அரச மருத்துவர்களின் வேலைநிறுத்தம் முடிவு | தினகரன் வாரமஞ்சரி

அரச மருத்துவர்களின் வேலைநிறுத்தம் முடிவு

கே.அசோக்குமார்

சைற்றம் தொடர்பில் ஆராய புத்திஜீவிகள் குழு நியமனம்   

அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் வேலை நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தமது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இவர்களது வேலைநிறுத்தம் நேற்று நண்பகலுடன் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றுக்காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாகவே தற்காலிகமாக இந்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன. அத்துடன் நாட்டின் உயரிய பீடத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு கௌரவமளிக்கும் விதத்தில் எமது வேலை நிறுத்தத்தை தற்காலிமாக கைவிடுவதாக நாம் தீர்மானித்தோம் என டொக்டர் சஜித் மல்லவராச்சி தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது,

 

 சைற்றம் நிறுவனத்துக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளல், பட்டம் வழங்குதல் என்பவற்றை நிறுத்துவதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுதல்.

 சைற்றம் நிறுவனம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டின் அடிப்படைக்கருத்துக்களை சட்ட மா அதிபர் ஊடாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்,

 இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவருக்கோ அல்லது சங்கத்துக்கோ அதன் சுயாதீன தன்மைக்கு பங்கம் விளைவிக்க ஜனாதிபதி

என்ற வகையில் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன்

 

 சைற்றம் குழப்பத்தின் ஊடாக எழுந்துள்ள அடிப்படை பிரச்சினைகளால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல் உள்ளிட்ட நான்கு விடயங்களுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

சைற்றம் தொடர்பில் உள்ள ஏனைய விடயங்கள் பற்றி ஆராய்வதற்காக புத்திஜீவிகள் குழுவொன்றையும் நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் சாதகமான நிலைமையை கருத்திற்கொண்டு எமது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்தோம்.

அத்துடன் புற்றுநோய் ஆஸ்பத்திரி குழந்தைகள் ஆஸ்பத்திரி, டெங்கு நோய் பிரிவு உட்பட அத்தியாவசிய சேவைகளை எந்நேரத்திலும் நாம் ஸ்தம்பிக்கச் செய்யவில்லை.

சிலர் பொய்யான தகவல்களை தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை நேற்றுக்காலை சுமார் 9.30 மணியிருந்து சுமார் 11 மணிவரை நடைபெற்றது.

எமது சார்பாக 10 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சஜித் மல்லவராச்சி தெரிவித்தார்.

மேலும் சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும், அல்லது பயின்ற மாணவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் நாம் முன்னரேயே வலியுறுத்தி இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். 

Comments