இன, மதம் பாராத சேவையாளர் அருட்தந்தை எலோசியஸ் கெஸ்பரஸ் | தினகரன் வாரமஞ்சரி

இன, மதம் பாராத சேவையாளர் அருட்தந்தை எலோசியஸ் கெஸ்பரஸ்

அமரர் அருட்தந்தை போல் எந்தனி எலோசியஸ் கெஸ்பரஸ் அடிகளாரின் 40வது நினைவு தினம்  மற்றும் அவரது 92 வது பிறந்த நாள் நேற்று முன்தினமாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.  

மனிதனை மனிதனாக வாழ வழிக்காட்டுவது, மக்கள் சேவையும், சமூக பணியும் சோதனைகள் அடங்கியது.

இதற்குச் சான்றாக சத்தியோதயம், தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகம், இனங்களுக்கிடையில் நீதிக்கும்,சமத்துவத்துக்குமான இயக்கம் இந்நிறுவனங்களின் ஸ்தாபகத் தலைவராகவும் செயற்திட்டங்களுக்கு இணைப்பாளராகவும், அதிசிரேஷ்ட சமூக செயற்பாட்டாளராகவும் சுமார் 42 ஆண்டுகளாக இடைவிடாது இன, மத, மொழி, பிரதேசம் பாராது தேசிய ரீதியில் சிந்தித்து செயலாற்றிய மாமனிதரே போல் கெஸ்பரஸ் ஆவார். இவரது வாழ்க்கை காலத்தின் சமூகத்தின் உரிமைக்காகவும், தொழிலாளர்களின் தேவைக்காகவும், மனிதநீதிக்கு முரணாக வடயங்களின் பேரிலும் குரல் கொடுக்க வைத்தது. மனித நேயமுள்ள சிறந்த வாழ்க்கை தத்துவங்களுடன் சிறந்த பகுப்பாய்வுடன் கூடிய மாண்பு மிகு மனிதனாகவே இவரைக் கண்டோம். உண்மையாகவே ஏழைகளை நேசித்த அவர்களுக்காகவே வாழ்ந்த உன்னதமானதொரு கத்தோலிக்க மதகுருவாவார். ஆமரர் அருட்தந்தையின் ஒரு தூரநோக்குச் சிந்தனைக்கு இவரது வாழ்க்கை வரலாறு சாதனைகள் ஆகியவற்றைக் சான்றாகக் கொள்ளலாம். இவர் தேசிய, சர்வதேச மட்டத்தில் நன்கு அறிந்த சமூக சேவையாளருமாவார். சுவீடன் நாட்டின் டைகோனியா நிறுவனத்தினால் 1989ம் ஆண்டு சர்வதேச சமாதான விருதினை அவர் பெற்றுள்ளார்.

இயேசு சபையை சார்ந்த (S.J)அமரர் போல்கெஸ்பரஸின் மறைவு மலையக பெருந்தோட்ட, கிராம, நகர, மக்களுக்கும் அவர்களைச் சார்ந்த ஸ்தாபனங்ககள், நிலையங்கள், அமைப்புக்கள், சங்கங்கள் உட்பட அவரை அறிந்த, தெரிந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அமரர் அருட் தந்தைபோல்கெஸ்பரஸ் 1925ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் திகதி சாதாரண பறங்கியர் குடும்பமொன்றில் கொழும்பில் பிறந்தவராவர். இயேசு சபையின் மதகுருவாகவும் அபிலாசையின் காரணமாக அவ்வியேசு சபையுடன் இணைந்து அதன் அடிப்படை பயிற்சியையும், கல்வியையும் பெற்றுக்கொள்வதன் பொருட்டு 1940 காலப்பகுதியில் கூடுதலாக இந்தியாவிலே தனது காலத்தைக் கழித்த அவர் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தையும் கண்டவராவார். 1949-1953 ஆண்டுகளில் இத்தாலியின் தேவதர்மம் கற்ற அவர் அந்நாட்டின் சமூக ஜனநாயக வியாபாரம் சம்பந்தமாகவும் அனுபவம் பெற்றவராவார். 1954-1957 காலங்களில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம் போன்றவற்றில் பட்டம் பெற்றவர். ஆமரர் அருட்தந்தை அவர்கள் கொழும்பு புனித ஆசிர்வாதப்பர், புனித சூசையப்பர் கல்லுௗரி பழைய மாணவராவார்.

