போதையில் பாதை மாறும் பிரபல கொல்ப் வீரர் வூட்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

போதையில் பாதை மாறும் பிரபல கொல்ப் வீரர் வூட்ஸ்

எம்.எஸ்.எம். ஹில்மி    

கடந்த வாரம் அமெரிக்கா புளோரிடா நகரின் அதிவேக பாதையில் அதிகாலை இரண்டு மணியளவில் வாகனமொன்று பிரேக் இல்லாமல் தடுமாறுவதைப் போல் இரு மருங்கிலும் அங்கும் இங்குமாக வந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் புளோரிடா நகரின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் அவ்வாகனத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டாலும் அவ்வாகனம் அங்குமிங்குமாக சில யார் தூரம் முன்னால் சென்றே நின்றது. பொலிஸார் அவ்விடத்திற்கு ஓடிச் சென்று பார்த்த போது அவ்வேளையிலும் அவ்வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி நித்திரைக் கலக்கத்தில் இருந்துள்ளார். உற்றுப் பார்த்ததும்தான் அவர் பிரபல கொல்ப் வீரர் டைகர் வூட்ஸ் என்பது தெரியவந்தது. ஏதோ போதையில்தான் அவர் இப்படி வாகனத்தைச் செலுத்துகிறார் என பொலிஸார் அவரை விசாரணை செய்ய ஆரம்பித்தனர்.

41 வயதுடைய இந்த சிரேஷ்ட கோல்ப் விளையாட்டு வீரர் மயக்கத்தில் வாகனம் செலுத்திய மேற்படி சம்பவத்தின் வீடியோப்படங்களை கடந்த வாரம் இணையத் தளங்களிலும், ஊடகங்களிலும் ப்ளோரிடா ஜுப்பிட்டர் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டதன் பின் முழு விளையாட்டு உலகமும் பரபரப்படைந்தது.

98 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோ படங்களில் அவரை வாகனத்திலிருந்து கீழிறக்கிய பொலிஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஒழுங்காக பதிலளிக்கக் கூடக் முடியாத நிலையிலிருந்த அவர் அச்சமயம் தான் எங்கு இருக்கிறேன் என்று கூட அவரால் கூற முடியாதளவுக்கு மயக்கத்தில் இருந்துள்ளார்.

அவர் வாகனத்திருந்து கீழிறங்கி நிற்கும் போது கூட அரை மயக்கத்திலேயே இருந்துள்ளார். எனவே இவர் மது போதையில் இருப்பதாக சந்தேகித்த பொலிஸ் அதிகாரிகள் அதற்கான பரிசோதனைகளுக்கும் உட்படுத்தியுள்ளனர். பின் சுதாகரித்துக் கொண்ட டைகர் வூட்ஸ் பொலிஸாரின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் ஒத்துழைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு ஆங்கில அரிச்சுவடியை முழுவதுமாகச் சொல்லும்படி பணித்த போது அவர் அமெரி்க்காவின் தேசிய கீதத்தையே முழுமையாகப் பாடிக் காட்டியுள்ளார். கடைசியில் எல்லா பரிசோதனைகளின் பின் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.

வூட்ஸ் செலுத்தி வந்த வானத்தின் சில்லுகள் பழுதடைந்தும். அவ்வாகனத்தின் சில பகுதிகள் நொறுங்கியும் இருந்ததால் இவர் மயக்கித்தில் செலுத்திய அவ்வாகனம் பல இடங்களில் மோதுண்டிருப்பதும் தெரிய வந்தது.

புளொரிட்டா போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுநீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அவர் வைத்திய ஆலோசனைப்படி நோய் நிவாரணியாக எடுக்கப்பட்ட நான்கு மாத்திரையைத் தவிர அவர் வேறெந்த போதைப் பொருளும் பாவிக்காதது தெரியவந்துள்ளது. என்றாலும் கவனயீனமாக வாகனம் செலுத்தியதற்கெதிராக அவரைக் கைது செய்து சில மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விட்டு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின் முக்கியமான சில பரிசோதனைகளினாலும் பூரண விசாரணைகளின் போதும் அவர் கடந்த ஒரு வருடகாலமாக மனக் கவலையினாலும், உடல் வலியினாலும் ஒரு வகை போதைக்கு அடிமையானது அறிய வந்துள்ளது. அவரை பைத்திய பரிசோதனைக்குட்படுத்தி பொலிஸார் அவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டாலும் டைகர் வூட்ஸ் அவரின் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

உலக கொல்ப் சாம்பியனாகப் பலமுறை தெரிவாகியுள்ள இந்த சிரேஷ்ட வீரரான டைகர் வூட்ஸ் கொல்ப் விளையாட்டில் பல சாதனைகளை நிலைநாட்டிய சிறந்த வீரராவார். மேலும் இன்றைய விளையாட்டு உலகில் விளையாட்டின் மூலமாகவும், விளம்பரங்களின் மூலமாகவும் பெரும்தொகை சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு 750 டொலர் மில்லியனையும் விட அதிகமாகும்.

டைகர் என்ற பெயரில் விசாலமான விமானத்துக்கும், அத்துடன் அதே பெயரையுடைய விசாலமான கொல்ப் விளையாட்டு மைதானத்துக்கும் சொந்தக்காரரான டைகர் வூட்ஸ் கடந்த சில வருடங்களாக காயங்களால் அவதிப்பட்டு கொல்ப் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால் அவர் மயக்கத்தில் வாகனம் செலுத்திய செய்தியால் அவரைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.