மனிதர்கள் வாழ்கிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

மனிதர்கள் வாழ்கிறார்கள்

எஸ். முத்துமீரான்

ங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கத்தால், எங்கள் பகுதி கடல், சீற்றமடைந்து மலை போன்ற அலைகளைத் தொடர்ந்து அள்ளி எறிந்த வண்ணமிருக்கிறது. கடல் கொந்தளித்துக் கொண்டிருப்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப்போக முடியாமல், தோணிகளில் ஏற்றிய வலைகளோடு சோகமே உருவாகி, வாடிகளில் காத்துக் கிடக்கின்றனர். என்று மில்லாதவாறு வங்கக் கடல் சீறிக் கொண்டிருப்பதைப் பார்த்து, இளஞ்சூரியன் வேகமாக மேலே ஏறிக் கொண்டிருக்கிறான்.

வாடைக்காற்று மெதுவாக வீசிக் கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்விற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் மீனவர்கள், தங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள சோதனையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அச்சிர லூசி அப்துல் றசூல் சாறன் மடிநிறைய ஆமை முட்டைகளை எடுத்துக் கொண்டு வருகிறான். அப்துல் றசூல் அர லூசி என்றாலும் நல்ல மீனவன். ஒழுங்காக வலை இழுப்பது தொடக்கம்

இழுத்தெடுத்த வலைகளை வெய்யிலில் காய வைத்து, மீண்டும் தோணியில் ஏற்றுவது வரை அலுப்பில்லாமல் வேலை செய்யும் தொழிலாளி. ஊரில் உறவுகள் இல்லாமல் தனிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவனுக்கு எங்கள் ஊர்தான் உறவும், சொந்தமும். கள்ளம் கபடம் இல்லாமல் எல்லோருடனும் குழந்தைபோல் உறவாடும் இவனோடு எல்லோரும் அன்போடு பழகுவார்கள்.

எடுத்து வந்த ஆமை முட்டைகளை எடுத்து வாடியில் குந்திக் கொண்டிருந்த மீனவர்களின் கைகளில் கொடுக்கிறான். வயது வந்த மீனவனொருவன் “ஆமமுட்ட கிரந்தி நோய்க்கும், மூச்சுக்கும் நல்ல மருந்து, அவிச்சிப் போட்டு சாப்பிட்டா நோயெல்லாம் படாபஞ்சாப் போயிரும். எனக்கு இன்னமும் ரெண்டு முட்ட தாடா தம்பி” என்று கேட்கிறான்.

மீனவனின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டிச் சிரிக்கும் அப்துல் றசூல், எல்லோருக்கும் நல்ல நேசமுள்ள மனிதன், அப்பொழுது, வீறான் தண்டயல். “இந்த அமுக்கத்திக்கெல்லாம் காரணம் ஒலுவில்ல கட்டின துறைமுகம் தான் என்று எல்லாரும் செல்றாங்க. பெரிய கல்லையெல்லாம் கொண்டாந்து கடலில போட்டு எல்லாத்தையும் நாசமத்துப் போட்டானுகள், கல்லப் போடப் போட, கடல்ல அமுக்கம் கூடி ஊரயிம் அழிச்சிப் போட்டு. இப்ப கரைக்கு மீன் கிளயளும் வராம ஒழிச்சிற்று. இதால எங்கிட மனிசரெல்லாம் எவ்வளவு கஷ்ரப் பர்றானுகள்.

எங்கிட ஊரில மீன்புடி இல்லாம ஏழ, எளியதுகள், கஞ்சிக்கும் வழியில்லாமத் தவிச்சுக் கெடக்கிதுகள்” என்று வீறான் தண்டயல் சொல்லிக் கொண்டு வாடிக்குள் சோர்ந்து கிடக்கும் மீனவர்களைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ஆம முட்டைகளைக் கொடுத்து விட்டு அமைதியாக நின்று கொண்டிருந்த அத்து றசூல், வீறான் தண்டயலின் பேச்சில் அமைதி இழந்து ‘இந்த நாச மத்துப் போன நாய்கள்ள வேலயால, கடல் பொங்கி ஊருக்க வந்திற்கு....

இதல எங்கிட வாடியச் சுத்தி இரிக்கிற தென்ன மரமெல்லாம் கடலால அரிச்சி, அரிச்சி உழுகிது.... இனி வாற காலத்தில கடல் ஊருக்க வந்திரும்.... இதால எங்கிட தொழிலுக்குத்தான் செரியான நஸ்ரம்.... இப்படி இரிந்தா நாங்க எப்பிடி மீன் புடிக்கிற? எல்லாத்தையும் எங்கிட எம்பிக்கிற்ற செல்லி, இவனுகளுக்கு நல்ல பாடம் படிப்பிக்கணும்” என்று கூறி விட்டு, கடற்கரை ஓரத்திற்கு போகிறான். கடல் சீறிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சோதனைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை மீனவர்கள், பசியின் வேதனைகளோடு, வாடியில் குந்திக் கொண்டிருக்கின்றனர். சோர்ந்து குந்திக் கொண்டிருந்த ஆதம்வாவா, கடல் காற்றின் கூதலுக்கு மடியிருந்த வீடியொன்றை எடுத்து பற்றவைத்து புகையை மூக்கால் விட்டுப் போராடுகிறான். அவன் பக்கத்தில் குந்திக் கொண்டிருந்த அகமது “தம்பேய்! எனக்கும் ஒரு வீடி தாடா, கொடலுக்க ஒன்டுமில்லாம வயித்த கொமட்டிது.... லாவு நானும் புள்ளயளும், வட்டரோட பிளன்டியைக் குடிச்சிக்கிற்றுத்தான் படுத்த... இந்தக் கடல் இப்பிடி கொதிச்சிக்கு கெடந்தா, நாம இனி புள்ள குட்டிகளோடச் சாகத்தான் வேணும்....”

என்று அகமது மனம் நொந்து பேசுவதைப் பார்த்து கடல் மலை போன்ற அலைகளை அள்ளி எறிந்து கொண்டிருக்கிறது. கடற்கரையோரத்திற்கு போன அப்துல் றசூல் மீண்டும் வாடிக்கு வருகிறான். அவன் முகத்தில் பயத்தின் பீதி முட்டி மோதுவதைப் பார்த்து “என்னடா பேயறஞ்சவன் மாதிரி வாறாய்” என்று வீறான் தண்டயல் கேட்கிறான். அதற்கு அவன் “கடலுக்குள்ள பெரிய கொளப்பம் நடக்கிறாப் போல இரிக்கி காக்கா. செரியா வாட நீரும் ஓடிது... தூரத்தில பெரிய பெரிய மீனெல்லாம் சண்ட புடிச்சிக்கு போகிதுகள்.... எனக்கு பயமாக கெடக்கு காக்கா.... எங்க, போன சொனாமி திரும்பியிம் வரப் போகிதோ தெரியல்ல.... வாங்க காக்கா, எல்லாரும் ஊட்ட போவம்” என்று கூறி விட்டு அப்துல் றசூல் போகிறான். அவன் போவதைப் பார்த்து செலயிமான் “தம்பேய்! அவன் றசூல் செல்ற செரியா வந்தாலும் வரலாம்....

அப்படித்தான் இந்தக் கடலும் வெட்டுக்கால் பட்டிக்கு கெடக்கு, எதுக்கும் நாம கொஞ்சம் தோணியை மேல இழுத்து வெச்சிப் போட்டு, ஊட்ட போவம் வாங்க” என்று அகமது சொன்ன சொல்லைக் கேட்டுக் மீனவர்கள் எல்லோரும் எழுந்து போய் தோணியை மேலே இழுத்து வைத்து விட்டு வீடுகளுக்கு போகின்றனர். மனவேதனைகளோடு வீடும் செல்லும் மீனவர்களின் துயர வாழ்வைக் கண்டு பொறுக்க முடியாமல், கடற்கரையோரத்தில் நின்ற இளந்தென்னைகளில் இருந்த காகங்கள் கத்துகின்றன. கடல்மனித நடமாட்டம் இல்லாது வெறிச் சோடிக் கிடக்கிறது. சூரியன் எட்டு மணியைப் பிடித்து விட்ட இறுமாப்பில் மேலே போய்க்கொண்டிருக்கிறான்.

வீறான் தண்டயலின் வீடு மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடற்கரையிலிருந்து வந்து கொண்டிருந்த தண்டயலை அவருடைய சின்ன மகள் “வாப்பா! நம்முட மாமாவும் அவருடைய குடும்பமும் பொத்துவிலிருந்து வந்திரிக்கா.... கெதியா, வாங்க” என்று தண்டயலின் கையைப் பிடித்து இழுத்து வருகிறாள். தண்டயலின் மனைவி தன் தம்பியையும் குடும்பத்தையும் கண்ட சந்தோசத்தில் தலைகால் தெரியாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் மாமாவின் மக்களோடு சேர்ந்து வீட்டைப் பிரட்டிக் கொண்டிருக்கின்றனர். வந்து கொண்டிருந்த தண்டயல் “என்னடப்பா? இப்ப தான் மச்சான் லாத்தாட நெனவு வந்தயோ?” என்று கேட்டுக் கொண்டு மச்சினனின் சின்ன மகனை வாரி எடுத்து கொஞ்சியபடி வீட்டுக்குள் போகிறார். போனவர் மனைவியிடம் “என்ன தேயில சாமானக் குடுத்தியா?” என்று கேட்க அதற்கு மனைவி “அவக இப்பதான் வந்து காலாறின. தேயிலைக்கு சுடுதண்ணி போட்டிருக்கன், சாமான் என்னத்தையும் வாங்க இவன் அத்து றசூலையும் காணல்லியே....”என்று சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் அத்து றசூவ் வந்து விட்டான். மச்சினனையும் அவன் குடும்பத்தையும் கண்டவன் சிரித்து மகிழ்ந்து கொண்டு மனைவியின் அழைப்பை ஏற்று, அடுப்படிக்குப் போதிறான். அவன் நடையில் என்று மில்லாத சுறுப்பும் சோக்கும் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது.

