விக்கியே முதலமைச்சர்; மாகாண சபை தொடரும் | தினகரன் வாரமஞ்சரி

விக்கியே முதலமைச்சர்; மாகாண சபை தொடரும்

விசு கருணாநிதி

 

டக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களின் ஊழல் விவகாரத்தால் பிளவுபட்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீள ஒன்றிணைக்கும் சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை விவகாரத்தால் முரண்பட்டுள்ள இரண்டு தரப்புகளையும் இணைப்பதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகள் நேற்றும் (17) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்களைத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்

குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் மேற்கொண்ட தொடர்பாடலின் விளைவாக இரு தரப்பினரும் சமரசத்தீர்வுக்கான சமிக்ைஞயை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்களைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும் முதலமைச்சரின் முடிவு மாற்றப்பட வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் கோரிக்ைகயை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தபோது, அதற்கு இணக்கம் தெரிவித்த முதலமைச்சர், இரண்டு அமைச்சர்களும் தம்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இடையூறு விளைவிக்க மாட்டார்கள் என எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்ெகாண்டிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர்களிடம் முதலமைச்சரின் நிலைப்பாட்டை சமரசப் பேச்சுக்கான தொடர்பாளர்கள் விளக்கியுள்ளனர். எனினும், அதற்கு அவசியமில்லை எனவும் விசாரரணக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பதிலளித்துள்ளனர். இதனிடையே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஓர் அவசர கடிதமொன்றை முதலமைச்சருக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

அதில், குற்றஞ்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்கள் தொடர்பான தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள முதலமைச்சர், குறித்த அமைச்சர்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் விசாரணக்கு ஒத்துழைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலைமையின் கீழ், இரு தரப்பிலும் சிறு சிறு கோரிக்ைககளே முன்வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நம்பிக்ைக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்குத் தீர்வு காணுமுகமாக குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இரு தரப்புக்குமிடையிலான தொடர்பாடல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபை குழப்பத்தால், தமிழரசுக் கட்சியின் மீதும் கூட்டமைப்பின் மீதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியான நிலையைப் போக்க வேண்டுமாயின், மாகாண சபை நிர்வாகம் மீண்டும் சுமுகமாக இயங்க வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் அக்கறைகொண்டு செயற்பட வேண்டும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய, எதிர்த்தரப்பினர் எதிர்பார்த்ததைப்போலன்றி மீண்டும் வட மாகாண சபை நீதியரசர் விக்கினேஸ்வரனையே முதலமைச்சராகக்ெகாண்டு தொடர்ந்து இயங்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments