ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

"போன மாசம் பெய்த மூன்டு நாள் மழையில ஏற்பட்ட வெள்ளத்தாலயும் மண்சரிவாலயும் பலத்த சேதம் வந்ததில்லே. உந்த சேதத்தை திருத்துறதுக்கு 8 மில்லியனுக்கு மேல (8869 மில்லியன்) செலவாகும் என்டு சொல்லுகினம்".

"யார் அரசாங்கம் சொல்லுதோ"

"இடர் முகாமைத்துவத்துக்கென்டு ஒரு அமைச்சர் இருக்காரில்லே. அவர்தான் உதை சொன்னவர்".

"உவ்வளவு காசு இந்த விஷயத்துக்கு உதவக் கிடக்குதோ?"

"நாட்டிலுள்ள மக்களையும் வீடுகளையும் அரசாங்கம் காப்புறுதி செய்திருக்குது".

"அப்பிடி செஞ்சிருக்கினமோ"

"செய்யாம அமைச்சர் சொல்லுவாரோ. என்ன பேசுறனீ".

"உந்த காப்புறுதியில கிடைக்குற காப்புறுதி நம்பிக்கை நிதியத்தில இருந்து செலவழிக்கிற உந்த காசை மீட்டுக்கொள்ள ஏலும் என்டும் அமைச்சர் சொல்லிப்போட்டவர்".

"அமைச்சர் உதை எங்க சொன்னவர்".

"அமைச்சரோ வேற எங்க பாராளுமன்றத்திலதான்"

"பாராளுமன்றத்தில சொன்னவர் என்டா சரிதான்"

"ஆனா காப்புறுதி தவணைப்பணத்தை சரியா கட்டியிருந்தாதான் உந்தப் பணம் கிடைக்கும். அதனை சரியா கட்டியிருக்கோ என்டு எதிர்கட்சியில கேள்வி எழுப்பியிருக்கினம்"

"அப்பிடியென்டா கிடைக்காதோ?"

"அதெப்பிடி கிடைக்காம போகும். தவணைப்பணம் எல்லாம் கட்டிக் போட்டனாங்கள். கிடைக்க வேண்டிய காசில முற்பணமா 150 மில்லியன் குடுத்துப் போட்டினம். மிகுதியை பின்னர் தருவினம் என்னப்பா சொல்லுறியள் போன வருஷமும் எமக்கு 3,135 மில்லியன் காசு கொடுத்தவையில்ல. கடந்த வருஷம் மழை வெள்ளம் மண்சரிவு என்டு வந்துதில்ல. அதில பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கவும் வீடு கட்டிக் கொடுக்கவும் உந்த காசைத்தான பயன்படுத்தினனாங்கள் என்டும் அமைச்சர் சொன்னவராம். இயற்கை இடர்கள் என்டது எந்த நேரத்திலயும் வரும் என்டபடியா வந்தபிறகு உதை தடுக்குறதைவிட வாரத்துக்கு முன்னால பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தமென்டா வரக்கூடிய ஆபத்துக்கள குறைச்சிக் கொள்ளேலும் என்ன சொல்லுறனீ?"

"பின்ன"

"உந்த மழை இந்த முறைதான் வருகுது என்டில்ல வருசா வருசம் வந்துபோகுது. போனவருசம் நினைவிருக்கோ வெல்லம்பிட்டி, மல்வானையில எப்பிடி போட்டுது வெள்ளம்.அதிலிருந்து நாங்க பாடம் படிச்சிருக்கவேனும். பத்து பதினைஞ்சி வருசங்களுக்கு முன்னால வெள்ளம் வடிஞ்சி போறத்துக்கென்டு கொழும்பில சில இடங்களில சதுப்பு நிலங்கள வெறுமனே விட்டு வெச்சிருந்தினம். வெள்ள நீர் வடியிறத்துக்கென்டு இருந்த இடத்தில எங்கட ஆக்கள் வீடுகளையும் கட்டிடங்களையும் சட்டவிரோதமாகக் கட்டிப்போட்டினம். உதால வெள்ள நீர் வடிஞ்சி போகாம அந்தந்த இடத்தில தங்கிட்டுது".

"உதுதான் நடந்ததென்ன"

"இந்தமுறை வந்த வெள்ளமோ. நிறைய இடங்களில வீதிகள உடைச்சித் தள்ளிட்டுது போக்குவரத்தை விடன். வெள்ளம் வடிஞ்சபிறகு அவற்றால நடக்கக்கூட முடியல்லையென்டா வேறென்ன"

"நொறுக்கிப்போட்டுதென்ன"

"உந்த வீதியள் உடைஞ்சதாலதான் பாதிக்கப்பட்ட சனத்துக்கு நிவாரணப் பொருட்கள கொண்டுபோய் குடுக்க முடியாமப் போட்டுது".

"பின்ன. பாதையில்லயென்டா எப்பிடி போறது"

"ஹெலிகொப்டரிலதான் உணவு பார்சல்களைக் கொண்டுபோய் குடுத்திருக்கினம்".

"மேல இருந்து போட்டினம் என்டு சொல்லுங்கோ"

"சரியா சொன்னனீ. ஒரு சில இடத்தில பாலத்தின்ட மேல்பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குது. ஆனா அடியால பாலம் இருக்கோ இல்லையோ என்டு தெரியேல்ல ஆனா பாலம் இருக்கென்டு அனுமானிச்சிக் கொண்டு போய்த்தான் நிவாரண பொருட்கள கொடுத்தவை என்டு எனக்குத் தெரிஞ்ச அதிகாரியொருவர் சொன்னவர்"

"சனம் தவிச்சிப் போயிருக்குமென்ன"

"பின்ன மாத்தறையில பிட்டபத்தர என்ட இடத்தில உள்ள பாடசாலையில போட்ட வெள்ளம் எத்தின அடி உயரத்திற்கு இருந்துது தெரியுமோ?"

