சிறையிலிருப்பவர்கள் தொடர்பில் அன்பு, கருணையுடன் செயலாற்ற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சிறையிலிருப்பவர்கள் தொடர்பில் அன்பு, கருணையுடன் செயலாற்ற வேண்டும்

இலங்கை கைதிகள் நலன்புரி சங்கத்தின்  நூற்றாண்டு விழாவில்  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  அவர்கள் ஆற்றிய உரை

இலங்கை கைதிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

மனிதாபிமானத்தின் பேரால் நோக்கும் பல்வேறு பார்வைகள் ஊடாகவே கைதிகளின் பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. ஒருபுறம் ஆன்மீக சமூகம் என்ற ரீதியிலும், மறுபுறம் சட்ட ரீதியிலும், பல்வேறுவிதமான மனிதர்களால் சமூகத்தில் இயக்கப்படும் அமைப்புகளின் தீர்மானங்களாலும் அவை வெளிப்படுகின்றன. எனக்கு தெரிந்தளவில் எமது நாட்டிலும் உலகிலும் கைதிகளின் பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல. மனித குலதோற்றத்திலிருந்தே கைதிகள் உருவாகினார்கள். அது வரலாற்று காலத்திலிருந்தே இடம்பெற்றதாகும்.

மனிதகுல தோற்றம் பல்வேறு யுகங்களைத் தாண்டியது என்பது எமக்கு தெரியும். கற்காலத்துக்கு முன்பிருந்தே பலசாலிகள் பலமற்றவர்களை அடிமைப்படுத்தும் முறை காணப்பட்டது. அந்த அடிமைப்படுத்தலை நாம் ஏற்றுக்கொள்ளாத போதிலும், இன்று உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், அந்த அடிமைப்படுத்தல்கள் இன்றும் இடம்பெறுகின்றன. எனவே, மனிதர்களிடமுள்ள தயை, கருணை, அன்பு, பாசம், நேசம் போன்றவற்றுடன் மனிதாபிமானமாக நாம் எப்போதும் மனிதர்களை மனிதர்களாக பார்த்தே பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுகிறோம் என்று நம்புகிறேன்.

சிறையிலுள்ள கைதிகள், மற்றும் தடுப்பு காவலிலுள்ளோர் பெரும்பாலும் குற்றம் செய்திருக்கலாம், அல்லது செய்யாதவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் எப்படியானவர்களாக இருந்தாலும் சமூகத்தின் அன்பையும், மனிதாபிமானத்தையும் எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் அவர்கள் தவறிழைத்திருக்கலாம். சமூக செயற்பாடுகளின் போது சமூகத்தை பிரச்சினைகளிலிருந்து மீட்பதற்கான பொறுப்பு எமக்கிருக்கிறது. அந்த செயற்பாடுகளில் சமூகத்தை அணிதிரட்டும் பொறுப்பை மதகுருமார் மேற்கொள்கின்றனர். அதற்கு அடுத்த மட்டத்தில் அரசாங்கம், அரச அலுவலர்கள் இருக்கலாம். அரச சார்பற்ற நிறுவனங்களாக இருக்கலாம். அந்த பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்களின் எதிர்ப்பார்ப்புகளை அடைவது முக்கியமானதாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறைச்சாலைகளின் நிலைமை தொடர்பான விபரங்கள் எனக்கு கிடைத்துள்ளன. சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது 2015 அறிக்கையில் தெளிவாக தெரிகிறது. 2015 ஆம் ஆண்டில் 24,086 பேர் சிறைக்கு வரும்போது 25,804 பேர் விடுதலைபெற்று சென்றுள்ளனர். 2015 ஆண்டு சிறைக்கைதிகளில் 43.7 சதவீதமானோர் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைக்கு சென்றவர்களாவர். இந்தளவு தொகையானோர் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையிலிருப்பதை பெரிய அபத்தமாகவே கருதுகிறேன். இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பிலேயே நாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்க சட்டதிட்டங்கள் மற்றும் அரச கொள்கைகளிலும் அதற்கு புறம்பான பல்வேறு சமூக அமைப்புக்களாலும் அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பது முக்கியமானதாகும். எனவே இந்த கூட்டத்துக்கு வருகைதந்த போது வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய இந்த விடயம் தொடர்பில் உரிய அரசாங்க தரப்பினருடன் கலந்துரையாடி அந்த கைதிகளை விடுவிப்பதற்கான திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் திட்டமிட வேண்டுமென நினைத்தேன்.

அத்துடன் 2015 ஆண்டில் 46.4 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றமிழைத்தவர்கள். அது பாரிய தொகையாகும். போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுக்கும் பல திட்டங்களும் இதற்கு காரணமாகும். ஆனால் பிரச்சினை எந்தளவு பாரதூரமாக உள்ளது என்பதனை நாடென்ற ரீதியில் மனதில் கொள்ள வேண்டும். அதற்காக தற்போதிருப்பதைவிடவும் வினைத்திறனான நடவடிக்கைகள் தேவை என்பதனை நாமனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக அரசாங்கமும், பொதுமக்களும், ஏனைய தொடர்புடைய நிறுவனங்களும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அது 2011 ஆண்டுடன் ஒப்பீடாக பார்க்கையில் தெளிவான அதிகரிப்பாகும். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதன் வினைத்திறனையே அது காட்டுகிறது. பொலிஸ், மதுவரித் துறை போன்ற நிறுவனங்கள் தமது பொறுப்பை நிறைவேற்றி, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். அது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியொருவர் அண்மையில் கொல்லப்பட்டார். இன்னொரு அதிகாரி ஆபத்தான நிலையில் இருக்கிறார். அப்பாவிப்பிள்ளையொருவர் இறந்து போனார். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் தமது கடத்தலை பாரதூரமாக முன்னெடுத்து வருகின்றனர். சில வேளைகளில் அவர்கள் அரசாங்கங்களை உருவாக்குகின்றனர். ஆட்சிகளை கவிழ்க்கின்றனர். 2015 ஆண்டில் கைதிகளில் 58 சதவீதமானோர் திருமணமான ஆண்களாவர். இவ்வாறான பல விடயங்கள் அறிக்கையில் உள்ளன.

என்னை உரையாற்ற அழைத்தவர் இந்த விடயம் தொடர்பில் எனக்கு அனுபவம் இருப்பதாக குறிப்பிட்டார். எனது 19 வயதில் நாட்டிலுள்ள மிக மோசமான சிறைச்சாலையில் ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன். 71 ஆம் ஆண்டு சம்பவங்களுடன் எதுவித தொடர்பும் இல்லாத என்னையும், சில மாணவர்களையும் எமது பாடசாலையின் அதிபரே அந்த நிலைக்கு தள்ளிவிட்டார். அந்த ஒன்றரை ஆண்டுகாலம் எனக்கு மிகவும் முக்கியமான காலம் என்று நான் கருதுகிறேன்.

என்னை சிறைவைத்திருந்த மட்டக்களப்பு இருண்ட சிறைக்கூடத்தை நான் ஜனாதிபதியான பின்னர் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் ஆறு பேரை வைத்திருந்தனர் என்பதனை நினைத்துப் பார்த்தேன். அந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே நான் புத்தகங்களை கூடுதலாக வாசித்தேன். அதனால் அந்த ஒன்றரை ஆண்டுகள் வீணாகப் போகவில்லை. 71 ஏப்ரல் மாதமே உயர்தர பரீட்சை எழுத இருந்தேன். 71 ஏப்ரல் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அதன் பின்னர், கைவிலங்குடன் அம்பாறை உகன மகா வித்தியாலத்துக்கு சென்று 72 ஏப்ரலில் சிறையிலிருந்தே உயர்தரப் பரீட்சை எழுதினேன். அந்த சம்பவம் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதென கருதுகிறேன்.

