பின்னவல யானைகள் சரணாலயம் | தினகரன் வாரமஞ்சரி

பின்னவல யானைகள் சரணாலயம்

உலகில் பெரிய அநாதை யானைகளைப் பராமரிக்கும் பின்னவலயானது, சபரகமுவ மாகாணத்தில் கேகாலை நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இந்த சரணாலயம் 1975ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

ரம்புக்கன பிரதான வீதியில் கிழக்குப் பகுதி யானைகளின் வதிவிடப் பிரதேசமாகும். பிரதான பாதையில் விடுதிகள், குளிர்பான கொட்டகைகள், தூங்குவதற்கான உறக்கத்தளம், விலங்கு வைத்திய வசதி என்பவற்றைக் கொண்ட முகாமைக் கட்டிடத் தொகுதியும் இச்சரணாலயத்தில் உள்ளது.

யானைகள் குளிப்பதையும், விளையாடுவதையும் கண்டுகளிக்கும் வசதி ஆற்றோரத்தில் காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் யானைகள் குளிப்பதையும், அவை விளையாடுவதையும் விரும்புவதோடு அவற்றோடு நேசமுடன் பழகுவதையும் அவதானிக்கலாம்.

தாய் யானைகளால் கைவிடப்பட்ட இளம் மற்றும் குட்டி யானைகளுக்கு உணவளிப்பதும் அவற்றுக்கு தங்குமிட வசதியோடும் பாதுகாப்பையும் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சரணாலயம் ஒரு உல்லாசப் பயணத்தளமாகவும் மாறிவருகின்றது.

இச்சரணாலயத்தில் ஐம்பது யானைப் பாகர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் யானைகளுக்கு உணவளித்து கரிசனையோடு பாதுகாத்து வருகின்றனர். பலாக்காய், தேங்காய், கித்துள், புளி மற்றும் புல் போன்றவை யானைகளின் உணவுக்காக பெருந்தொகையாகக் கொண்டுவரப்படுகின்றன.

பின்னவல சரணாலயத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் யானைகளை கண்டுகளிப்பதை படங்களில் காணலாம்.

 

(கே.ஏ. அலீம் - கம்பளை

தினகரன் நிருபர்) 

Comments