1958-,1971 காலங்களில் அடிகளார் காலி புனித அலோசியஸ் கல்லுௗரியில் ஒரு ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். 1971ம் ஆண்டு முதல் காலகட்டத்தில் கண்டிக்கு வருகைத்தந்த பேராதனை ஈரியகமபிரதேசத்தில் இருந்து சிறிய கட்டடத்தில் தனது ஆய்வை மேற்கொள்வதற்கு ஆயத்தமானார். அவர் அப்பொழுது கண்டி மறைமாவட்டத்தின் ஆயராக விளங்கிய அமரர் மேதரு கலாநிதி லியோ நாணயக்கார அவர்களின் உதவியுடன் நேர்மைக்கும், நீதிக்குமான சமூக ஆய்வு செய்வதற்கு முற்பட்டார். 1972ம் ஆண்டு பெப்ரவரி 11ம் திகதியன்று கண்டி பஹிரவகந்த இவ்விடத்தை தெரிவு செய்ததோடு சமூக ஆய்வுக்கும் சந்திப்புக்குமான நிலையம் சத்தியோதய நிறுவனத்தை ஆரம்பித்தார். இதன் இணை ஸ்தாபகராக அமரர் ஆண்டகை லியொ ஆவார்.

மலையகத்தை தமிழ் மக்களின் பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமரர் அருட்தந்தை போல்கெஸ்பரஸ் செய்த ஆய்வுகள், ஏனைய செயற்பாடுகள் மூலம் தொழிலாளர்களினது பொருளாதாரம் உரிமைகள் அவர்களுடைய வாழ்வாதாரம் அடிப்படை தேவைகள் எதிர்நோக்கிய சவால்கள், தேயிலை, றப்பர் தொழிலின் போக்கு, வெளியீடுகள், கட்டுரைகள் எழுதி சமர்பப்பித்த அனுபவமும் கொண்டவர். தோட்டமக்களின் தேவைகளை நேரடியாக கண்டு கலந்துரையாடி உள்ளர். மலையகத்தில் நூற்றுக்கனக்கான தொழிலாளர் நலம் சார்ந்த கருத்தரங்கு, செயலமர்வுகள், கூட்டங்களிலும் பங்கு கொண்டும், ஒழுங்கு அமைப்பு செய்து நடாத்தியுள்ளமை, பிரித்தானியர் இலங்கைக்கு வந்த காலப்பகுதியோடு எமது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட கோப்பி, தேயிஎன்பன தொடர்பில் கட்டுரைகள் எழுதியவர்

எமது இலங்கை பிரிட்டிசாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 1948ம் ஆண்டுக்காலம் தொடக்கம் சுதந்திர இலங்கையின் மலையக பெருந்தோட்ட மக்களினது பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளமை, எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், அந்நிய செலாவணியைத் தேடித் தந்து ஏனைய மக்களின் நலன்காக்கும் தோட்டத்தொழிலாளர்கள் சகல விடயத்திலும் இந்த நாட்டில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக பல தலைமுறைகளாக வரழ்ந்து வரும் என்பதே கசப்பான உண்மையாகவும், மலையக மக்கள் இன்றும் நாளையும் சமூக மேம்பாட்டின் அவல நிலையிலும் சுதந்திர நாட்டின் அந்நிய மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியவர்.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் அதே அரசியல் யாப்பின் கீழ் புதிய சட்டங்களை நிறைவேற்றி இந்திய வம்சாவளி மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து இலங்கை அரசு நீக்கியது. இந்தியாவிலோ அல்லது பிரித்தானிய ஆட்சிக்குக் கீழ் இருந்து சுதந்திரம்்பெற்ற நாடுகளிலோ இத்தகைய ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இது ஒரு அநியாயமானகவும், ஐக்கிய நாடு சபை மனித உரிமைகள் பிரகடனத்திற்கு மாறாகவும் அமைந்திருந்தது. இவர்கள் அனைவரும் நாடற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர். குடியுரிமை, வாக்குரிமையும் இழந்த போதிலும் இவ்விடயம் நீண்டகாலமாக இழுபறிநிலையிலேயே இருந்து வந்தது. இவ்வுரிமைகளை மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதில் முன்நின்று செயற்பட்டவர்.

1964ம் ஆண்டு ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி விஷேடமாக தோட்ட மக்கள் இந்தியா வம்சாவளியினரில் அனேகமானோர் இந்தியா செல்ல ஆரம்பித்தனர். இவர்களை ஏமாற்றிப் பிழைத்தவர்கள் அதிகம் கண்டி இந்திய உதவித் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இம்மக்களுக்காக மிகமுக்கிய வேலைகளுக்கு பலவிதத்திலும் உதவிகளை செய்து இவர்களை சத்தியோதய நிலையத்தில் தங்க வைத்து வழிக்காட்டியாகவும் செயல்ப பட்டுவந்தார்.