எம்முடன் ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், அம்பாறை ஹாடி தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் இருந்தார்கள். எனது சமவயதுடைய 300 மாணவர்கள் இருந்தார்கள். அங்கிருந்த ஆசிரியர்கள் எமக்கு புத்தகங்களைக் கொண்டுவந்து கற்பித்தார்கள். அதனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்தது தெரியாது. அந்த வாழ்க்கையை சிறந்த அனுபவப் பாடமாகவே கருதுகிறேன்.

எனவே, இப்போது சிறையில் இருப்பவர்கள் தொடர்பில் நாம் கருணையுடனும், அன்புடனும் செயலாற்ற வேண்டும்.

குற்றவாளியாக்கப்பட்ட சிலர் குற்றமிழைக்காதவர்கள் என்பது சில வேளைகளில் எமக்குத் தெரியும். சிலர் குற்றம் செய்து தண்டனை அனுபவிக்கின்றனர். சிலர் குற்றமிழைக்காமல் தண்டனை அனுபவிக்கின்றனர். சுகாதார அமைச்சராக இருந்த போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையை பார்க்க சென்றபோது, அங்குள்ள கைதிகளுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. உரையாடிய எவரும் நாம் குற்றமிழைத்ததனால் அங்கு வந்ததாக கூறவில்லை. குற்றமிழைக்காமல் சிறையில் இருப்பதாகவே கூறினார்கள். எனவே, அவர்களை மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும். அவர் அந்த நிலைக்கு உட்பட ஏதுவாக இருந்த சமூகத்தை மாற்றுவதற்கான முயற்சியிலேயே நாம் ஈடுபட வேண்டும்.

எவருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை என்பது பெளத்தர்கள் என்ற வகையில் எமக்குத் தெரியும். சமூக சூழல் மற்றும் பழகும் நபர்கள் காரணமாகவே அவர்கள் அந்த நிலைக்குள்ளாகின்றனர். எனவே இவ்வாறான பிரச்சினைகள் இல்லாத சிறந்த சமூகத்தை, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கைதிகள் குறைவாக உள்ள நாட்டை உருவாக்குவதற்காக நாம் ஆற்ற வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

இந்த சங்கம் கைதிகளின் நலன்களுக்காக பல விடயங்களை ஆற்றியிருக்கும். எதிர்காலத்திலும் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இடநெருக்கடி போன்ற பல பிரச்சினைகளுக்கு தற்போது கைதிகள் முகங்கொடுத்து வருவது எமக்கு தெரியும். சாதாரணமாக வழங்கப்படும் தண்டனையை விடவும் மோசமான நெருக்கடிகளுக்கு அவர்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் நாம் மேற்கு நாடுகளை எடுத்துக் கொண்டால் சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் கைதிகளுக்கு கிடைக்கும் வசதிகளை எமது நாட்டவர்களுக்கு சொன்னால், அங்கே சென்று சிறையில் இருக்கலாம் என நினைப்பார்கள்.

குளிரூட்டப்பட்ட அறைகள், தொலைக்காட்சி, கணனிகள் மற்றும் சிறையிலிருப்பதற்காக எமது பணப் பெறுமதியில் ஒரு நாளுக்கு 500 ரூபா கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்குகிறது. அந்தந்த நாடுகளிலுள்ள மனித உரிமைகள், சட்டதிட்டங்கள் போன்றவற்றுக்கமைய அந்த நிலை இருக்கிறது. எமது நாட்டிலுள்ள பொருளாதார, சமூக நிலைகளுக்கமைய இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப்போகிறோம் என்பதனைப் பார்க்க வேண்டும்.

ஆகவே, அரசாங்கம் என்ற வகையில் சிறைச்சாலைகள் அமைச்சும், நீதி அமைச்சும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைய கைதிகளின் நலன்களுக்காக மிகவும் மனிதாபிமானமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். அந்த செயற்பாடுகள் தொடர்பில் சங்கம் நல்கும் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி, கைதிகள் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக அனைவரும் பாடுபடுவோம் என கெளரவமாக கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். 

Comments