புதிய அரசியலமைப்பு, நிலமீட்பு; அரசுடன் நேரடியாக பேச முடிவு | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பு, நிலமீட்பு; அரசுடன் நேரடியாக பேச முடிவு

 மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம்

சிவம் பாக்கியநாதன் மட்டு விசேட நிருபர்

 

புதிய அரசியலமைப்பு, நிலமீட்பு, காணாமற்போனோர் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்கள் சம காலத்தில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதெனத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று (29) மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் இலங்கைத் தமிழர சுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயப்பட்டு கட்சியின் நிலைப்பாடு பற்றியும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியும் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்,

காணாமல் போனோர், காணிகள் விடுவிக்கப்படல் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான போராட்டங்கள பற்றி அரசோடு பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வைப் பெற்றுக் கொள்ளல்,

மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் படையினர் வசமுள்ள காணிகள், தனியார் காணிகள், மக்கள் பாவனைக்குள்ள அரச காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துதல்,

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் காணி விடுவிக்கப்பட்டமை நீண்ட காலமாக இருந்துவரும் வவுனியா வடக்கு உள்ளூராட்சி மன்ற எல்லை சம்பந்தமாக தீர்வைப் பெறுதல்,

பிரதேச செயலகங்களிலுள்ள தரவுகளின்படி புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் பொருளாதாரம், அரசியல் வாழ்க்கை மற்றும் வேலை வாய்ப்பு பற்றி தீர்மானம் மேற்கொள்ளல்,

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தலைமை தாங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கட்சி, கட்சி செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்வதோடு பொய்யான குற்றச்சாட்டுக்கள் இருக்கும் சூழ்நிலையை ஆராய்ந்து வெளியிடல்,

பாதிக்கப்பட்ட பெண்கள் கட்சியின் தலைவரிடம் கூற முடியாது போனால் எமது கட்சியின் இரு பெண் பிரதிநிதிகளிடம் வெளியிடலாம்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதோடு மேதினக் கூட்டம் ஆலையடிவேம்பில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம், கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments