கணிப்புகளுக்கு ஆப்பு! | தினகரன் வாரமஞ்சரி

கணிப்புகளுக்கு ஆப்பு!

எதிர்வு கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் அணி 8வது சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ஓட்டங்களால் படுதோல்வியடையச் செய்து இவ் வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் அணி பெற்றது.

உண்மையிலேயே பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தை வெல்லுவதற்கான தகுதியான அணிதான் என்பதை அவர்கள் இத் தொடரில் விளையாடிய முறையும், அவர்களின் அணுகுமுறைகளும் ஆட்டங்களை நுணுக்கமாக அவதானித்திருந்தால் புரிந்திருக்கும்.

பொதுவாக பாகிஸ்தான் அணி என்றால் இரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர்களின் சொதப்பலான களத்தடுப்புதான். இன்று நேற்றல்ல அவர்களின் களத்தடுப்பு வரலாறே ஒரு பாடசாலை அணியைப் போன்று மோசமானதாகவே இருக்கும்.

இம்முறை சற்று வித்தியாசமாக பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் கவனம் செலுத்தியிருந்தது. இந்தியாவுடனான முதல் போட்டியில் அவ்வணியின் சிறந்த பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பினாலும் இந்திய அணி ஆரம்பத்தில் ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டது. அப்போட்டியில் 41 ஓவர் முடிவில் கூட அவ்வணி 210 ஓட்டங்கள் பெற்று சற்றுத் தடுமாற்றத்துடனேயே களத்தல் இருந்தது. இறுதி ஓவர்களில் இந்திய அணி வெளுத்து வாங்க பாகிஸ்தான் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான அமீரும், வஹாப் ரியாஸும் காயத்துக்குள்ளானதால் இறுதி ஓவர்களை சுழற் பந்து வீச்சாளர்கள், மற்றும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களிடம் கையளிக்க இறுதி ஆறு ஓவர்களில் 100 ஓட்டங்களைச் சேர்த்தது இந்திய அணி. இது முதல் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடையக் காரணமாயிருந்தது.

அதன் பின் சுதாகரித்துக் கொண்ட பாகிஸ்தான் அணி களத்தடுப்பிலாகட்டும், பந்து வீச்சிலாகட்டும், மிகவும் சிறப்பாக செயற்பட்டது. இரண்டாவது தென்னாபிரிக்காவுடனான போட்டியில் கூட பந்து வீச்சை விட அவர்களின் களத்தடுப்பே அவ்வணியை 219 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தக் காரணமாகயிருந்தது. தொடர் நாயகன் விருது பெற்ற ஹஸன் அலி அப்போட்டியில் இரு அருமையான பிடிகளை எடுத்ததும் அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெறக் காரணமாயிருந்தது.

இறுதிப் போட்டியில் கூட நன்றாக ஆடிக் கொண்டிருந்த பாண்டியாவை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது மிகவும் அருமையானது. கட்டாயமாக அங்கு ஒரு ஓட்டம் இருந்தது. ஆனால் கண்சிமிட்டுவதற்குள் லாவகமாகப் பந்தைத் தடுத்த மொஹம்மட் ஹபீஸ் ஆட்டமிழக்க உதவியது சிறப்பாய் அமைந்தது. ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர மற்றைய எல்லாப் போட்டிகளிலும் இம்முறை களத்தடுப்பில் சிறப்பாக ஈடுபட்டதும் அவ்வணி கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாயமைந்தது.