மச்சினன் மம்மது ஒரு மிசின் றைவர். ஐந்து வருடங்களுக்கு முன், உழவு வேலைக்காக பொத்துவிலுக்கு சென்றவன். எங்களுக்கு தெரியாமலே அங்கு, ஒரு பிள்ளையைக் கண்டு கலியாணத்தை முடித்து விட்டான். இன்று, சொல்லாமல் கொள்ளாமல் பிள்ளை குட்டிகளுடன் வந்து நிற்கும் அவனையும் அவன்ட பிள்ளைகளையும் கண்டு வீடே சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

மனைவி என்று மில்லாதவாறு, மகிழ்ச்சியில் பொங்கி வழிகிறாள். வீட்டின் மகிழ்ச்சியில், தூரத்தில் படுத்துக் கிடந்த நாய் பொட்டு, தன்னையே மறந்து ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது. மச்சினனையும் குடும்பத்தையும் பார்த்த தண்டயல் “புள்ளேய்! பகல் சோத்துக்கு என்ன கறி ஆக்கப் போறாய்? இந்தக் கடலும் கை தராமப் பெயித்து... எதுக்கும் ஒரு கோழியப் புடிச்சி அறுக்க, நம்முட றகுமானியாத் தைக்கா லெப்பட்ட அனுப்பு” என்று சொல்லி வாயெடுக்கல்ல, “தம்பி வாற நேரம் ரெண்டு பார மீன்களை வாங்கி வந்திரிக்கான். நாலஞ்சி விரல்கருவாடும், கொஞ்ச மையறுக் கிழங்கும் கொண்டந்திரிக்கான். மீன நம்முட அத்து றசூல் அறுத்திக்கிட்டு இரிக்கான்”. என்று சொல்லி விட்டு பகற் சோற்றுக்குரிய வேலைகளைச் செய்வதில் யந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறாள். தன் சகோதரியின் மகிழ்ச்சியையும் பூரிப்பையும் கண்டு” மச்சான் “பொத்துவில் கடல்ல நல்லா மீன்படுகிது.... நாலஞ்சி நாளா பாரமீன் கூடுதலாப் படுகிது. கொழும்பில இரிந்து மீன் வியாபாரிகள் வந்து லொறிகள்ள எல்லாத்தையும் வாங்கிற்று போறானுகள்.

நேத்து ரெண்டு மூணு சூரப்பாடும் பட்டிக்கு.... பொத்துவில் கடல் நல்ல அக்கிளுபுக்கிளியாக் கெடக்கு. உல்லைக்கு வந்த வெளிநாட்டு வெள்ளக்காரனுகளும் சேர்ந்து முஸ்பாத்திக்கு வலக்கால்ல வந்து வல இழுக்கானுகள்” என்று மச்சினன் மம்மது கூறியதைக் கேட்டு தண்டயல் வீறான்.

“என்ன செய்யலாம் நம்முட நாசமத்துப் போன கடல்தான் ஹயரா மண்டிப் பெயித்து. கடலப் பாக்கிறத்திக்கே பயமாக்கிடக்கு, அவளவு நீர் போகிது.... எல்லாரும் பயத்தால தோணிகளயெல்லாம் கரைக்கு மேலே தள்ளி வெச்சிற்ரம்... எப்படி ஒன்ட பாடெல்லாம் நல்லமா....? ஏதோ, நீ வந்தது, எங்களுக்கு பெரிய கொற நீங்கினாப் போல இரிக்கு... ஒங்குலாத்தாக்கு ஒவ்வொரு நாளும் ஒன்ட கவலதான். இன்டைக்குத்தான் ஒங்கு லாத்தாட மொகத்தில சிரிப்பு வழியிது” என்று கூறி விட்டு மீண்டும் மச்சினனின் மகனை தூக்கி வெச்சி கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

“எனக்கும் பெரிய கவலதான் மச்சான்... லாத்தாவயிம் ஒங்களையும் நெனச்சி நெனச்சி நான் கொளறாத நாளே இல்ல.... பயத்தாலதான் நான் வரல்ல...” என்று மம்மது கூறிவிட்டு தன் சகோதரியைப் பார்ப்பதற்கு குசினிக்குள் போகிறான். அங்கே, அவன் மனைவி சந்தோசமாக அவன் சகோதரியோடு பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு வருவதைக் கண்டு, வாசலில் கொள்ளி கொத்திக் கொண்டிருந்த அத்துல் றசூல் தன்னையே மறந்து சிரிக்கிறான்.

