வம்சாவளித் தமிழரின் தோற்றமும் வரலாற்று பின்னணியும் | தினகரன் வாரமஞ்சரி

வம்சாவளித் தமிழரின் தோற்றமும் வரலாற்று பின்னணியும்

டொனமூர் பிரபு தலைமை வகித்த இந்த ஆணைக்குழு தன்னுடைய பிரதான சிபாரிசுகளாக சர்வஜன வாக்குரிமையும் தனி அங்கத்துவ தேர்தல் முறையையும் பிரேரித்தது. சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் சொத்து, கல்வி என்ற கட்டுப்பாடுகளைத் தாண்டி 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை கிட்டியது. இப்புதிய தேர்தல் முறை மூலம் இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பான்மையாக இருந்த சாதாரண தோட்டத் தொழிலாள மக்கள் அரசியலில் ஈடுபடவும் முடிவுகளை எடுப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கிடைத்ததால் இந்திய வர்த்தக சமூகத்திடமிருந்த தலைமைத்துவம் மாறி தொழிலாளர் அரசியலில் ஈடுபட வழிகோலியது. கல்வி அந்தஸ்து என எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சாதாரண மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.

ஆனால் டொனமூர் முறையில் பாரபட்சங்களை வளர்க்கக்கூடிய ஒரு பலவீனமும் இருந்தது. அதாவது பெரும்பான்மையினராக சிங்களவர்கள் இருந்ததால் அவர்களுக்கு அதிகளவு ஆசனங்களை பெற்று இனங்களுக்கிடையே சமச்சீரற்ற நிலையை உருவாக்கி சிங்களப் பிரதிநிதிகளின் மேலாதிக்கத்திற்கு இம்முறை வழிவகுத்தது.

1931இல் இலங்கைக்கு வந்த டொனமூர் ஆணைக்குழு இலங்கையின் பல்லினத் தன்மை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த போதிலும் இவ்விடயத்தில் பிரிட்டனின் நீண்டகால நிர்வாக அனுபவத்தையும் கவர்னர் மானிங் செய்த எச்சரிக்கையையும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் தங்கள் சிபாரிசுகளை செய்தார்கள். சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்திய அதே நேரத்தில் சிறுபான்மை மக்கள் பிரதி நிதித்துவம் பாதிக்காத வகையில் சில ஏற்பாடுகளை டொனமூர் ஆணைக்குழு சிபாரிசு செய்திருக்கலாம். 1833ஆம் ஆண்டு கோல்புரூக் – கெமரோன் சீர்த்திருத்தத்தில் இருந்தும் பின்னரும் கற்றறிந்த பாடங்களை டொனமூர் ஆணைக்குழு கவனத்திற்கொள்ளவில்லை.

இதுபற்றி பின்னர் (1946) சோல்பரி ஆணைக்குழுவில் ஒரு அங்கத்தவராக செயற்பட்ட சேர். ப்ரெட்ரிக் ரீஸ் (Sri Fredric Rees) “மேலை நாட்டு முறை இலங்கை போன்ற ஒரு நாட்டில் அறிமுகப்படுத்தும்போது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை டொனமூர் ஆணைக்குழு சரிவர எடைபோடவில்லை” என விமர்சித்துள்ளார். சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கதாக இருப்பினும் தேர்தல்முறை பற்றி டொனமோர் ஆணைக்குழு போதிய கவனம் செலுத்தவில்லை. இலங்கையில் இன முரண்பாடுகள் வளர்வதற்கு டொனமூர் அரசியல் திட்டம் ஒரு அடித்தளமாக அமைந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

அரச சபை (State Council)

