உள்ளத்திற்குள்ளே ஒளிந்திருப்பது... | தினகரன் வாரமஞ்சரி

உள்ளத்திற்குள்ளே ஒளிந்திருப்பது...

இண்டைக்குத் தந்தையர் தினம். எல்லா அப்பாக்களுக்கும் வாழ்த்துகளச் சொல்ல வேணும். ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்துக்ெகாண்டு ஓர் எதிரியைப்போல் தெரியும் உறவு அப்பா மட்டுமே! அவர் இருக்கும் வரை அவர் அருமை பல பேருக்குத் தெரிவதில்லை என்பது சினிமா வசனமென நினைத்தாலும், பல மகன்மாரின் மனச்சாட்சியை உறுத்திக்ெகாண்டிருப்பவர் அப்பா!

வாழ்க்கையின் ஒவ்வொரு தடத்திலும் தன்னம்பிக்ைகயையும் தளராத நெஞ்சுறுதியையும் தந்து வழிநடத்துபவர் அப்பா! ஆனால், பிள்ளைகளுக்ெகல்லாம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திற்காகவும் தொழில்வாய்ப்புகளுக்கான நேர்முகத் தேர்வின்போதும் மட்டுமே விளிக்கப்படுகிறார் அப்பா. வாழ்க்ைகக்கு அர்த்தத்தைக் கற்றுக்ெகாடுக்கும் கல்லூரி அப்பாவைத் தவிர வேறு என்னதான் இருக்க முடியும்?

இந்த அப்பாக்களின் மனத்துள் பொதிந்து கிடக்கும் சமாச்சாரங்களை அம்மாவும் அறியமாட்டாள். ஆழ் மனத்தில் அமைதியாய் உறங்கிக்ெகாண்டிருக்கும் பாசப்பிணைப்பை, அன்பின் உச்சத்தை, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான உள்ளத்து உணர்வுகளை அப்பாவின் முகத்திலோ நடத்தையிலோ கண்டுபிடிக்க முடியாது!

கலகலப்பாகப் பேசிச் சிரித்து மகிழ்ந்தாலும் ஒவ்வோர் அப்பாக்களின் மனத்திலும் எத்தனையோ சுமைகள், சோகங்கள் குடிகொண்டிருக்கும். சில சமயம் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாகத் தோன்றும். உண்மையில் அப்பதான் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்துக்ெகாண்டிருப்பார். தூரத்தில் இருக்கும்போது அன்பு இல்லாதவர்போல் தெரிந்தாலும் அருகில் சென்று பார்த்தால்தான் அப்பாவின் அன்பு தெரியும். வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை. தூரத்தில் இருப்பது தௌிவாகத் தெரிந்தாலும், அருகில் வரும்போது மட்டுந்தான் பொருள் புரிகிறது.

இப்பிடித்தான் அலுவலகத்திலை ஒரு சாரதி. அறுபதை நெருங்கும் வயது. எந்நேரமும் கலகலப்பாக இருப்பார். காலையானாலும் சரி மாலையானாலும் சரி, அழைத்துச்செல்லும்போதெல்லாம் சிரித்த முகமாகவே காணப்படுவார். பாதுகாப்பு ஊழியர்களிடம் நகைச்சுவையாகக் கதைப்பதும், உத்தியோகத்தர்களுக்கு வணக்கம் சொல்வதும் அவரின் தனித்துவ பழக்கம். அவரைப் பார்க்க பலருக்கும் எரிச்சல், பொறாமை. என்னடா இவன் இப்பிடி சந்தோசமாக இருக்கிறானே எண்டு. இருக்கத்தானே செய்யும். எத்தனைபேர் சிடுசிடுவெனப் பரபரப்பாகப் பணியாற்றுகிறார்கள். சிலரின் வாய் திறப்பதற்கே தவமிருக்க வேண்டும். பதவி இடைவெளி இருக்க வேண்டும் என்பதற்காகச் சிலபேர் சக ஊழியர்களிடமே எரிந்து விழுவார்கள். அவர்கள் உம்மென இருப்பதைப்போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பாங்க. இன்னுஞ்சிலர் தங்கட சோகத்தை சதா முகத்திலையே காட்டிக்ெகாண்டு இருப்பாங்க. வேறு சிலர், என்னதான் தலையே போகும் பிரச்சினை என்றாலும், அலட்டிக்ெகாள்ளமாட்டார்கள் அப்பாக்களைப்போல.

