மாணவர்களின் மனத்தை வென்ற விரிவுரையாளர் கலாநிதி எஸ்.வை.ஸ்ரீதர் | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களின் மனத்தை வென்ற விரிவுரையாளர் கலாநிதி எஸ்.வை.ஸ்ரீதர்

 விசு கருணாநிதி  

கற்பித்தல் என்பது எல்லோராலும் இயலாது. என்னதான் பயிற்சி எடுத்தாலும் ஒரு சிலரால்தான் மனத்தில் பதியும்படி பாடம்புகட்ட முடியும்; வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க முடியும்.

இன்று இந்தத் துறைக்கு வந்துள்ள பலர், தொழிலுக்காகவே வந்திருக்கிறார்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்கள். இப்படிச் சொல்வதற்காக ஆசிரியர்கள் வருத்தப்பட்டாலும், மனச்சாட்சி உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தன்னலம் கருதாத ஒரு நல்லாசிரியராகப் பணியாற்றிய மொழியியல்துறை முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி எஸ்.வை.ஸ்ரீதர், தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்! பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் சரி சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும் சரி அவர் அதனை நிரூபித்திருக்கிறார். அப்படி நன்றாகக் கற்பிக்கும் எல்லா ஆசிரியர்களாலும் மாணவர்களின் மனத்தை வெல்ல முடியாது. இவர் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தின் அன்பையும் சம்பாதித்துக்கொண்டவர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரை நிகழ்த்திக்கொாண்டிருந்தவேளையில் காலன் இவரை அணைத்துக்கொண்டான் என்பதைச் சொல்லும்போதே கண் கலங்குகிறார்கள் வகுப்புத் தோழர்கள். ஐம்பது வயதில் இவ்வாறு மரணம் அணைக்கும் என்று யார்தான் எண்ணியிருப்பார்கள்?

பொலநறுவை, மன்னம்பிட்டியைச் சேர்ந்த இவர், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மொழித்துறையில் கற்றுப் பட்டம் பெற்று, அதே பல்கலையில் விரிவுரையாளராகிப் பின்னர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார்.

சிங்கள மாணவர்களுக்குத் தமிழும், தமிழ் மாணவர்களுக்குச் சிங்களமும் கற்பித்து இன நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பு செய்த இவர், ஏராளமான தமிழ் பட்டதாரிகள் உருவாகுவதற்குப் பாடுபட்டிருக்கின்றார். இதனால், இவரது மரணம், ஹட்டன், கண்டி, மாத்தளை பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளின் கல்விச் சமூகத்தினைரச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 29ஆம் திகதி மன்னம்பிட்டியில் இறுதிக்கிரியை நடைபெற்றபோது நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மாத்தளை முதலான பகுதிகளில் இருந்து அவருடன் ஒன்றாகக் கல்வி கற்றவர்களும் பெருந்திரளான மாணவர்களும் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

எவரிடமும் சினந்து பேசாத கலாநிதி ஸ்ரீதர், உரியவர்களுக்கு உரிய விதத்தில் மரியாதை கொடுத்துக் கனம் பண்ணுபவர். நேர்மையாளன், தொழில் பக்தி நிறைந்தவர். பொறுப்பேற்ற பணியைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவர். சிறந்த சமூக சேவையாளன். மொழியியல் தொடர்பாக வெளியான பல நூல்களின் ஆசிரியர். இத்தனைக்கும் தன்னை எந்த இடத்திலும் ஒருபோதும் வெளிக்காட்டிக்ெகாள்ள விரும்பாதவர். என்னதான் தம் பள்ளித்தோழர்கள் உயர் பதவிகளில் இருந்தாலும், அவர்களின் தயவினையோ ஆதரவினையோ ஒருபோதும் நாடாதவர்.

மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுச் செல்லும் இவர், உண்மையிலேயே ஏழை மாணவர்களின் கல்வி வளரச்சியில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்ெகாண்டிருந்து திடீரென மறைந்திருப்பதால், பல மாணவர்கள் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, இவ்வாறான கல்வியாளர்களை அவர்கள் வாழும்போதே வாழ்த்துவதற்குப் பொருத்தமான ஏற்பாடுகளைக் கல்விச் சமூகமும் மாணவர்களும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். 

Comments