தரம் பிரித்தால் மட்டுமே குப்பைகள் சேகரிப்பு... | தினகரன் வாரமஞ்சரி

தரம் பிரித்தால் மட்டுமே குப்பைகள் சேகரிப்பு...

போல் வில்சன்

நகர சபை என்றால் நகரத்தை சுத்திகரிப்பது என்பதே மக்களின் மனங்களில் பதிந்துள்ள சொல்லாகும். நகர சபைக்கு தெரிவு செய்யப்படும் அங்கத்தினர் மக்களின் தேவைகளின் பிரதான சேவையாக செயற்படும் நகரத்தை சுத்திகரிக்கும் சேவை பிரதானமாக காணப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன் சகல சுத்திகரிப்பாளர்களும் நகர சபை ஊழியர்களாகவே இருந்தனர். ஆனால், மக்கள் பிரதிநிதிகள் அச்சேவையிலிருந்து நழுவி அப்பணியை தனிநபர் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, கைகளை கழுவிவிட்டனர். இதனால் குப்பை பிரச்சினைகள் குறித்து நகர சபைகள் மௌனம் சாதிக்கின்றன.

ஆனாலும், மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததின் பின் கொழும்பு மாநகர சபையால் கொழும்பு மாநகர வீதிகளிலும், வீடுகளிலும் குப்பை சேகரிப்பு மந்த போக்கிலேயே காணப்படுகின்றது. ஆனாலும் கடந்த வாரங்ளில் கொழும்பு வீதி சந்திகளிலும், குடியிருப்பு தொகுதி பகுதிகளிலும் குப்பை கொட்டப்பட்டு சிறிய குப்பை மேடு உருவாக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகயிருந்தது.

தற்போது குப்பை சேகரிப்பு உணவு கழிவுகள், பிளாஸ்டிக், கண்ணாடி, பத்திரிகை என்ற ரீதியில் வகை பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டாலும், சில இடங்களில் அவை ஒன்றாகவே சேகரிக்கப்படுகின்றது. ஆனாலும் வகை பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படும் குப்பைகளில் தரம் பிரித்து வைக்காவிட்டால் அக்குப்பைகளைச் சேகரிப்போர் கொண்டு செல்வதில்லை.

சில வீட்டு மதில் சுவர்களில் குப்பைகள் பொலித்தீன் பையில் தொங்கவிடப்பட்டிருப்பதையும், சில வீட்டின் வளவிற்குள்ளேயே குப்பைகளை வைத்திருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. அப்படியிருந்தும் கடந்த வாரங்களில் வீதியெங்கும் அல்லது சில குடியிருப்பு பகுதிகளில் மிக அலங்கோலமாக, துர்நாற்றத்துடன் குப்பைகள் நிறைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இவைகளை வீதி சந்தியில் அல்லது குப்பை குவிந்திருக்கும் இடத்தில் கொட்டுபவர்களிடம் விசாரித்தபோது, கடந்த சில தினங்களாக குப்பை சேகரிப்போர் வரவில்லை. அத்துடன் எமது வீட்டில் குறிப்பிட்டளவுதான் குப்பை சேகரித்து வைக்க முடியும். அதற்கு மேற்சேகரிக்க முடியாது. அத்துடன், வீட்டிற்குள் எலிகளும், கரப்பான் உட்பட எறும்பு, ஈக்களின் பெருக்கமும் காணப்படுகின்றது. இவற்றை எமது வீட்டிலிருந்த கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்றால் குப்பைகளை உடனுக்குடன் அகற்றப்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மீன், இறைச்சி கழிவுகளை நகர சபை லொறிவரும் வரை தங்களது குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருப்பதாகவும் வயது முதிர்ந்த தாய் ஒருவர் மனவேதனையுடன் குறிப்பிட்டார். உடனுக்குடன் உணவு கழிவுகள் அகற்றப்பாவிட்டால் இவற்றில் புழு உருவாகி வீட்டிற்குள் துர்நாற்றமும் உருவாகுவதாக ஒரு தாய் குறிப்பிட்டார்.