1971ம் ஆண்டு ஜே.வி.பி.கிளர்ச்சிக்குப் பின்னர் இலங்கை பெருந்தோட்டங்களைத் தேசிய மயமாக்கல் என்ற அடிப்படையில் பல தோட்டங்கள் கையேற்கப்பட்டு புதிய நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டன. இதனாலும் இந்திய தோட்டத்தொழிலாளர்கள் பரவலாக பாதிக்கப்பட்டார்கள்.சத்தியோதய நிறுவனத்தை ஆரம்பித்த பின் அவரின் உள்ளாரந்த சிந்தை வெளிவர ஆரம்பித்தது. 1971ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியானது அவரை பாதித்த சம்பவமாகும். இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு மீண்டும் இளைஞர்கள் முகம் கொடுக்க கூடாதென்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். கடவுள் மீது அசையா நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஒரு மாக்ஸியவாதியாவார். அவர் எப்போதும் மனித நேயம், நீதி, நியாயம் இரண்டும் ஒன்றே எனக் கூறிவந்தார்.

1977 -1983க்கும் இடைப்பட்ட கால கட்டம் அகில இலங்கை ரீதியான இனக்கலவரத்தில் ஆரம்பித்து அதைவிட மோசமான இனக்கலவரத்துடன் முடிவடைந்தது. இக்காலகட்டத்தில் ரீதியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டிய இனங்களுக்கிடையிலான சமாதானம் தொடர்பான சத்தியோதயத்தின் நிலைப்பாடு சத்தியோதயத்திற்கும் அதனுடன் நெருங்கிய உறவு கொண்டவர்களுக்கும் மகத் தெளிவாகத் தென்பட்டது. தொழிலாளர்களின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அமரர் அருட்த தந்தை இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்.

1979ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம் நிறைவேறியது தமிழ்ப் பகுதிகளில் அவசர காலநிலை ஏற்பட்டது. பலதோட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் விடுதலை பெற பல்வேறு வழிகளில் முயற்சிகளை எடுத்தார். வன்செயல்கள் மூலமாக சாதாரண தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்ததோடு இம்மக்களினது பாதுகாப்புக்கள் தொடர்பாகவும், அரசு, அமைச்சு, தோட்டநிர்வாகம் பொலிஸ், கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுத்தவர்.

மக்கள் சேவைக்காக உலகின் பல நாடுகளுக்கும் விஜயம் செய்த அமரர் அருட்தந்தை போல்கெஸ்பரஸ் அங்கெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல், செயலமர்வுகள், கருத்தரங்குகள், நிகழ்சிகள் என்பவற்றில் பங்குபற்றியதோடு பெருந்தோட்டத்துறை சமூக, பொருளாதார, அரசியல், குறிப்பாக சிறுப்பான்மையினர் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றை சுட்டிக் காட்டியவர். மக்களின் பிரதிநிதியாகவும் உரிமைக் குரலாகவும் செயலாற்றினார்.

அவர் தடம்பதியாத சமூக நிறுவனங்களே இல்லை என்று கூறும் வகையில் பல சமூக அமைப்புக்களின் உருவாக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவர் என்ற பெருமை அமரர் அருட்த் தந்தை அவர்களையே சாறும்.

அடிகளார் அவர்களுக்கு தோட்டப்புர மக்கள் தொடர்பாக ஒரு தெளிவான சிந்தனை இருந்தது. அந்த வகையில் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான தந்தையை மலையக பெருந்தோட்ட மக்களும், ஏனைய சமூகங்களும் இழந்துள்ளனர்.

அமரர் அருட்தந்தை போல்கெஸ்பரஸ் அவரது இறுதிக் காலத்தில் இயங்க முடியாத போது இயேசு சபையின் நீர்கொழும்பு மாகாண இல்லத்தில் அவரைப் பராமரித்து வந்தனர். கடந்த 26.04.2017 அன்று தனது 92 வயதில் அவர் காலமானார்.

இறுதி அஞ்சலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சார்ந்த அனைத்து மதங்களையும் சேர்ந்த மத அரச, தொழிற்சங்க அரசியல், கல்வி, கலாசார, சமூக, சமூதாய அமைப்புக்களையும் இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டனர். அவரது சேவைகளை அங்கீகரிக்கும் நிகழ்வாகவே இதைக் கருத வேண்டும்.

பெனடிக்ட் குருஸ்

முன்னாள் பணியாளர்

தோட்டப் பிரதேசங்களுக்கான

கூட்டுச் செயலகம், கண்டி 

Comments