பொலிஸ் பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபித்துக்காட்டுவேன் | தினகரன் வாரமஞ்சரி

பொலிஸ் பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபித்துக்காட்டுவேன்

விசு கருணாநிதி

 

ஓர் அரச அதிகாரி சிறந்த சேவையை ஆற்றுவதன் மூலம் மக்கள் செல்வாக்ைகப் பெற்றிடுவார். அரசியல்வாதிகளும் அவ்வாறுதான். பிழையாக நடப்பவர்கள் பிரபல்யம் அடையலாம். ஆனால், மக்கள் மனங்களில் நிலைத்து நிற்க முடியாது. பொலிஸ் துறை என்பதும் ஓர் அரச துறைதான். மக்களுக்குச் சேவையாற்றுவதுதான். எனினும், சில உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளால், பொலிஸ் என்றால், பயப்பட வேண்டிய ஒன்றென்று மக்கள் மத்தியில் ஓர் அபிப்பிராயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்தான் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரட்ணம். அவரை ஒரு பொலிஸ் அதிகாரி என்ற ரீதியிலன்றிச் சிறந்த மனிதர் என்று சகலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அவர் செயற்படுகின்ற விதமே அவரை எல்லோருக்கும் தெரிந்தவராக்கியிருக்கிறது! மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதர்; நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்ற கருத்து பரவலாகவே இருக்கிறது. அதுசரி நகைச்சுவை உணர்வு மிக்கவர் பொலிஸில் கடமையாற்ற முடியுமா, சாத்தியமா? என்று கேட்டால், ஏன் முடியாது? என்று திரும்பக் கேட்கிறார் எஸ்.எஸ்.பி.அரசரட்ணம்.

உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பொலிஸ் சேவையில் கடமையாற்றி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக ஓய்வுபெற்றுள்ள அவர், சமூக பொலிஸ் பிரிவின் கிழக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் சேவையைப்பெறுவதில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்குத் தீர்வினைப் பெற்றுக்ெகாடுக்கு முகமாகவே இந்தப் பொலிஸ் பிரிவு கடந்த ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள சுமார் பதினைந்தாயிரம் பொலிஸாருக்குத் தமிழில் கடமையாற்ற தெரியாது என்று கூறப்படுகிறது. எனவே, ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களைக்ெகாண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தப் பிரிவின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் பணியாற்றுகிறார். நீர்கொழும்பு பொலிஸ் கல்லூரிக்குச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

"பொலிஸ் என்பது பயப்படும் துறை அன்று. அஃது ஓர் அரச சேவை. இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. பொலிஸ் நிலையம் சென்றால் கௌரவக்குறைவும் இல்லை. இதனைப் புரிய வைத்துச் சிறந்த மக்கள் சேவையை வழங்குவதற்காக சமூக பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. " என்கிறார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அரசரட்ணம்.

பொலிஸார் என்பவர்களும் மனிதர்கள்தான். அவர்களும் ஓர் அன்பான அப்பா, அண்ணன், தம்பி, கணவனாக வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், சீருடை அணிந்ததும் அவர்கள் வித்தியாசமானவர்களாக மாறிவிடுகிறார்கள். மனிதனுக்குள் ஔிந்திருக்கும் மிருகங்கள் வெளியில் வரும்போதுதான் மற்றவர்கள் சீண்டப்படுகிறார்கள். ஆகவே, மக்களின் நண்பனாகப் பொலிஸார் இருக்க முடியும் என்பது சாத்தியமா? என்ற வலுவான கேள்விக்கு மத்தியில், சமூக பொலிஸ் மூலம் அதனைச் சாதித்துக் காட்ட முடியும் என்கிறார் இவர்.

"இந்தப் பிரிவு பற்றியும் அஃது ஆற்றும் சேவை பற்றியும் மக்களுக்குத் தெளிவு இல்லையே, விபரமாகச் சொல்வீர்களா?"

"உண்மையில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் சிறந்த உறவைக் கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ் என்றாலே தமிழ் மக்களுக்கு நம்பிக்கையிழந்த ஒரு துறையாகக் காணப்பட்டது. தமிழில் முறைப்பாடு செய்ய முடியாது; உரையாட முடியாது என்ற சிக்கல் இருந்தது. தற்போது அவ்வாறு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் சமூக பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அங்குத் தமிழ் மக்களும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக்ெகாள்ள முடியும். அங்குத் தமிழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, தமிழில் முறைப்பாடு செய்வதில் இனி எந்தத் தடங்கலும் இருக்காது. தேசிய அடையாள அட்டை தொலைந்து ​போகும் சந்தர்ப்பங்களில், பொலிஸில் முறைப்பாடு செய்து அதன் பிரதியைப் பெற்றுக்ெகாள்ள வேண்டும். சிலர் இதற்குச் செல்வதற்கே தயங்குவார்கள். இந்தப் பொலிஸ் பிரிவிற்கு வந்தால், தங்கள் தேவையை நிறைவேற்றிக்ெகாடுப்பார்கள்"

''நீங்கள் சொன்னதைப்போல் முடிச்சு மாறிகளிடம் பணப்பையைப் பறிகொடுத்தவர்கள், முறைப்பாடு செய்யச்சென்றால், பொலிஸார் முறையாக நடந்துகொள்வதில்லை என்றும் குறித்த பகுதியின் முடிச்சுமாறிகள் பொலிஸாருக்கும் தெரிந்தவர்கள் என்றும் ஓர் அபிப்பிராயம் இருக்கிறதே!?"