இந்திய அணியின் இத் தோல்விக்கு அவ்வணியின் மெத்தனப் போக்கும் ஒரு காரணமாய் அமைந்தது. இறுதிப் போட்டிக்கு இந்திய-இங்கிலாந்து அணிகள் தேர்வாகும் என்ற கணிப்புடன் இருந்த இந்திய அணியினர் முதல் போட்டயில் வெளுத்துக்கட்டிய பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானவுடன் குதூகலித்திருப்பார்கள். மேலும் நாணயச் சுழற்சியிலும் வெற்றி பெற்றதால் போட்டி தங்கள் வசம்தான் என்று எண்ணி மித மிஞ்சிய நம்பிக்கையில் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் பஹார் ஸமானின் அதிரடியின் போதுதான் போட்டி கைவிட்டுச் செல்வதை உணர்ந்ததை கோஹ்லி உட்பட இந்திய அணி வீரர்களின் முகங்களைப் பார்த்ததுமே புரிந்தது. அதுவரை தொடரில் துல்லியமாக பந்து வீசி வந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இறுதிப் போட்டியில் சொதப்பியிருந்தனர். மேலும் களத்தடுப்பும் கைகொடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே இலகுவான நேரடித் ‘துரோ”க்கள் இலக்குத் தவறியதும் இந்திய அணியின் இத் தோல்விக்குக் காரணமாயமைந்தது.

இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே இத் தொடர் முழுவதும் ஓட்டக் குவிப்பில் முன்னிலையிலிருந்த மும்மூர்த்திகளான தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததும் அவ்வணியின் பின்னடைவுக்குக் காரணமாயமைந்தது.

கடந்த காலங்களில் இவ்விரு அணிகளும் சமபியன் கிண்ணத் தொடரில் 16 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா அணி 13 வெற்றிகளையும், பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதுடன் கடைசியாக 2009ம் ஆண்டு சம்பியன் கிண்ணப் போட்டியொன்றில் இந்தியாவை தோற்கடித்திருந்தது பாகிஸ்தான் அணி.

இப்போட்டியானது இந்திய-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி வரலாற்றில் 129வது போட்டியாகும். இவ்வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும், இந்திய 52 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. லண்டன் ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற 338 ஓட்டங்கள் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராகப் பெற்ற கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதற்கு முன் 2004ம் ஆண்டு பாகிஸ்தான் ராவல்பின்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் பெற்ற 329 ஓட்டங்களே கூடிய ஓட்ட எண்ணிக்கையாகவிருந்தது. பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த இரு போட்டிகளில் (இறுதி, அரையிறுதி) முதல் விக்கெட் சத இணைப்பாட்டத்தைப் பெற்றது. இது 2003ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆரம்ப ஜோடி தொடர்ந்து பெற்ற சத இணைப்பாட்டமாகும். மேலும் ஐ. சி. சி. தொடறொன்றில் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற கூடிய முதல் விக்கெட் இணைப்போட்டமாகவும் இது பதிவானது. இதற்கு முன் அமீர் சொஹேல்- சயீட் அன்வர் ஜோடி 1996ம் ஆண்டு பெற்ற 86 ஓட்டங்களே கூடிய ஓட்ட இணைப்பாட்டமாக இருந்தது.

இம்முறை அணியொன்று பெற்ற கூடிய ஓட்டமாகவும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற 338 ஓட்டங்களே பதிவானது. குறைந்த ஓட்டங்களாக இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற 158 ஓட்டங்களே பதிவாகியுள்ளது.

இத்தொடரில் இந்திய அணி 2 சதங்கள், பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் தலா ஒரு சதம் அடங்களாக மொத்தமாக 5 சதங்களே பெறப்பட்டுள்ளன. தனி நபர் கூடிய ஓட்டமாக ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பங்களாதேஷ் வீரர் தமி்ம் இக்பால் பெற்ற 127 ஓட்டங்களே பதிவானது. இத்தொடரின் கூடிய ஓட்டடமாக 5 போட்டிகளில் ஒரு சதம் மூன்று அரைச்சதங்கள் அடங்கலாக இந்திய வீரர் ஷிகர் தவான் பெற்ற 332 ஓட்டங்களே பதிவானது.

சிறந்த பந்துவீச்சாக கடந்த 3ம் திகதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹேசல்வூட் பெற்ற 52 ஓட்டங்களுககு 6 விக்கெட் பெற்றதே சிறந்த பந்துவீச்சாக இம்முறை பதிவானது. இத் தொடரின் கூடிய விக்கெட்டாக 5 போட்டிளில் 13 விககெட்டுக்களைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் ஹஸன் அலியே தொடர் நாயகன் விருதையும் பெற்றார். 

Comments