இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான வீடமைப்புத்திட்டம் ஹபிடாட் ஃபோர் ஹியுமனிட்டி ஸ்ரீ லங்காவினால் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான வீடமைப்புத்திட்டம் ஹபிடாட் ஃபோர் ஹியுமனிட்டி ஸ்ரீ லங்காவினால் ஆரம்பம்

இலங்கையில் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் பிரகாரம், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவோருக்காக 4000 வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

இதன் பிரகாரம், முதல் கட்டமாக, 1134 வீடுகள் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் 2016ல் ஆரம்பமாகியிருந்தன. கண்டி மாவட்டத்தின், புஸ்ஸல்லாவ பகுதியில் அமைந்துள்ள ஹெல்பொட எஸ்டேட்டில், 100 வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நடைமுறைப்படுத்தும் நான்கு பங்காளர்களில் ஒன்றாக ஹபிடாட் ஃபோர் ஹியுமனிட்டி ஸ்ரீ லங்கா திகழ்கிறது.

மத்திய மாகாணத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்காக 100 வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளில் ஹபிடாட் ஃபோர் ஹியுமனிட்டி கவனம் செலுத்தியுள்ளது. இந்த செயற்திட்டத்தினுௗடாக, ஹெல்பொட எஸ்டேட்டில் வசிக்கும் 100 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. இந்திய உயர் ஸ்தானிகராலயம், மலைநாடு, புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, உள்ளூராட்சி சபைகள், பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT) மற்றும் பெருந்தோட்ட நிர்வாகம் ஆகியவற்றின் கலந்தாலோசனையின் அடிப்படையில் அனுகூலம் பெறுவோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நிர்மாணிக்கப்படும் வீடுகள், புத்தாக்கமான வீட்டு உரிமையாளர் மாதிரிக்கமைய அமைந்திருக்கும் என்பதுடன், இந்திய அரசாங்கம் தனது பங்காளர்கள் ஊடாக தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும். அனுகூலம் பெறுவோருக்கு தமது இல்லங்களை தாமே நிர்மாணித்துக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

இதன் மூலம் குறித்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தமது இல்லங்களின் உரிமையை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வீடமைப்புத் துறையில் 22 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ள ஹபிடாட் ஃபோர் ஹியுமனிட்டி, முன்னர் நாட்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரசாங்கத்தின் செயற்திட்டத்தில் 2012 இல் கைகோர்த்து செயலாற்றியிருந்தது.

இதனூடாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3700 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க முடிந்திருந்தது. 

Comments