குப்பை; குப்பைக்குள் வீசிவிடும் பிரச்சினையல்ல | தினகரன் வாரமஞ்சரி

குப்பை; குப்பைக்குள் வீசிவிடும் பிரச்சினையல்ல

குப்பைகளை அகற்றும் பிரச்சினையை உள்ளூராட்சி நிறுவனங்கள் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப் போகின்றன என்பது இன்னுமே புரியாதிருக்கின்றது.

கொழும்பு நகரில் ஆரம்பமான இப்பிரச்சினை இப்போது நாட்டின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் பரவியிருக்கின்றது. ஆனாலும் கொழும்பு, கம்பஹா போன்ற முக்கிய நகரங்களிலேயே இப்பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியுள்ளது.

குப்பைகளை அகற்றுவதில் பிரச்சினை தோன்றும் வரை கொழும்பு நகர வீதிகள் தூய்மையாகவே காட்சியளித்தன. கார்ப்பட் இடப்பட்ட வீதிகளும், அழகாகச் சீரமைக்கப்பட்ட நடைபாதைகளுமாக காட்சியளித்த கொழும்பு நகரம் இப்போது சோபையிழந்து விட்டது.

வீதியோரம் ஆங்காங்கே குப்பைகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. நாய்கள் அவற்றை நாலாபுறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதையே அலங்கோலமாகக் காட்சி தருகின்றது. குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாததால் அவை துர்நாற்றம் வீசுவது மாத்திரமன்றி, ஈக்களின் பெருக்கமும் சமீப தினங்களாக அதிகரித்து விட்டது. டெங்கு நோய்க்கு நிகராக, ஈக்களால் பரப்பப்படும் வாந்திபேதி, நெருப்புக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற வியாதிகளும் தொற்றத் தொடங்கி விடக் கூடிய ஆபத்து உள்ளது.

கொழும்பு மாநகரசபையின் வாகனங்கள் இப்போதெல்லாம் குப்பைகளைச் சேகரிப்பதற்காக கிரமமாக வருவதில்லை. வாரத்துக்கு ஒருமுறைதான் குப்பை வாகனங்கள் வீதிகளுக்கு வருகின்றன. சில பகுதிகளில் ஒரு வார காலத்துக்கு மேலாக குப்பை அகற்றும் வாகனங்கள் வரவில்லை என்கிறார்கள் மக்கள். வீட்டில் அன்றாடம் சேருகின்ற கழிவுகளை எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியும்! மக்கள் வேறு வழியின்றி இரவோடு இரவாக குப்பைகளைக் கொண்டு வந்து வீதியோரம் கொட்டி விட்டுச் செல்வது தொடருகின்றது. கொழும்பு நகர வீதியோரங்களில் ஒவ்வொன்றாக குப்பைமேடுகள் உருவாகிவருவதைக் காண முடிகின்றது. அவை எங்கும் சிதறுண்டு அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.

இரவில் வாகனங்களில் வருவோர் குப்பைப் பொதிகளை நடுவீதியில் திடீரென வீசி விட்டுத் தப்பிச் செல்லும் காட்சிகளையும் பார்க்க முடிகின்றது. இவ்வாறு பொது இடங்களில் குப்பைகளை வீசிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு புறமிருக்க, மாநகரசபை வாகனங்களில் வருகின்ற ஊழியர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, பணமும் கொடுத்து குப்பைகளை ஒப்படைக்க வேண்டியும் ஏற்படுவதாக கொழும்பில் வாழ்வோர் கூறுகின்றனர். மக்களுக்கு அவஸ்தை தருவதாகவும், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் குப்பைகள் அகற்றும் பிரச்சினை மாறியிருக்கின்றது.

கொழும்பு, மீதொட்டமுல்லையில் குப்பை மேடு சரிந்ததனால் ஏற்பட்ட அனர்த்தத்தையடுத்தே இத்தனை நெருக்கடிகளும் புதிதாக உருவெடுத்தன. மீதொட்டமுல்லை குப்பை மலையில் தொடர்ந்தும் குப்பைகளைக் கொட்ட முடியாத நிலைமை உருவெடுத்ததன் காரணமாக கழிவுப் பொருள் முகாமைத்துவம் என்பது நாட்டில் பெரும் பிரச்சினையாக மாறி விட்டது. திண்மக்கழிவு முகாமைத்துவம் எவ்வாறிருக்க வேண்டுமெனவும், மீள்சுழற்சியென்பது அவசியமெனவும் மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்குப் பின்னரே அனைவரும் பேசத் தொடங்கினர். சிதைவடையும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் குப்பையாகக் கொட்டுவதனால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியதும் அதன் பின்னரே ஆகும்.