"5, 6 அடி"

"நல்ல 5.6 அடி அங்க வெள்ளம் 26 அடிக்கு போட்டிருந்தது மேலால போற கரன்ட் கம்பியில சாமான்கள் தொங்கிக்கொண்டு இருக்கிற அளவுக்கு வெள்ளம் போட்டுது தெரியுமோ?". "ஒரு இடத்தில கரன்ட் கம்பியில குடையொன்டும் தொங்கிக் கொண்டு இருந்ததை அந்த அதிகாரி படம் பிடிச்சிக்கொண்டு வந்தவர்"

"கரன்ட் கம்பியில குடையோ வெள்ளத்தில அடிச்சிக்கொண்டு போகேக்க சரியா கம்பியில கொழுகிப்போட்டுதுபோல"

"அரசாங்கத்தின்ட முதல் வேலை உடைஞ்சிபோன வீதிகள திருத்தவேனும். வீதியள் இருந்தாத்தானே உந்த சாமான்கள கொண்டுபோக ஏலும். பாதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள திருத்திறத்திற்கு மட்டும் 7000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்குது. அடுத்த ரென்டு மாசத்தில உந்த வேலை ஆரம்பிச்சி போடுவம் என்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சொல்லிப்போட்டுது".

"ரென்டு மாசத்தில ஆரம்பிச்சிப போடுவினமோ?"

"காப்புறுதி நிதியத்தில இருந்து கிடைக்கிற நிதிய சரியா பகிர்ந்தமென்டா உதையெல்லாம் செய்யேலும். ஆனா சுனாமிக்கிப் பிறகு கிடைச்ச 500 மில்லியன் காப்புறுதிப் பணம் போன இடம் தெரியேல்ல என்டு சொல்லுகினம் போனவருசம் 2016 இல வெல்லம்பிட்டி, மல்வானை பகுதியில ஏற்பட்ட வெள்ளத்தில பாதிக்கப்பட்டவைக்கு இன்னும் நிவாரணம் கொடுக்ேகல்ல. சாலாவ வெடி விபத்தில பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்னும் நிவாரணம் குடுத்து முடியேல்ல. உதையெல்லாம் சரியா கொடுத்தினம் என்டா தான் அரசாங்கத்தின்ட மீது மக்களுக்கு நம்பிக்கைவரும் 24 நாடுகளில இருந்து இந்த தடவை உதவியள் நிவாரணப்பொருட்கள் என்டு கிட்டத்தட்ட 10 கப்பல்களில வந்ததா சொல்லினம் ஆனா சில இடங்களில உள்ளவைக்கு எந்த நிவாரணமும் கிடைக்ேகல்ல என்டு கூறுகினம். என்ன நடக்குதென்டு ஒன்டும் புரியேல்ல. என்னென்ன பொருட்கள் எந்தெந்த நாட்டில இருந்து கிடைச்சிது என்டு சரியா புள்ளி விபரம் இல்லையென்டுதான் பேசுகினம். இன்னொரு முசுப்பாத்தி தெரியுமோ? அமைச்சர் ஒருவர் வாழைப்பழங்கள பாதிக்கப்பட்ட சனத்துக்கு கொடுத்தவராம்".

"நல்ல விசயம் தானே"

"விசயம் நல்லதுதான் ஆனா அவர் என்ன செஞ்சவர் தெரியுமோ வாழைப்பழத்த தன்னோட கலர் படம் போட்ட பேப்பர்ல சுத்தி கொடுத்தவராம்"

"தமிழ் நாட்டில வெள்ளம் வந்த நேரமும் உதைப்போலதான் செஞ்சவை.அமைச்சரே உப்படியென்டா அதிகாரிகள் எப்படி இருப்பினம்"

"அப்பிடியும் சொல்ல ஏலாது சின்னராசு மக்களுக்கு முடிஞ்ச வழியில உதவ வேண்டுமென்டு அக்கறையா செயற்்படுகிற அதிகாரியளும் இருக்கினம் தெரியுமோ? அவையள் தங்கட கையில இருப்பதையும் போட்டு மக்களுக்கு செலவழிப்பினம்".

"களு கங்கை, ஜின் கங்கை, நில்வளா கங்கை என்ட ஆறுகள் இருக்கேல்ல"

"காலிப் பக்கமென்ன"

"ஓமோம் உந்த மூன்டு ஆறுகளுக்கு குறுக்கால சில இடங்களில ஆறு அணைக்கட்டுகள கட்டிப்போட்டா போன மாசம் வந்த வெள்ளத்தை தடுக்கேலுமென்டு அமெரிக்க பொறியியல் நிறுவனமொன்டு சொல்லிக்கிடக்குது"

"வெள்ளம் வாறதுக்கு முன்னால சொன்னவையோ, இல்ல வெள்ளம் வந்த பின்னால சொன்னவையோ"

"உதோ. 49 வருஷத்துக்கு முன்னால சொல்லியிருக்கினம்"

"49 வருஷத்துக்கு முன்னாலயோ"

"ஓமப்பா ஆனா எங்கட ஆக்கள் இன்னும் செய்யேல்லயே".

"செஞ்சிருந்தினமென்டா இந்த முறை வெள்ளப் பாதிப்பையும் குறைச்சிருக்கலாமென்ன"

"49 வருஷம் பாத்துக் கொண்டிருந்தவைதான் இப்ப செய்யப்போகினமோ?"

"எங்கட ஆக்களுக்கு யாரும் நல்லது சொன்னா கேட்க மாட்டினம். ஆனா எதையும் வில்லங்கமா சொல்லுங்கோ உடனே கேட்பினம்". 

Comments