ஒரு குடியிருப்புக்கு முன்பாக மலையளவில் கொட்டப்பட்டிருந்த குப்பையை குறித்து விசாரித்த போது, எமது குடியிருப்பிலிருந்து சிலர் இவ்விடத்தில் குப்பையை கொட்டியது உண்மையாயினும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்பகுதியிலுள்ளவர்கள் இவ்விடத்திற்கு கொண்டு வந்து குப்பைகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனாலேயே இவ்வளவு குப்பைகள் சேர்ந்துள்ளது. எமக்கு எமது வீட்டிற்குள் இருக்க முடியவில்லை, துர்நாற்றம் வீசுகிறது என்றார். ஆனாலும் குப்பையிருக்கும் இடத்தை நோக்கியே குப்பைகள் வந்து சேர்வது தவிர்க்க முடியாது என்று மற்றுமொரு நபர் குறிப்பிட்டார்.

இக்குப்பைகளை வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக வைக்கவும் முடியாதுள்ளது. சில வேளைகளில் காகம், நாய் போன்றவற்றினால் இவை இழுக்கப்பட்டு சிதறடிக்கிறது. அத்துடன், குப்பைகளிலிருந்து குறிப்பிட்ட பொருட்களை மட்டும் நாடிவரும் நபர்களும் குப்பைகளை கிளறிவிட்டு, குப்பைகளை வீதிகளில் இழுத்துவிட்டு செல்லுகின்றனர் என்றார் குடியிருப்பு வாசி ஒருவர்.

கார்ட்போர்ட் ஒரு கிலோ 35 ரூபாவுக்கும், பழைய இரும்பு ஒரு கிலோ 40 ரூபாவுக்கும், பொலித்தீன் ஒரு கிலோ 50-- ரூபாவுக்கும் மற்றும் குப்பைகளிலுள்ள பித்தளை, அலுமினியம் போன்றவற்றின் விலை ஒரு கிலோ நூறை தண்டியுள்ளது. பிளாஸ்டிக் சில நிறுவனங்களினால் கொள்வனவு செய்யப்படுகிறது என்றார் ஒரு அன்பர். பழைய போத்தல் பேப்பர் கடைக்கார்ர் இவைகளை கொள்வனவு செய்து சமுதாயத்திற்கு சேவையாற்றுகின்றனர். இதுதான் குப்பைகளும் பணமாக்கப்படுவதாக நண்பர் ஒருவர் குறிப்பிட்டாலும், மக்கும் குப்பைகளை வீட்டுப் பாவனை உரமாக மாற்றமுடியும் என்று அரச துண்டுபிரசுரத்தினூடாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதற்கான வழிமுறைகளும் கையாளப்பட்டு வருகின்றன. சில உள்ளூராட்சி மன்றங்களில் குப்பையை பணமாக மாற்றும் செயலிலும் ஈடுபட்டு, இயற்கை உரத்தை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.

கைகரத்தை என்று குறிப்பிடப்படும் தள்ளுவண்டி மூலம் சுத்திகரிப்பு தொழிலாளியிடம் நபரிடம் விசாரித்த போது, எமது கடமை வீதிகளை சுத்தம் செய்வதாகும். வீதிகளில் இருமருங்கிலுமுள்ள கூட்டி சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு, இப்பகுதி நேர்த்தியாக வைத்திருக்க வேண்டியது எமது பொறுப்பாகும். நாம் குழுவாகவே செயற்படுகிறோம். எமது மேற்பார்வையாளர் இவைகளை பார்வையிடுவார்.

சில ஒழுங்கைகளிலுள்ள வீடு களிலும் குப்பைகளை சேகரிப்பது உண்டு. இதுவும் எமக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியாகும். அத்துடன், சேகரிக்கப்படும் இக்குப்பைகளை நாம் குறிப்பிட்ட இடத்தில் லொறிகளில் ஏற்றிவிடுவோம். இதற்கான செயற்பாடு எமது நகர சபை சுத்திகரிப்பு சேவை வட்டாரத்திலிருந்து ஒழுங்கு செய்யப்படும் என்றார்.