திண்மக் கழிவு முகாமைத்துவமென்பது உடனடியாகக் கட்டமைத்து விடக் கூடியதொரு திட்டமன்று. திண்மக் கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்பாக, நகரில் சேருகின்ற கழிவுகளைக் கொண்டு சென்று கொட்டுவதற்கு இடங்களைத் தேடிய போது; எதிர்ப்புகளும் தோன்றின. எங்கோவெல்லாம் சேருகின்ற கழிவுகளை தங்களது பிரதேசத்துக்குள் கொண்டு வந்து கொட்டுவதற்கு அங்குள்ள மக்கள் ஒருபோதுமே உடன்படப் போவதில்லை. கொழும்பு நகரக் குப்பைகளை பிலியந்தலையில் கொண்டு சென்று கொட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதும், இவ்வாறுதான் முதலில் எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் அம்மக்கள் சமாதானப்படுத்தப்பட்டதனால், பொலித்தீன், பிளாஸ்டிக் தவிர்ந்த உக்குகின்ற கழிவுகள் பிலியந்தலையில் கொட்டப்பட்டு வருகின்றன. எனினும் மீதொட்டமுல்லையில் குப்பைகளை மலையாகக் குவித்ததைப் போன்று பிலியந்தலையில் கொண்டு போய்க்கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் இடமளிக்கப் போவதில்லை. இப்போது உருவாகியுள்ள பிரச்சினையே இதுதான். எனவேதான் புத்தளம் பிரதேசத்தில் மற்றும் இடமொன்றை அரசாங்கம் இதற்காகத் தெரிவு செய்துள்ளது.

இலங்கையிலுள்ள நகரங்களில் கூடுதலான திண்மக் கழிவுகள் நாளாந்தம் சேருகின்ற இடம் கொழும்பு ஆகும். இங்கு சேருகின்ற கழிவுப் பொருட்களை எங்கே கொண்டு சென்று கொட்டுவதென்று தெரியாமல் மாநகரசபை நிர்வாகம் தற்போது குழப்பமடைந்து போய் நிற்கிறது. இதன் காரணமாகவே மாநகரசபை வாகனங்கள் இப்போதெல்லாம் கிரமமாக வருவதில்லை. வீதியோரங்களில் குப்பைகள் குவிந்து துர்நாற்றமெடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

கழிவுப் பொருள் முகாமைத்துவத்தில் நீண்ட காலமாக கவனம் செலுத்தாமல் உதாசீனமாக இருந்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை இது! திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தியும், உக்குகின்ற கழிவுகளை சேதனப் பசளையாக்கியும் ஆரம்பத்திலிருந்தே பழக்கப்பட்டிருப்போமானால் இத்தனை நெருக்கடி இப்போது உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை. சேதனப் பசளைகள் மண்வளத்தை அதிகரிப்பவையாகும். மண்ணுடன் நீண்ட காலம் நிலைத்திருந்து பயிர்களுக்கு பசளையாகப் பயன்படக் கூடியவை. யூரியா போன்ற செயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்தி வியாதிகளை வலிந்து வாங்கிக் கொள்ளும் அவசியமும் ஏற்பட்டிருக்காது.

ஜப்பான், மலேசியா, பிரிட்டன் போன்ற நாடுகள் குப்பைகளை இவ்வாறுதான் முகாமைத்துவம் செய்கின்றன. அங்கெல்லாம் குப்பைகள் விவகாரம் சிக்கலுக்குரியதல்ல.

நாம் இப்போதுதான் பொலித்தீன், பிளாஸ்டிக், கடதாசி, உணவுக்கழிவுகள் போன்றவற்றை தனித்தனியாக வகைப்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்ட இக்கழிவுகளை என்ன செய்வதென்பதையிட்டு இன்னுமே திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உள்ளூராட்சி நிறுவனங்கள் தடுமாறி நிற்கின்றன.

காலம் தாழ்த்தியே மீள்சுழற்சியைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோம். ஆனால் இனியும் அலட்சியமாக இருப்பது உகந்ததல்ல. அவ்வாறிருப்பின் எமது நகரங்களே எதிர்காலத்தில் குப்பை மலைகளாகி விடலாம். 

Comments