இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்

நேர் கண்டவர் : தலவாக்கலை பி. கேதீஸ்   
 

உங்களுடைய அரசியல் பிரவேசம்?

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கொத்மலை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அதன் பின்னர் 2006 இல் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மாகாண சபை விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சராக நியமனம் பெற்றேன்.

கடந்த சில வருடங்களாக மத்திய மாகாண முதலமைச்சரின் கீழ் செயற்பட்டு வந்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு கடந்த மாதம் முதல் எனக்கு கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து மத்திய மாகாண தமிழ் கல்விக்கென ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வந்த நிலையில் மாகாண முதலமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் தமிழ்க்கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளீர்கள். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் முதன் முறையாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ்க்கல்வி அமைச்சை கேட்டு பெற்றார். அக்காலகட்டத்தில் மலையகத்தில் கல்வி வளர்ச்சி மிகமோசமாக காணப்பட்டது.

அதனை மேம்படுத்துவதுடன் மலையக மக்கள் கல்வியில் வளர்ச்சியடைந்து ஏனைய சமூகத்தவர்களைப்போல சரி சமமாக வாழவேண்டும் எனும் நோக்குடன் கல்வி அமைச்சை மத்திய அரசுடன் பேரம் பேசி பெற்றார். தமிழ்க்கல்வி அமைச்சினூடாக மலையகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென எண்ணினார். அவரது எண்ணம் ஈடேறியிருக்கிறது. இன்று மலையகத்தில் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது கனவு நனவாகி இருப்பதை காணமுடிகிறது. தமிழ்க்கல்வி அமைச்சின் மூலம் பல்வேறு நன்மைகளை மலையக சமூகம் பெற்றிருக்கிறது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் மலையகத்திலுள்ள ஒருசில அரசியல்வாதிகளும் சேர்ந்துகொண்டு மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சை எப்படியாவது இல்லாமல் செய்துவிட வேண்டும்எனச் செயற்படுகின்றனர். என இதுவே இந்த அமைச்சு கடந்த சில வருடங்களாக நம்மிடமிருந்து இல்லாமல் போக காரணமாக அமைந்தது.

 

மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வியின் நிலை எப்படியிருக்கின்றது?

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் பெரும்பான்மையினரின் கீழ்தான் செயற்பட்டது. பெரும்பான்மையினரின் கீழ் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு எவ்வாறு இயங்கியது என்பதை மத்திய மாகாண தமிழ் கல்வி அதிகாரிகளுக்கும் மற்றும் கல்விப் புலத்துடன் தொடர்புடையவர்களுக்கும் தெரியும்.

கடந்த ஒரு வருட காலமாக விவசாய அமைச்சுக்கு கீழ் மத்திய மாகாண கல்வி அமைச்சு இணைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு வருடகாலத்தில் எவ்வாறான சேவைகள் இந்த அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.

அந்த மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சை மீண்டும் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி மீண்டும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார். இந்த அமைச்சு முழுமையாக மீண்டும் 8.5.2017 மத்திய மாகாண விவசாய, இந்து கலாச்சார அமைச்சராக இருந்த என்னிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக கல்விச் சமூகத்திற்கு சிறப்பான சேவையாற்றுவேன். தொடர்ந்து வரும் காலங்களில் இந்த அமைச்சு எவ்வாறு செயற்படும் என்பதனை பொறுத்திருந்து பாருங்கள்.

 

மத்திய அரசாங்கத்தின் கல்வி இராஜாங்க அமைச்சு மாகாண தமிழ் கல்வி அமைச்சுக்குமிடையிலான உறவு எப்படி இருக்கின்றது?

எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மிகவும் சுமுகமாக இயங்கி வருகிறது. எனது அமைச்சு மத்திய அரசுடன் இணைந்தே கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பாடசாலைகள், மாகாண சபை நிர்வாகத்துக்குட்பட்ட பாடசாலைகள் என இயங்கினாலும் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறது.

மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு தேவையான உதவிகளை கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் கீழ் செயற்படுகின்ற அமைச்சும் மத்திய அரசாங்கத்தின் ஏனைய 5 முக்கிய அமைச்சுகளும் மத்திய மாகாண விவசாய இந்து கலாசார அமைச்சுடன் இணைந்தே செயற்படுகின்றது.

 

வெளிமாவட்ட மாணவர்கள் உயர்தரக் கல்வியை மத்திய மாகாணத்தில் தொடர முடியாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் பாடசாலைகளில் உயர்தர மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காணலாம்?

இப்பிரச்சினை பல வருடங்களாக இருந்து வந்தாலும் கடந்த வருடம் தான் இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவானது. பாதிப்புக்குள்ளான மாணவர்களை இடையில் எந்தவொரு பாடசாலையிலும் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது. இதுதொடர்பாக மத்திய மாகாண முதலமைச்சருடன் பேசி மீண்டும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தேன். இப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் அறிக்கைகளை விடுவதை தவிர்த்து, இதற்கான நிரந்தர தீர்வினைப்பெற வேண்டும்.

இப்பிரச்சினை அதிகமாக காணப்படுகின்ற பிரதேசங்களான இரத்தினபுரி, பதுளை போன்ற இடங்களில் அதற்கான பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும். எந்தெந்த பிரதேசங்களில் சிறுபான்மையினர் உயர்கல்வியை தொடர முடியாமல் சிக்கல்கள் அனுபவிக்கின்றார்களோ அங்கே பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும். தற்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் இராஜாங்க கல்வி அமைச்சு காணப்படுகின்ற படியால் அதனூடாக இப்பணியை சிறப்பாக செய்யலாம்.

 

மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன இது குறித்த உங்கள் கருத்தென்ன?