"அப்படிச் சொல்ல முடியாது. சிலவேளைகளில் திரும்பத் திரும்ப குற்றஞ்செய்பவர்களை இனங்கண்டுகொண்டிருக்கக்கூடும். அவ்வாறு முறைப்பாடு செய்யச்சென்றால், அதனைப் பதிவுசெய்துகொண்டு, அதன் விசாரணை பெறுபேற்றை அறிவிக்க வேண்டும்"

 

"பொலிஸ் என்றதுமே உடனே நினைவுக்கு வருவது எப்.ஐ.ஆர்.முதல் தகவல் அறிக்ைக. தமிழில் முறைப்பாடு செய்தால், அல்லது எழுதிக்ெகாடுத்தால், அஃது ஏற்றுக்ெகாள்ளப்பட்டு நீதிமன்றம் வரை தமிழிலேயே முன்னெடுக்கப்படுமா?"

"நிச்சயமாக. சந்தேகமில்லை. தமிழில் செய்யப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் நீதிமன்ற நடவடிக்ைககள் வரை தமிழிலேயே முன்னெடுத்துச் செல்லப்படும். அதனைச் செய்வதற்கு உதவுவதற்காகத்தான் இந்தப் பிரிவையே ஆரம்பித்திருக்கின்றோம்"

"பொலிஸாரின் கடமை 24 மணித்தியாலமும் என்கிறார்கள். ஆனால், ஓர் இடத்தில் அநீதி நடந்தால், அந்த இடத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இருக்கும் பட்சத்தில், அவரின் உதவியை நாட முடியுமா?"

"தாராளமாக. அவ்வாறு அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையைச் செய்யத் தவறினால், அது தவறு. உதாரணமாக நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். எனக்குப் 19 வயதாக இருக்கும்போது மருதானையில் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்தேன். அவருக்குக் கொம்பனித்தெருவில் பாதணி விற்பனை கடையொன்று இருந்தது. கொம்பனித்தெருவுக்குச் செல்வதற்காக 137ஆம் இலக்க பஸ் வண்டியில் பயணித்துக்ெகாண்டிருக்கும்போது,

"ரெக்னிக்கல்" (தொழில்நுட்பக் கல்லூரிச்) சந்தியில் ஒருவரின் பணப்பையை ஒருவர் எடுத்துவிட்டார். அதனை நான் கண்டேன். கையுமெய்யுமாகப் பிடித்துவிட்டேன். அதனைத் தொடர்ந்து அந்த நபர் பஸ்ஸிலிருந்து இறங்கினார். கூடவே மேலும் மூன்று பேர் இறங்கிச் சென்றார்கள்.

என்னைப் பார்த்த பஸ் ஊழியர்கள் பொலிஸ் என நினைத்திருக்க வேண்டும். அப்போது நான் பொலிஸ் இல்லை. உடல் வாகு அப்படி இருந்திருக்கும். அந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச காலத்திற்குப் பின்னர்தான் எனக்குப் பொலிஸ் உத்தியோகம் கிடைத்தது. அப்போது நான் கடமைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு கால்களையும் இழந்த ஒருவர், யாசகம் செய்துகொண்டிருக்கிறார். அவரை உற்றுப்பார்த்தேன். அவர்தான் அன்று பஸ்ஸில் 'பிக்-பொக்கற்' அடித்தவர். ஊரார் உழைப்பைப் பறித்தவருக்கு நேர்ந்த கதிதான் அது!"

"ஓர் ஆபத்து, அவசரம் நேர்ந்தபோது, அந்த இடத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் முறையிட்டால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள் என்று அவர் தட்டிக்கழித்தால்?"

"அவர் அவ்வாறு சொல்ல முடியாது. இப்போது நான் கிழக்கு மாகாணத்திற்குத்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றேன் என்று கொழும்பில் என் கண் முன்னால் நடக்கும் ஓர் அநீதியைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பொலிஸார் கடமையைத் தவறினால், கண்டிப்பாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்."

 

"அநீதியைக் கண்டதும், தைரியத்துடன் முன்சென்று நடவடிக்ைக எடுத்தீர்கள். அவ்வாறு சாதாரண பொது மக்கள் ஆஜராக முடியுமா?"

"மனித உரிமையைப் பாதுகாக்கும் உரிமை சகல குடிமகனுக்கும் இருக்கிறது. பிரச்சினை எதற்கு என்று பலர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். வழக்கு வம்புக்குச் செல்ல வேண்டும்; சாட்சியம் சொல்ல வேண்டும் என்ற அச்சம் அவர்களைக் குடிகொண்டிருக்கிறது. அப்படி இல்லாமல் தயக்கமின்றித் தட்டிக்ேகளுங்கள்"

(தொடர் 17ஆம் பக்கம்)

Comments