சர்வஜன வாக்குரிமை மூலம் தனி அங்கத்துவ தேர்தல் தொகுதிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரச சபை பிரித்தானிய ஆட்சி அதிகாரத்திற்குள் தான் செயற்பட வேண்டியிருந்தது. ஆனால் சட்டசபைக்கு இருந்த அதிகாரங்களைவிட கூடிய அதிகாரங்கள் அரச சபைக்கு அளிக்கப்பட்டன. தொகுதி நிர்ணயத்திற்காக நியமிக்கப்படும் இலங்கையரைக் கொண்ட ஆணைக்குழு மக்களின் எண்ணிக்கை வரையறைகளை அடிப்படையாக கொண்டு தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. முழு இலங்கையையும் 65 தனி அங்கத்தவர் தொகுதிகளாக பிரிக்க வேண்டும். இத் தொகுதிகளில் போட்டியிட்டு யார் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் வகிக்கின்றார்களோ அவர்களே அரச சபை அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை ஆணைக்குழுவின் சிபாரிசாக இருந்தது ஆனால் இந்த தொகுதிகளை வரையறை செய்யும்போது 50தொகுதிகளே வரையறை செய்யப்பட்டன. இது இலங்கையின் பல்லினத் தன்மை சரிவர கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிறுபான்மை பிரதிநிதிகள் முன்வைத்தார்கள்.

டொனமூர் திட்டம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும் என்று கூறி சிறுபான்மை இனத் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னர் கவர்னர் வில்லியம் மானிங் விடுத்த எச்சரிக்கையை சுட்டிக்காட்டி இலங்கையின் பல்லின மக்களுக்கிடையே நிலவுகின்ற உறவுகளை கணக்கில் எடுக்காது வரையப்பட்ட டொனமூர் திட்டம் பேரினவாதத்திற்கு தீனி போடுவதாகவே அமையும் என்று இந்தத் தலைவர்கள் எடுத்துரைத்தார்கள். ஆனால் பிரித்தானிய அரசு தனது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. புதிய நடைமுறைகளை புகுத்துவதில் டொனமூர் ஆணைக்குழு விடாப்பிடியாக இருந்தது. கொலனியல் அரசும் இதை ஆதரித்தது.

தொகுதி எண்ணிக்கை குறைப்பு:

ஆணைக்குழுவின் சிபாரிசின் படி 65 தொகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும் என்ற போதும் தொகுதி நிர்ணயத்தின் போது இத்தொகை 50 ஆக குறைக்கப்பட்டதால் சிறுபான்மை மக்களை மேலும் சமச்சீரற்ற நிலைமைக்கு தள்ளியது. மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போன்ற கதையாகிவிட்டது. சிறுபான்மை மக்களின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு சதியென அச்சமயத்தில் பலரும் குற்றம் சாட்டினர்.

1938ஆம் ஆண்டில் இலங்கை கவர்னராக இருந்த சேர். அன்ருகால்டிகொட் அச்சமயத்தில் பிரித்தானியாவின் காலனித்துவ அரச செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் அரச சபையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது விரும்பத்தக்கதல்ல. மேலும் 10 அங்கத்தவர்களுக்கு இடமளித்தாலேயே சிறுபான்மை மக்களின் நியாயமான பிரதிநித்துவத்தை சட்டசபையில் உறுதிசெய்வதாக அமையும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

டொனமூரின் சிபாரிசில் இருந்து குறைக்கப்பட்ட உறுப்பினர் தொகை 15 என்ற போதிலும் கவர்னர் கால்டிகொட் 10 அங்கத்தவர்களை அதிகரிக்கவேண்டும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததை சிறுபான்மை அங்கத்தவர்கள் விரும்பவில்லை. ஆயினும் அரச சபையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி கவர்னர் கால்டிகொட் இப்படியொரு கடிதத்தை எழுதியிருந்ததை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு அரச சபையில் தகுந்த இடமளிக்கப்படாதது தவறு என்பதை சபையில் அங்கம் வகித்த பெரும்பான்மை இன அங்கத்தவர்கள் கூட ஏற்றுக்கொண்டனர். எப்படி இருந்த போதிலும் கவர்னர் சிபாரிசு செய்த 10 அங்கத்தவர்களை கூட்டுவது பற்றிய கருத்தைக் கூட பிரித்தானிய அரசு நிராகரித்து விட்டது.

டொனமூர் திட்டத்தின் அடிப்படையிலான தேர்தல் முறை பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்றும் இது சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்து 1931இல் நடைபெற்ற அரச சபைத் தேர்தலை வடக்கு கிழக்கு இலங்கை தமிழ் தலைவர்கள் பகிஷ்கரித்தனர்.

இதனால் உறுப்பினர் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டு அங்கத்தவர் தொகை 50இல் இருந்து 46 ஆனது. 1934ஆம் ஆண்டிலேயே பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. (தொடரும்)

Comments