எல்லா வயதினரையும் பாதிக்கும் | தினகரன் வாரமஞ்சரி

எல்லா வயதினரையும் பாதிக்கும்

முழங்கால் வலி என்பது பொது வாக எல்லா வயதினரையும் பாதிக்கின்ற ஒரு பொதுவான அறிகுறியாகும். இது சடுதியாகவோ அல்லது படிப்படியாகவோ தோன்றலாம். சில வேளைகளில் ஏதாவது உபாதைகளின் பின்னரோ தோன்றலாம். ஆரம்பத்தில் முழங்கால் வலி சிறிய அளவில் அசெளகரியத்தை ஏற்படுத்தி பின்னர் நாளடைவில் தீவிரமடைந்து கடுமையான வலியை உண்டு பண்ணும்.

முழங்கால் மூட்டு என்பது மனித உடலில் காணப்படுகின்ற மிக முக்கியமானதும், பெரிய அளவிலான மூட்டும் ஆகும். உடல் பாரத்தின் பெரும்பகுதி முழங்கால் மூட்டு வழியாகவே தாங்கப்படுகிறது. முழங்கால் மூட்டை ஆக்கியுள்ள என்புகளின் தொடுகை மேற்பரப்பானது உராய்வு நீக்கிப் பதார்த்தங்களாலான கசியிழையத்தால் சூழப்பட்டிருக்கும். இரண்டு என்புகளுக்கிடையில் மூட்டிடை மென்சவ்வு காணப்படும். இது உட்புறமாக மூட்டிடைப் பாய்பொருள் ஆல் நிரப்பப்பட்டிருக்கும். இதுவே மூட்டுக்கள் தேய்வடைவதைத் தடுக்கும் பதார்த்தமாக காணப்படுகிறது.

முழங்கால் மூட்டு வலியை ஏற்படுத்தும் பிரதான காரணிகள்

முழங்கால் மூட்டின் அமைப்பு - முழங்கால் மூட்டானது நாள் முழுவதும் உபயோகப்படுத்தப்படுகின்ற மூட்டாகும். இதனுடைய இயற்கையான கட்டமைப்பில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படின் மூட்டுக்களில் இது அசாதாரணமான அசைவை தோற்றுவிக்கும். இது மூட்டு அழற்சியை ஏற்படுத்தி வலி உண்டாக காரணமாக அமைகிறது.

அதிக உடற் பருமன் உடல் எடை - உடற் பருமன் அதிகரிக்கும்போது முழங்கால் மூட்டில் ஏற்படுகின்ற விசையின் அழுத்தம் அதிகரிக்கின்றது. அதிக உடல் எடை உடையவர்களில் முழங்கால் மூட்டுவலி ஏற்படுவதற்கு இதுவே பிரதானமான காரணமாகும். அதிக உடல்எடை ஆதரைட்டிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதோடு மூட்டில் காணப்படுகின்ற உராய்வு நீக்கித் தொடுப்பிழையங்களை சேதமடையச் செய்து முழங்கால் வலிக்கு பிரதானமான பங்களிப்பை செய்கிறது.

முழங்கால் மூட்டின் அதிகளவு பயன்பாடு - சில உடற் பயிற்சிகளின்போதும் மற்றும் சில வேலைகள் புரியும்போதும் சில செயற்பாடுகள் திரும்பத் திரும்ப அதிகளவு இடம்பெறுவதால் இது மூட்டு அழற்சியையும் வலியையும் உண்டு பண்ணுகிறது.

விளையாட்டுடன் சார்ந்த உபாதைகள்

சில விளையாட்டுக்களின் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் அடிகள், நேரடியான மோதல், விழுதல், கால் பிரழுதல் போன்றனவும் முழங்கால் வலியை உண்டு பண்ணும்.

முழங்கால் வலியை உண்டுபண்ணும் மேலும் சில நோய் நிலைமைகள்.

- ஆதரைட்டிஸ் Rheumatoid arthritis, Osteo arthritis,gout.

முழங்காலின் பின்புறமாக ஏற்படும் பாய்பொருள் நிரப்பப்பட்ட வீக்கநிலை.

முழங்கால் மூட்டின் உட்புறமாக காணப்படுகின்ற மென்சவ்வில் ஏற்படுகின்ற அழற்சி. இது மூட்டினுடைய அளவுக்கதிகமான பாவனையால் ஏற்படுகின்றது.

இடுப்பென்பிலிருந்து முழங்கால் மூட்டு வரை தொடர்ச்சியான தடிப்பான பட்டிகையாக நீண்டு செல்கின்ற Ilio Tibial band இல் ஏற்படுகின்ற அழற்சி.

தொடுப்பிழையத்தில் ஏற்படும் கோளாறுகள்(

(Connective tissue disorders)

மூட்டுச்சில்லு விலகலடைதல்

முளங்கால் மூட்டில் ஏற்படும் தொற்றுக்கள்

Osgood Schlatter disease

முளங்கால் மூட்டுவலியை எவ்வாறு சமாளிப்பது?

போதியளவு ஓய்வு பாதிக்கப்பட்ட மூட்டிற்கு போதுமான ஓய்வு கொடுத்தல். அத்தோடு வலியை அதிகரிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல்.

Ice- ஒவ்வொரு 2 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை நோவு உள்ள இடத்தில் வைத்து ஓரளவு அழுத்தவும்.

Compressive bandages-. முழங்கால் வீக்கமடைவதை தடுக்க Crepe bandage மற்றும் Elastic Sleeve போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் நீண்ட காலமாக பல்வேறுபட்ட வலி நிவாரணி மாத்திரைகளை பாவித்தும் எந்த விதமான பயனும் இல்லை எனில் இயன் மருத்துவ சிகிச்சையை பெற்று கொள்ளவும். இயன் மருத்துவம் வெறுமனே உடலில் பல தரப்பட்ட வலிகளுக்கு வெறுமனே வலி நிவாரணி மாத்திரைகளை வழங்கி தற்காலிக தீர்வை தரும் முறையல்ல.

மாறாக வலிக்கான பொருத்தமான காரணங்களை கண்டறிந்து அதற்கு சிகிச்சையளித்து நிரந்தர வலி நிவாரணத்தை தரும் ஓர் பக்க விளைவு அற்ற ஒரு சிகிச்சை முறையாகும். இயன் மருத்துவத்திலுள்ள பல்வேறு வகையான இலத்திரனியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி முழங்கால் வலிக்கு மிகச் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேற் குறிப்பிடப்பட்ட முளங்கால் சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு இருப்பின் ஒரு சிறந்த தேர்ச்சி பெற்ற இயன் மருத்துவரை நாடி பொருத்தமான இயன் மருத்துவ சிகிச்சை பெற்று முயங்கால் வலியை விரட்டியடித்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வீராக.

–லில்லி நாதன்

Comments