இந்திய-ா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை | தினகரன் வாரமஞ்சரி

இந்திய-ா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

8வது

ஐ. சி. சி. சம்பியன் கிண்ணப் போட்டியில் பல முன்னணி வீரர்களினதும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்களினதும் எதிர்வு கூறல்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு இரண்டு ஆசிய அணிகளான இந்திய- பாகிஸ்தான் அணிகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள பாகிஸ்தான் அணி 1992ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் உலகக் கிண்ணம் வென்றபோது அவ்வணி ஆரம்பப் போட்டிகளில் சொதப்பிய பின் சுதாகரித்துக் கொண்டு மீண்டெழுந்து கிண்ணம் வென்ற அதே பாணியில் இத் தொடரிலும் ஆரம்பத்தில் சொதப்பிய அவ்வணி யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 2004 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வியுற்றது.

இந்தியாவுடனான ஆரம்பப் போட்டியில் படுமோசமான தோல்வியினால் கிரிக்கெட் ரசிகர்களினதும் விமர்சகர்களினதும்’ கிண்டலுக்கும், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான பாகிஸ்தான் அணி அப்போட்டித் தொடரில் கத்துக்குட்டி அணியாகவே நோக்கப்பட்டது. என்றாலும் இவ்விமர்சனங்கள் எதிர்வு கூறல்கள் எல்லாவற்றையும் பொய்ப்பித்து அடுத்து அவ்வணி சந்தித்த பலம் வாய்ந்த தென்னாபிரிககாவுடனான போட்டியில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

அதனைத் தொடர்ந்து பலம் வாய்ந்த இந்திய அணியையே தூசிதட்டிய இலங்கை அணியை தட்டுத்தடுமாறி வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவானது.

அரையிறுதியில் அதுவரை முதற்சுற்று ஆட்டங்களில் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியைச் சந்தித்தது. இப்போட்டியிலும் எதிர்பாராதவகையில் மிகவும் இலகுவாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணியின் வெற்றியில் துடுப்பாட்டத்தை விட அவ்வணியின் பந்து வீச்சே முக்கிய பங்காற்றியிருந்தது. அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து சீதோஷ்ணத்துக்கு ஏற்ற வகையில் பவுன்ஸர்களாகவும், ஓப் ஸ்வீங், லெக் ஸ்வீங் என எதிரணியினரை அச்சுறுத்தும் வகையில் நன்றாகப் பந்து வீசி வருகின்றனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹஸன் அலி இப்போட்டித் தொடர் முழுக்க நன்றாகப் பந்து வீசி இரு முறை ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அவர் இதுவரை சம்பியன் கிண்ணத் தொடரில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இத்தொடரில் கூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்திலுள்ளார்.

இம்முறை நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள இந்திய அணி இதற்கு முன் சௌரவ் கங்குயின் தலைமையில் 2000 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றதன் பின் 2002ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டிக்கு மழை குறுக்கிட்டதால் சம சம்பியன்களாகவும், கடைசியாக 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் போது சம்பியன்களாகவும் தெரிவு செய்யப்பட்டது. இம்முறை போட்டி ஆரம்பமாவதற்கு முன்பே கிரிக்கெட் விமர்சகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் கிண்ணம் வெல்லும் அணி எனக் கணிக்கப்பட்ட அணிகளில் முதன்மையான அணியாக இந்திய அணியே இருந்தது.

அவ்வணி இத்தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது.

அத் தோல்வியின் பின் தென்னாபிரிக்காவை முதற் சுற்று ஆட்டத்தில் மிகவும் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்குள் பிரவேசித்தது.

அரையிறுதில் ஏ குழுவில் இரண்டாம் இடம் பெற்ற பங்களாதேஷுடன் மோதி இலகுவான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் நடைபெற்ற எல்லாப் போட்டிகளிலும் அவ்வணிக்கு அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் வலுவான நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அவ்வணி நிச்சயம் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு சவாலாகவே இருப்பர்.

மொத்தத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாகவே அமையும். பாக். அணியின் துடுப்பாட்டத்தில் அனுபவ வீரர்களான சொஹைப் மலிக், ஹபீஸ், பாபர் அஸாம் இன்னும் வழமையான திறமைக்கு திரும்பவில்லை. இறுதிப் போடடியில் அவர்கள் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். மேலும் பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரை கடந்த பல வருடங்களாக ஐ. சி. சி. யினால் நடத்தப்படும் தொடர்களில் இந்தியாவுடனான 50 ஓவர் போட்டியாகட்டும், டி/டுவெண்டி போட்டியாகட்டும் வெற்றிபெற்றதில்லை. இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 8வது சம்பியன் கிண்ணப் போட்டியிலாவது வெல்லுமா பொறுத்திருந்து பார்ப்போம்? 

Comments