"மோனிங் கியன்னே மொக்கத?" | தினகரன் வாரமஞ்சரி

"மோனிங் கியன்னே மொக்கத?"

இப்பவெல்லாம் ஒருவருக்ெகாருவர் வணக்கம் சொல்றது நிறைய மாறியிருக்கு. தமிழில், ஒருவரைக் கண்டால், அது காலையானாலும் சரி, மாலையானாலும் சரி, வணக்கம் எண்டுதான் சொல்றாங்க. ஆங்கிலத்தில நேரத்திற்கு ஏற்ற மாதிரி. காலை எண்டால் குட் மோனிங். மாலை எண்டால் குட் ஈவினிங். இரவில் கடைசியாகச் சந்தித்தால் குட் நைற். இஃது எங்களுக்குத் தெரியாதா எண்டு கேட்பீங்க. தெரியும். ஆனால், ஒரு விசயம் இருக்கு.

இப்பிடித்தான் ஒரு நண்பர் வீட்டுக்கு ஒரு நண்பர் போயிருக்கார். அண்டைக்குத் தங்க வேண்டியதாய்ப்போச்சு. இரவு சாப்பாடு எல்லாம் முடிச்சிட்டு, நித்திரைக்குப் போகும் நேரம். வந்த நண்பருக்கு குட் நைட் சொன்னாராம் நண்பர். அதுக்கு அவர், எனக்ெகன்ன குட் நைட்! உங்களுக்குத்தான் குட் நைட்! என்றாராம். மனிசன் கொஞ்சம் நகைச்சுவைக்காரர். இன்னொரு சந்தர்ப்பத்தில், எப்ப சார் கல்யாணம்? எண்டு ஒருவர் கேட்க, "அநேகமாக இந்தத் தைப்பொங்கலுக்கு உங்கட சித்திய கூட்டிக்கொண்டு வந்துவிடுவன்" எண்டாராம்.

"சித்தியவா?"

"ஓம் சித்தியத்தான்!"

"என்ர மனிசி உங்களுக்குச் சித்தி! சித்தி எண்டுதான் கூப்பிட வேண்டும். என்னைச் சித்தப்பா எண்டுதான் கூப்பிட வேண்டும்!"

"இதென்னடா வம்பு?"

"ஓ அப்பிடித்தான். என்னை அண்ணா எண்டால், மனிசியை அண்ணி எண்டு சொல்லுவீங்க. அங்கிள் எண்டா, மனிசியை அன்ரி எண்டு கூப்பிடுவீங்க. அந்தச் சோலியே வேண்டாம். நான் சித்தப்பா, மனிசி சித்தி, சரிதானே!?"

மனிசன் இப்ப யாழ்ப்பாணத்திலை இருக்கிறார். அவர் இருக்கட்டும்.

தமிழ்ல வணக்கம் சொல்லும்போது சும்மா வணக்கம் எண்டால், மறுமுனையில் நிற்பவரும் வணக்கம் தான் சொல்றார். வேறு சொல் இல்லை. நன்றி எண்டால், 'அதுக்ெகன்ன' என்பாங்க. ரஜினி சொல்றதுக்கு முன்னதாகவே மகிழ்ச்சி எண்டு சொல்லியிருக்காங்க.

இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் சந்தித்தால், அஸ்ஸலாமு அலைக்கும் என்பாங்க. அதாவது உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! பதிலுக்கு மற்றவர், வஅலைக்கும் சலாம்! என்பார். அதாவது 'உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்' எனும் பொருள்பட.

சிங்களவர்கள் ஒருவரைக் கண்டதும் ஆயுபோவன் என்பாங்க. அதுவும் வணக்கம்தான். பதிலுக்கும் ஆயுபோவன்தான். சம்பாஷணை நிறைவடைந்ததும் 'புது சரணய்' என்கிறாங்க. முன்பைவிட இப்போது 'புது சரணய், தெவி பிஹிட்டய்' என்ற சொற்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்குக் கடவுள் துணை இருப்பார் என்பதுதான் அது!