Problems cannot be solved by worrying them என்பார்கள். பிரச்சினைகளப்பற்றிக் கவலைப்பட்டால் அவை தீரப்போவதில்லை. இதனைப் பலர் புரிஞ்சுகொள்ளமாட்டாங்க. அழுது புலம்புவது மட்டுமில்லாம, அதையே நினைச்சு உருகுவாங்க.

என்றாலும், இந்தச் சாரதியைப் பார்க்க பிரச்சினை இருப்பவர்போல் தெரியவில்லை. அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் மனங்கோணிக் காணவில்லை. இதைப்பற்றிச் சகபாடி ஒருவரிடம் சொன்னேன். யார், அவரா? என்றவர், அவரின் கதை மிக மிக சோகக் கதை. என்னிடம் ஒரு நாள் அவரின் கதையைச் சொன்னார். கண் கலங்கிப்போனேன் என்று சாரதி சொன்ன விடயத்தைச் சொன்னார்.

"நான் இங்க வேலைக்கு வந்து முப்பத்தைஞ்சு வருசம். மூணு பிள்ளைகள் இருக்கிறாங்க. மூணுபேரும் நல்லா படிச்சிருக்காங்க. சொந்தமாக வீடு இருக்கு. இருந்தாலும் இந்த முப்பத்தைஞ்சு வருசத்திலை, நான் ஒரு நாளும் வீட்டாரோடு இருந்ததில்லை. குடும்பத்தில் நல்லது கெட்டது எதுக்கும் போனது இல்லை. இப்ப நான் வேலை செய்து ஓய்வெடுக்கப்போறன். நான் வீட்டிலை இருக்கும்போது என் பிள்ளைகள் என்னோடு இருக்கமாட்டார்கள். தொழிலுக்காக வீட்டை விட்டு வந்து உழைத்துக்ெகாண்டிருக்கிறன். பணத்தைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. உங்களுக்குத் தெரியுமா? எண்டு கேட்டிருக்கிறார் சாரதி! கதையைச் சொல்லிக்ெகாண்டே கண்கலங்கினார் சகபாடி! ஏனெண்டால், அவரின் நிலையும் அதுதான்.

பொதுவாக சாரதிப் பணியாற்றுபவர்களின் நிலைமை இதுதான். அதுவும் வீட்டைவிட்டுத் தொலைவுக்கு வந்து பணியாற்றுவதென்றால் சொல்லவும் வேண்டாம். இதில் சாரதிக்கு மட்டுமெண்டு சொல்லவும் முடியாது. தூரத்தில் பணியாற்றுபவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் இதுதான் நிலைமை. அதிலும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு விடுமுறை எடுப்பதென்பது மிகச் சிரமம். என்ன நடந்தாலும். அவர்கள் தொழிலுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இன்னும் காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் பணியாற்றும் அப்பாக்களின் நிலைமையும் கொடுமையானது. ஆசாபாசங்களை மனத்தில் அடக்கிக்ெகாண்டு வீட்டை விட்டுத் தூர தேசத்தில் பணியாற்றும் இளைஞர்களின் நிலையைக் குடும்பத்தவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். அதுவும் அப்பாக்களாக இருந்தால், அவர்களின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் ஒளிந்திருக்கும். அந்த ஒளிந்திருக்கும் உள் மன ரகசியத்தின் பொருளைப் புரிந்துகொள்ள எந்தப் பிள்ளையும் முயற்சிப்பதில்லை.

இன்றைய தந்தையர் தினத்தில் அப்பாக்களைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்ெகாள்வதே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். வாழ்க மானுட தெய்வம்! 

Comments