கொள்ளி கொத்திக் கொண்டிருந்த அத்துல் றசூலையும் கூட்டிக் கொண்டு வெளியில் போவதைப் பார்த்து, நாய் பொட்டு ஊளையிடுகிறது.

வானம் மப்பும் மந்தாரமாக இருக்கிறது. றகுமானியா தைக்கா மோதின் லுஹர் தொழுகைக்கான அதானை ராகமெடுத்து விடுகின்றார். புறவளவுக்குள் அமைதியாக உறங்கியிருந்த குயிலொன்று தூக்கம் தெளிந்து கூவிக் கொண்டு பறக்கிறது. பகற் சாப்பாட்டுக்குரிய வேலைகளை மனைவியும், மம்மதின் மனைவியும் சேர்ந்’து சட்டுப் பண்ணி செய்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது என் பக்கத்து வீட்டில் வசிக்கும் பொய்மூட்ட செய்யது வருகிறாள். செய்யதைக் கண்ட நாய் பொட்டு மெதுவாக அணுகி வாலை ஆட்டிக் கொண்டு புறவளவுக்குள் போகிறது “கஷ்ஸா.... கஸ்ஸா....! என்ன புள்ள செய்யிறாய்? தம்பிர பொஞ்சாதி நல்லா இரிக்காவா?.... மம்மதக் கண்டு எவளவு காலமாப் போச்சி....” என்று கேட்டபடி செய்யது வருகிறாள்.

“வா லாத்தா, இன்னா இரிக்கா.... வந்து இரி லாத்தா” என்று செய்யது இருப்பதற்கு பாயை எடுத்து விரித்துப் போடும் போது, வாசலில் நிற்கும் மாமரத்திலிருந்து காகங்கள் கத்திக் கொண்டிருக்கின்றன. செய்யதின் வரவினால் வீடு கலகலப்பாகி பூரிப்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மம்மதின் மனைவி கொடுப்பால் சிரிக்கிறாள். மச்சினன் மம்மது, மனைவி மக்களோடு வீட்டிற்கு வந்த செய்தி கேட்டு, அல்லயற்காரர்களோடு, உறவினர்களும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

இளம் காலை சிரிக்கிறது. மச்சினன் மம்மது வந்து நாலு நாட்களாகி விட்டன. இன்று அவன் மனைவி மக்களோடு பொத்துவிலுக்கு போவதற்கு ஆயத்தமாகி விட்டான். தம்பியும் அவன் குடும்பமும் விட்டுப் பிரிவதைப் பொறுக்க முடியாமல், மனைவி வேதனையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து மம்மது கண்களைக் கசக்கி நிற்கிறான்.

“இன்னும் ரெண்டு நாளைக்கு நிண்டு யோகலாமே” என்று அவளும் கண்களைக் கசக்குவதைக் கண்டு “அவன்ட வெள்ளாம வேல கூடக் கொறயக் கெடக்காம், போயிற்ரு அடுத்த கெழம வரட்டுமே:” என்று தம்பியையும் ராத்தாவையும் சமாதானப்படுத்தி, தன் பக்கத்தில் நிற்கும் அவன் மகனைத் தூக்கி கொஞ்சுகிறான்.

“எங்களையெல்லாம் மறந்திராம அடிக்கடி ஊட்ட வந்து போ.... உன்னக் கண்டா மவுத்தான உம்மா வாப்பாவக் கண்ட மாதிரி இரிக்கு....” என்று மனைவி கூறி முடிப்பதற்குள் “எனக்கும் ஒன்னக் கண்டா அந்த மாரித்தான் இரிக்கி” என்று கூறிய மம்மது தனது சட்டைப் பைக்குள் இரிந்து ஐம்பதினாயிரம் ரூபாவை எடுத்து தன் சகோதரியின் கையில் கொடுக்கிறான் “ராத்தா, ஒனக்கு நான் எதுவும் செய்யாம கலியாணம் முடிச்சிற்ரன். எனக்கு மனம் கேக்கல்ல. நீ, இந்தக் காச எடுத்து, ஒன்ட ஊட்டத்திருத்தி, புள்ளட கலியாணத்த முடிராத்தா.... அப்பதான் உம்மாக்கு நான் செய்ய வேண்டிய கடனுக்கு தீரும்”.... என்று, கூறி மம்மதும் அவன் மனைவி மக்களும் போகிறார்கள். அவர்கள் போவதைப் பார்த்து அத்துல் றசூலும் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். 

Comments