்படும் முதலீடுகளினால் வரி அறவிடும் முறைகள், வேறுபடினும் அவற்றிலிருந்து அரசிற்கு கிடைப்பது அவற்றின் வருமானங்களின் 10 சதவீதமோ அல்லது 20 சதவீதம் மட்டுமே. அவற்றையும் உரியவாறு பெற்றுக் கொள்வதற்கான முறைகள் இல்லை என்பதை நான் அறிவேன்.
அரச நிறுவனங்களில் இருந்து விலகி காணப்படும் நிறுவனங்களில் விசேடமாக தனியார் வர்த்தக முதலீட்டு செயற்திட்டங்களில் அரச வருமானங்களுடன் சேர்க்கப்படவேண்டிய பல்வேறு வரி குறைபாடுகள் காணப்படுவதை நான் அவதானிக்கிறேன். அதனால் அவ்வாறான துறைகளை பலப்படுத்தி அவற்றை வினைத்திறனாக்குதல் அவசியமாகும். சங்கத்தின் தலைவர் பல்வேறு விடயங்களைத் தெரிவித்தார். பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி புதிய வரி அறவீட்டு சட்டம் பற்றி நாம் தீர்மானிப்போம்.
கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன.

2007 ஆம் ஆண்டிலிருந்தே தங்களுக்கு உற்சாகம் காணப்படவில்லையென கூறினார்கள். அதாவது இங்கிருப்பவர்களுக்கு திறமையில்லை என்று அர்த்தமா? இங்கு பல திறமைசாலிகள் காணப்படுகின்றனர். அவர்களது தலைமைத்துவத்திலேயே இந்த திணைக்களம் இயங்குகிறது. எவ்வாறாயினும் நிதியமைச்சர் 2007 ஆம் ஆண்டிலிருந்து உதவி ஆணையாளர்களை ஆட்சேர்ப்பு செய்யவில்லையாயின் அது சிக்கலாகும். அதற்கான காரணங்களை நான் அறியவில்லை. புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இந்த திணைக்களத்தின் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்படாவிடின் அது பாரிய பிரச்சினையாகும்.

இந்த திணைக்களத்தை பலப்படுத்தவும், சேவைகளில் அரசாங்கம் எதிர்பார்க்கும் வினைத்திறனை ஏற்படுத்தவும் அந்த ஆட்சேர்ப்புக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்திலேயே நான் இருக்கிறேன்.
இந்த சட்டம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பாக சிங்கள தமிழ் புத்தாண்டின் பின்னர் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிதியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வோம். அதனுௗடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
உங்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஊக்கக் கொடுப்பனவு தொடர்பாகவும், வரி செலுத்துபவர்களுக்கான இலகு முறைகளை ஏற்படுத்தல் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பிரச்சினைகளை தீர்த்து திணைக்களத்தின் நோக்கங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான பின்னணியை ஏற்படுத்துவேன் என நான் விசேடமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும், சங்கத்திற்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி மக்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தவும் சுபீட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்தவும் நீங்கள் இதுவரை மேற்கொண்டுள்ள சேவைகளை நான் பாராட்டுகிறேன். எதிர்காலத்திலும் இந்த சேவைகளை மிக உயர்ந்த தரத்தில் பெற்றுக்கொடுப்பதற்கும் அனைவருக்கும் பலம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். அதற்காக அரசாங்கத்தின் அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Comments