மலையகப் பாடசாலைகளில் இடைவிலகல் அதிகரிப்பு...? | தினகரன் வாரமஞ்சரி

மலையகப் பாடசாலைகளில் இடைவிலகல் அதிகரிப்பு...?

 பன். பாலா

இன்று மலையக பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டைப் பாதிக்கும் காரணிகளாக பாடசாலைக்கு முற்றிலும் செல்லாத மாணவர்கள், தரம் 1 -முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர் இடைவிலகல், பாடசாலையில் பதிவிருந்தும் கிரமமாக சமுகமளிக்காத மாணவர்கள் என பல அம்சங்கள் காணப்படுகின்றன. இதில் மிக முக்கியமான பின்னடைவுத் தன்மையை இந்த மாணவர் இடை விலகல் உருவாக்குகின்றது. இலவச கல்வி வழங்கப்படும் நிலையில் வருடந்தோறும் கணிசமான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டு வெளியேறுவதானது சமூகரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை புத்தி ஜீவிகள் மத்தியில் மனக்கிலேசத்தை ஏற்படுத்தவே செய்கின்றது.

பிந்திய கணிப்பீட்டின்படி நாட்டில் 51,249 பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதனடிப்படையில் 5 முதல் -17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 4.52661 பேர் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதில் 51,249 பேர் எந்த நிலையிலும் பாடசாலை பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள். பாடசாலைக்குச் செல்லாத நூற்றுக்கு 78 சதவீத மாணவர்கள் கிராமப்புறங்களிலும் குறிப்பாக மலையகம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும், சேரிப்புறங்களிலும் காணப்படுகிறார்கள்.

இதுபற்றியதான உளவியல் ரீதியான ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல்களின் படி இங்கு தரத்துக்கேற்ற அடைவு நிலை மட்டத்தை எட்ட முடியாதவர்களே இவ்வாறான இடைவிலகலுக்கு முகங்கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்குக் காரணம் பாடசாலைக்குச் சமுகமளிப்பதில் காணப்படும் ஒழுங்கீனமென்பதே அவதானிகளின் பதிவாக உள்ளது. இதனடிப்படையில் ஒரு மாணவனின் கல்வி விருத்தியில் முறையான வரவு என்பது முக்கிய சாதகமாக அமைகின்றது என்பதை தீர்மானிக்க முடிகிறது.

மாணவர் அடைவு மட்டத்துடன் பரீட்சைப் பெறுபேறுகளும் எதிர்பார்த்த இலக்கினை அடைய திட்டமிடல் என்பது முதன்மைக் காரணியாக இருப்பதாக கல்வியியலாளர்கள் சுட்டுகிறார்கள். ஆனால் மாணவர் வரவுகளில் காணப்படும் ஒழுங்கீனம் என்பது இவ்விரண்டு எதிர்பார்ப்புகளையுமே வீழ்ச்சியடையச் செய்து விடுகின்றது. இது ஒரு பாடசாலையின் வினைத்திறனில் குறிப்பிடத்தக்கதான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றது.

இதே நேரம் மாணவர்கள் பாதியில் பாடசாலைக் கல்வியைக் கைவிடக் காரணம் மலையக சமூகச் சூழலுக்குள் நிலை கொண்டிருக்கும் வறுமை நிலையே என்பதை மறுப்பதற்கில்லை. பெற்றோரின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் துண்டு விழும் நிலைமையால் அவர்கள் தமது பிள்ளைகளுக்கான கல்வியூட்டலில் போதிய கானைக் காட்டமுடியாமற் போகின்றது. ஆய்வுத் தகவல்களின்படி பாடசாலை வரும் பெருவாரியான மாணவர்கள் குடும்பப் பிரச்சினை சார்ந்ததான உளவியல் ரீதியான அழுத்தங்களுடனேயே காணப்படுகின்றனர். இதனால் கற்றலில் தமது முழுக்கவனத்தையும் செலுத்த முடியாமல் போகின்றது. இதன்காரணமாக தாம் கற்கும் தரத்துக்கேற்ப அடைவு நிலை மட்டத்தை எட்டமுடிவதில்லை.

இதனடிப்படையில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தாமாகவே பாடசாலையை விட்டு வெளியேற நிர்ப்பந்தம் செய்கிறது. அதற்கான தூண்டலை ஏற்படுத்துகின்றது. இதனால் எழப்போகும் பின் விளைவுகள் நடைமுறை வாழ்வியலில் ஆட்சி செய்யும் பிரச்சினைகளின் உக்கிரத்தால் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.