நகர சபை சுத்திகரிப்பு லொறியாளரிடம் குப்பை சேகரிப்பை பற்றி விசாரித்த போது, எமக்கு உள்ள ஒரே பிரச்சினை குப்பை தரம் பிரிக்காது, வைப்பதினால் சேகரிப்பின் பணி தடைப்படுகிறது. நாம் சில பகுதிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேல் செல்லும் வேளையும் உண்டு. ஒருசிலர் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறைவாகவே உள்ளது என்றார். அத்துடன், சேகரிக்கப்படும் குப்பைகளை ஏதோ ஓரிடத்தில் கொட்டப்பட வேண்டும். கொட்டப்பட்டப் பின்பே லொறி சேகரிப்பு பணிக்கு திரும்பும் என்றார்.

கொழும்பு மாநகர ஆணையாளர் வி.கே.ஏ. அனுர கருத்து தெரிவிக்கையில், மாநகரில் கடந்த வாரங்களில் குப்பை எடுக்காமல் இருந்ததன் மூலம் கொழும்பு வாழ் மக்கள் இதன் பலாபலனை தெரிந்திருப்பார்கள். அத்துடன், சிலர் வீதிகளில் தங்கள் குப்பைகளை எறிந்துவிட்டுச் சென்றனர். இனிவரும் தினங்களில் வீதிகளில் குப்பையை எறிந்துவிட்டுச் சென்றால் முப்படையினரின் உதவியோடு அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். அத்துடன் தண்டமும் அறவிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குப்பைகூழங்களை அகற்றுவதற்காக சிலர் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு பணம் கொடுப்பதின் மூலம் சமுதாயத்திற்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

அத்துடன், லஞ்சம் கொடுப்பதுவே பிரதான குற்றமாக கணிக்கப்படும் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். குப்பையை சேகரிப்பது அவர்களது தொழில் என்பதையும் கொழும்பு மாநகர ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வாரத்திற்கு ஒரு முறை மக்கும் குப்பை (உணவு கழிவுகள்) சேகரிக்கப்படும். இருவாரத்திற்கு ஒரு முறை பொலித்தீன் உட்பட ஏனைய குப்பைகள் சேகரிக்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அத்துடன் குப்பைகளை தரம்பிரித்து வைக்கப்பட வேண்டும். தரம்பிரிக்கவிட்டால் நகர சபை ஊழியர்கள் அதற்கு பொறுப்பு கூறமாட்டார்கள். அதாவது, பச்சை நிற பாஸ்கட் மக்கும் பொருட்கள் / உணவு கழிவுகள், நீலநிற பாஸ்கட் காகிதம்/ போர்ட் வகைகள், சிகப்பு நிற பாஸ்கட் கண்ணாடிபொருட்கள், மஞ்சள்நிற பாஸ்கட் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாமும் தரம் பிரிக்கப்பட்டவை குறிப்பிட்ட நிற பாஸ்கட்டில் இடவேண்டும். அதுவே நகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு நாம் உதவும் பணியாகும். அவர்களது கடமைகள் சீராக செய்வதற்கு அது வசதியை உருவாக்கும். ஐரோப்பிய நாடுகளில் குப்பை தரம்பிரித்தே சேகரிப்பதாவும், அங்குள்ள மக்கள் அவற்றுக்கு பழக்கப்பட்டு, வீதியையும், சூழலையும் அசுத்தப்படுத்தாமல் ஒரு முன்மாதிரியான நிலையை உருவாக்கியுள்ளனர் என்றார் நண்பர் ஒருவர்.

எதிர்காலத்தில் தேவையற்ற குப்பைகளை நாம் சுமக்காமல், நாம் பொருட்களை வாங்கும் இடத்திலேயே அவைகளை அகற்றிவிட வேண்டும். அவைகளை வீட்டிற்குள் கொண்டுவந்த பின்பு குப்பையை அகற்றுவது பிரச்சினைகளை உருவாக்கலாம். விசேடமாக மீன், இறைச்சி வாங்கும் போது, வாங்கும் இடத்திலேயே துப்பரவு செய்து வாங்கும் போது, அதன் கழிவுகள் குறித்து பிரச்சினைகள் எழா. குப்பை... குப்பை... என்று குழப்பாமல், அதற்கான சீரான செயற்பாட்டில் இறங்குவோமாக. நாமும் குப்பைகளை தரம் பிரிப்போம். சிறப்பு மிக்க சூழலை உருவாக்குவோம்.

Comments