ஆனால், இந்த ஆயுபோவன் எண்டு சொல்றது அவ்வளவு நல்லது இல்லை எண்டு சொல்றார் பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்க. ஆயு என்றால் நெருப்பு. போவன் எண்டால் பரவட்டும் எண்டு ஒரு முறை விளக்கம் தந்திருக்கிறார். ஆகவே, 'ஆய்போவன்' எண்டு சொல்வோமே எண்டும் சொன்னார். ஆனால், ஆரும் அத கேட்டமாதிரி தெரியல்ல. இப்பவும் நெருப்பத்தான் பரவவிட்டுக்ெகாண்டு இருக்கிறம்போல. தமிழாக்களும் அப்பிடித்தான். பிடிச்சால் பிடிச்சதுதான். காலத்திற்கு ஏற்றமாதிரியோ அல்லது நாங்கள் பிழையா பயன்படுத்துறது தெரியவந்தாப்பிறகும் சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இந்தக் குண்டும் குழியும் என்றத குன்றும் குழியும் எண்டு பயன்படுத்துறமாதிரி எண்டு வைச்சிக்ெகாள்ளுங்களன். ரூபாயும் அப்படித்தான். எவ்வளவுதான் சொன்னாலும் ரூபா எண்டுதான் எழுதுறாங்க. அதைப்பற்றியெல்லாம் பிறகு ஒருக்கா பாப்பம்.

இப்ப பிரச்சினை வந்து மோனிங்தான்!

தமிழாக்களும் சரி சிங்களாக்களும் சரி, காலையிலை ஆரையாவது கண்டால், சும்மா மோனிங் எண்டு மட்டும்தான் சொல்றாங்க. அது சரியா? மோனிங் எண்டால் காலை. இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமையட்டும் எண்டால், குட் மோனிங் என்பதுதானே சரி. சிலர் குட் மோனிங் சொன்னால், மற்றவர் வெரி குட் மோனிங் எண்டு நாகரிகமாகச் சொல்வார். நாகரிகம் என்றது இங்கிலீசுக்கு மட்டும்தானாக்கும்! அதுவும் சரிதான். இங்கிலீசில ஒரு சொல்லும் பிழைக்கக்கூடாது எண்ட கவனம், தமிழ்ல இல்லைதானே!

அலுவலகத்திலை உள்ள ஒரு சகபாடி சொன்ன கதையத்தான் நான் உங்களுக்குச் சொல்றன். ஒருத்தர் இப்பிடித்தான் மோனிங் சொன்னாராம்! அதுக்கு அவர், மொக்கத மோனிங்? ம்...மோனிங் கியன்னே மொக்கத? என்ன மோனிங், மோனிங் எண்டால் என்ன? குட் மோனிங் கியலா கியன்ன. குட் மோனிங்க எண்டு சொல்லுங்க" என்றாராம். இது உங்களுக்கும்தான். யாரையும் கண்டால், சும்மா மோனிங் எண்டு சொல்லாம, குட் போட்டுச் சொல்லுங்க. தமிழ்ல சொன்னால் வணக்கம் போதும். குட் மோனிங் சொன்னால், வெரி குட் மோனிங் சொல்லுங்க, என்கிறார் நண்பர். நல்ல விசயம்.

அப்ப நன்றி சொன்னால், என்ன சொல்றது? அதுக்கு வாழ்க வளமுடன் எண்டு சொல்லலாம். தமிழ்ல உள்ள ழகரத்திற்கு மாபெரும் சக்தி இருக்காம். வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு கிடையாதாம். அதனாலதான் தமிழ சரியா உச்சரிச்சு பேசுற ஆக்கள் நல்லா இருக்கிறாங்க. சிலருக்கு எல்லாம் ரமில் எண்டபடியாலத்தான் பிரச்சினை. இனியாவது பாப்பம்!

Comments