மலையகத்தைப் பொறுத்தவரை அதன் கட்டமைப்பானது கல்விப் பெறுவதற்கான உந்துதலை தரக்கூடியதாக இல்லை என்பதே யதார்த்த நிலைமை. குடும்பச்சூழல் என்பது அன்றாட வாழ்வுக்கான போராட்டக் களமாக மாறிப்போயிருக்கிறது. இதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கான உள்வாங்கல்கள் ஏற்படுவதோடு இந்நிலைமை தவிர்க்க முடியாத இறுக்கத்தை உண்டாக்கியும் விடுகின்றது.

இதேவேளை பெற்றோர் போதிய கல்வியறிவோ அதற்கான கவனயீர்ப்போ இல்லாதவர்களாக இருக்கும் மலையக பின்புலத்தில் பிள்ளைகளுக்கான கல்வியூட்டலின் முக்கியத்துவம் உணரப்படாமலே போகின்றது. வினைத்திறன் மிக்க குடும்ப நிர்வாகத்துக்கான கல்வி அறிவு இன்மையால் வருமானத்தையொட்டிய செலவுக்கான (21 ஆம் பக்கம் பார்க்க)

 

 

திட்டமிடல் பேணப்படுவதில்லை. தவிர அதிகமான பிள்ளைகளைப் பெறுவது என்பது வறுமையின் ஆதிக்கத்தை வலுப்பெறவே உதவி செய்கின்றது. குடும்ப வறுமை என்பது சகல மட்டங்களிலும் பற்றாக்குறையையும் ஆரோக்கியமின்மையையும் உண்டாக்கி வைப்பதால் பலவீனமான சமூக உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் போகிறது. ஏனோதானோவென்று பாடசாலை வரும் சிறுவர்கள் குடும்பச் சுமைகளோடு இருப்பதால் கற்பதில் நாட்டம் குறைவது இயல்பானதே. இதனால் ஆசிரியர் மட்டத்திலான தண்டனைகள், திட்டுக்கள், தனிமைப்படுதல், பிற பிள்ளைகள் முன் அவமானப்படுவதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை பாடசாலைச் சூழலை புறந்தள்ளும் ஆவேசத்தை உண்டாக்குவது யதார்த்தமானதே. இதனால் பாடசாலை வரவில் ஆர்வம் குன்றி ஒழுங்கீனம் ஏற்படுகின்றது. இது தொற்றுநோய் போல் பரவ வருடந்தோறும் கணிசமான மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ பாடசாலை இடைவிலகளுக்கும் ஆளாகின்றனர், ஆளாக்கப்படுகின்றனர்.

கல்வித் துறைசாந்தவர்களின் பதிவுகளின்படி பாடசாலை சூழல் மாணவர்களை பாடசாலையை நோக்கி கவர்ந்திழுக்கக்கூடியதாக இல்லையென்பது கவனத்துக்குரியதே. இதேநேரம் சமூகச் சூழல், வீட்டுச் சூழல் இரண்டுமே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இல்லை. இதனாலேயே இடைவிலகலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான அரசின் செயற்றிட்டங்கள் எதுவும் மலையக சமூகச்சூழலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாமல் தொய்வடைந்து போகின்றது.

உண்மையில் பாடசாலை இடை விலகல் என்பது மலையகச்சூழலில் மிகவும் பாதிப்பை உண்டாக்கும் விடயமாகும். பிற சமூகங்களின் மத்தியில் கற்றலுக்கான தேவை உணரப் பட்டு அதற்கான தூண்டுதல்கள் உரியமுறையில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அங்கு கல்வி அபிவிருத்திக்கான எய்துநிலை குறித்ததான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தலுக்கான நவீன தொழில்நுட்பக் கலைகள் பயன்படுத்தப்படுவதால் ஆரோக்கியமான எதிர்கால சமுதாயம் ஒன்றுக்கான அடிப்படை உருவாக்கம் பெற்றுள்ளது.

ஆனால் இவை எதுவுமே மலையகத்தில் உடனடியாக ஏற்படுவதற்கான அறிகுறிகள் தேடலுக்குட்படுத்தப்பட வேண்டிய கட்டத்திலேயே இருக்கின்றன என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

மலையக மாணவர்களின் திறமைகள் இனங்காணப்பட்டு அவை அபிவிருத்தியடைய தடையாக இருக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே தேவையான இலக்கை எட்ட முடியும். மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சமூக, பாடசாலை மட்டத்திலான சூழல் உருவாக்கப்படும் வரை மலையக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் என்பது கல்வி ரீதியிலான பெரும் பின்னடைவாகவே இருக்கும் என்பது நிச்சயம். 

Comments