மலையகத்தை பொறுத்தவரை பல்கலைக்கழகம் என்பது முக்கியமானதொன்றாகும். மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் பலவருடங்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கபட்டு வருகின்றது. இருப்பினும் அதற்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லை. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது பெருந்தோட்ட பகுதிக்கு பல்கலைக்கழகம் மாத்திரமல்ல இன்னும் பல்வேறு முக்கிய வேலைத்திட்டங்களுக்கான அனுமதியும் அதற்கான நிதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஊடாக அன்றைய ஜனாதிபதியினால் கிடைக்கப்பெற்றது.

ஆட்சி மாற்றத்தினால் அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இருந்தும் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் நிர்மாணிப்பது குறித்து அண்மையில் நோர்வுூட் மைதானத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதன்போது மலையகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து செவிமடுத்த இந்திய பிரதமர் இது தொடர்பான ஆவணங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

மலையகக் கல்வி அபிவிருத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பங்களிப்பு எப்படியிருக்கிறது?

மலையக கல்விக்கு வித்திட்டவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் ஆவார். அவரின் அயராத முயற்சியினால்தான் இன்று மலையகம் கல்வி வளர்ச்சியில் உயர்வடைந்துள்ளது. அதேபோல் இன்றைய தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் மலையகக் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.

அவற்றை நாம் சொல்வதை விட இன்று முழு மலையகமே புரிந்துக்கொண்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மலையகத்திற்கு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்ட காலத்தை மாற்றியமைத்தவர் மறைந்த தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமான். இன்று எமது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பல்வேறு துறைசார்ந்த அறிவியலாளர்களாகவும் திகழ்கின்றனர்.

இன்று மலையக பாடசாலைகளில் கல்விப்பெறுபேறுகளை பார்க்கும்போது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. அன்று எம்மிடம் இருந்தது ஆசிரியர் தொழில் மட்டுமே. 1982, 1983ம் ஆண்டுகளில் செளமியமூர்த்தி தொண்டமானால் 500 ஆசிரியர் நியமனங்கள் மலையகத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன. அதில் 402 நியமனங்கள் கணித பாடம் சித்தியடையாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு ஆசிரியர் நியமனங்கள், ஏனைய அரச நியமனங்கள் மலையகத்திற்கு இ.தொ.காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்நியமனங்கள் அரசியல், கட்சி பேதமின்றி அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 2007 ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம், அண்மையில் உதவி ஆசிரியர் நியமனம் போன்றன இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானால் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டு தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் பாராளுமன்றம் சென்றார்.

அதன்பின்னரே மலையகமெங்கும் பாடசாலைகள் கட்டப்பட்டன. பின்னர் சீடா நிறுவனம் இலங்கைக்கு வந்தது. சீடா நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை மலையகத்திற்கு கொண்டுவர செளமியமூர்த்தி தொண்டமான் பெரும்பாடுபட்டார். சீடா மலையகத்திற்கு வந்த பின்னரே மலையகத்தில் கட்டிடங்களை காணமுடிந்தது. மலையக சமூகத்துடன் பெரும்பான்மை சமூகம் போட்டி போடுகின்ற அக்கால சூழ்நிலையிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை எமது சமூகத்திற்காக தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமான் செய்தார்.

தோட்டப் பாடசாலைகளாக இருந்த சகல பாடசாலைகளும் அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்டு முப்பத்தைந்து வருடங்களை கடந்துவிட்டன. பல்வேறு வெளிநாட்டு நிதி உதவியுடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்கள் பெருவாரியாக வழங்கப்பட்டு தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 75 வருட காலப் பகுதியில் மலையகத்தில் பாடசாலை கட்டடங்கள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் இன்று கல்வி வளர்ச்சியடைந்தமைக்கு காரணம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றால் மிகையாகாது. வடக்கு, கிழக்கு ஏனைய மாவட்டங்களிலுள்ள பட்டதாரிகள் உண்ணாவிரதம் போன்ற பல்வேறு பேராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் அணுகுமுறையின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மத்திய மாகாண முதலமைச்சருடன் இணைந்து மத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு கூடிய விரைவில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இது மலையக கல்வி வளர்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒரு முக்கிய பங்காகும்.

 

அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் மலையகத்தில் பலமானதொரு அமைப்பான இ.தொ.காவின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் பற்றி கூறமுடியுமா?

இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தொழிற்சங்க ரீதியில் மலையக மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. கடந்த காலத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருந்தபோது மலையக மக்களுக்கு எந்தவித அரசியல் வேறுபாடுமில்லாமல் சேவை செய்துள்ளது. அதன் காரணமாகவே இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி எந்த ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை தொழிலாளா் காங்கிரஸை எவராலும் அழித்துவிட முடியாது.

இந்த நாட்டின் அரசியல் தலைவா்களான அனைவரிடமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பிலும் அதன் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பிலும் மிக உயர்ந்த நன்மதிப்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. இதற்கு காரணம் காங்கிரசின் முடிவுகள் அனைத்தும் கொள்கை ரீதியானதாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருந்துவந்ததேயாகும். அதனால் எவரிடமும் தலைநிமிர்ந்து தைரியமாக பேசக்கூடிய வல்லமை காங்கிரசிற்கு மட்டுமே இருக்கிறது.

எந்தவொரு தேசிய தலைமையையும் சுயநலனுக்காக முதுகில் குத்திவிட்டு பின்னர் அவர்களின் முகத்தில் முழிக்க முடியாமல் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு ஏற்பட்டதில்லை.

எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரசஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மலையக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

இ.தொ.கா.வின் சேவை மலையக மக்களுக்கு என்றும் தேவை எனவே தொடர்ந்து மலையக மக்களுக்காக இ.தொ.காவின் மக்கள் பணி தொடரும் என்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரசஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்.

Comments