பூங்கொடி | தினகரன் வாரமஞ்சரி

பூங்கொடி

கோவிலூர் செல்வராஜன் 

னத்திற்குள் ஒருவித பயம் குடிகொண்டிருந்தாலும் அவளுக்குள்

ஏதோவோர் இனம்புரியாத இன்பம்,ஒரு குதூகலம் பிரவாகித்துக் கொண்டிருந்தது.

வீட்டில் வேலைகள் செய்கின்றாள், பிள்ளையைப் பராமரிக்கின்றாள். கணவனுக்கு பணிவிடைகள் செய்து, அவரை வேலைக்கு அனுப்புகின்றாள். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த டெலிபோனில் அந்த குரலைக்கேட்டு, மெய்மறந்துபோனவள் இன்னும் மீளவில்லை.

"ஹலோ பூங்கொடி எப்படி இருக்கிறீங்க" என்று அந்த போனில், மறுமுனையில் இருந்து கேட்ட குரல் அவளை வாயடைக்க வைத்துவிட்டது. " ஹலோ பேசுங்க பூங்கொடி, உங்க போன் நம்பர்கள் சரிதான். உங்களை நன்றாக தெரிந்த ஒருவர்தான் தந்தார்.

சரி, பரவாயில்லை நான் மறுபடியும் பேசுகின்றேன்" என்று போனை வைக்கும் சத்தம்கேட்டு

பூங்கொடி தன்னை சுதாகரித்துக்கொண்டாள். 'அதே குரல்.. எப்படி. ஏன் ,எதற்காக, ஐயோ என்னவோ பண்ணுதே" என்று, இரண்டு நாட்களுக்குமுன் தொலைபேசியை வைத்துவிட்டு

அன்று முழுதும் தனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை உள்ளீர்த்துக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. அந்த ரெலிபோனுக்கு அருகில் வந்து நிற்கின்றாள். மணி அடித்தால் ஆர்வத்தோடு எடுத்து காதில் வைக்கின்றாள். அந்தக் குரலாக இருக்குமோ என்று. ஆனால், அது வேறு ஒருவர். இப்படி அந்த டெலிபோன் அழைப்புக்காக அவள் காத்திருக்கிறாள். சரி,பூங்கொடி. அழகான பெயர் அல்லவா. யாரிவள். தாயகத்திலிருந்து அடிபாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகருக்கு வந்தவள். இங்கு இரண்டு வருடங்களாக வசிக்கின்றாள். அக்கம்பக்கம், யாரைப் பார்த்தாலும் வெள்ளைத்தோல் நிறத்தவர்கள்தான். பேச்சுத் துணையே இல்லாமல் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு பெண் பிள்ளை பிறந்தது . அதற்கும் இரண்டு வயதாகிறது. ஒரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு படுக்கையறை, இருக்கையறை, சமையலறை, கழிப்பிடத்தோடு கூடிய குளியலறை இதுதான் அவள் குடியிருக்கும் வீடு.

தாயகத்தில் வன்னிப் பெருநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் பிறந்தவள் பூங்கொடி.

ஓர் ஆசிரியையாக இருந்தவள். ஓரளவிற்குத் தமிழில், இலக்கியத்தில் அவளுக்கு அறிவு இருந்தது. தன் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஆரம்ப வகுப்பில் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அன்று தனிக்காட்டு ராஜாவாக,ஒரேயொரு ஒலிபரப்பு நிலையமாக இருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனம் ஒலிபரப்பிய தரமான தமிழ் நிகழ்ச்சிகளை, நாடகங்களை, திரைப்படப் பாடல்களைக் கேட்டு, ஒரு வானொலி ரசிகையாகவும்

இருந்தாள். அவ்வப்போது அவள் ஒரு சில சஞ்சிகை நிகழ்சிகளுக்கு தனது ஆக்கங்களை எழுதி அனுப்பி, அது ஒலிபரப்பப்படும்போது கேட்டு ரசித்தவள். பலரையும் கேட்கும்படி செய்து மகிழ்ந்தவள். அவைகள் ஒலிபரப்ப காரணமாக இருந்தவர் ஒருவர் இருக்கிறார்.

பூங்கொடிக்கு ஒரு சகோதரி,இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரி திருமணமாகி வடக்கில் வடமராட்சியில் வசிக்கிறாள். மூத்த சகோதரன் திருமணமாகி முல்லைத்தீவில் வசிக்கின்றார். பூங்கொடியும், தனது இளைய சகோதரனும்தான் வன்னியில் பெற்றொருடன்

வசித்து வந்தார்கள். பூங்கொடியின் தகப்பனார் ஒரு விவசாயி. நிறைய நிலபுலங்கள் இருந்தன. நெல் சாகுபடியும், மேட்டுநிலப் பயிர்களும் விளைவித்தார். ஆனால் போர்ச்சூழல் வந்தபோது எல்லோரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படதல்லவா. பூங்கொடியின் வீட்டிலும் அந்த பாதிப்பு இருந்தது.

பூங்கொடி எப்போதாவது இருந்துவிட்டு அக்காவீட்டுக்கு பருத்தித்துறைக்குச் செல்வதுண்டு.

பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் ஓரிரு தினங்கள் அக்காவீட்டிலும் தங்குவதுண்டு.

ஒருமுறை பூங்கொடி, தன் அக்கா குழந்தையின் முதலாவது பிறந்தநாள்

கொண்டாட்டத்திற்குப் பருத்தித்துறை சென்றாள். வல்வெட்டி, கரவெட்டி,கரணவாய், துன்னாலை ஆகிய கிராமங்களிலிருந்தும் பூங்கொடியின் அக்கா கணவரின் உறவுகள் வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில்தான் பிறந்தநாள் விழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு ஒழுங்குகள் நடைபெற்றன. பூங்கொடி இப்படியான நிகழ்வுகளை முன்னெடுத்து செய்வதில் மிக விருப்புடையவள். ஆரவாரத்துடன் எல்லா வேலைகளையும் தானே எடுத்துச் செய்வாள். பலரும் அவளின் ஆற்றலைப் பாராட்டிப் பேசுவார்கள். அன்றும் அவள் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன் கைவரிசையை காட்டினாள். கொழும்பிலிருந்தும் பூங்கொடியின் அத்தான் புலேந்திரனுக்கு தெரிந்த நண்பர்கள் இருவர் வந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் இளைஞர் லட்சணமாகவும் இருந்தார். கலகலப்பாக எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்தார். பூங்கொடி அந்த இளைஞனின் பேச்சை செவிமடுதுக்கொண்டும் அவனை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டும் இருந்தாள். பிறந்தநாள் விழா மண்டபத்தில்குழந்தைக்குப் பிறந்த நாள் பாட்டெல்லாம் பாடி,கேக் வெட்டி எல்லாம் முடிந்தபின்

நிகழ்சிகள் சில நடந்தன. அப்பொழுது பூங்கொடியின் அத்தான் மைக்கை எடுத்து பேசினார்.

"இப்பொழுது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பாட்டுக்கு, எசைப்பாட்டு நடைபெறும். இதை நடத்த அன்பு சகோதரர் வினோத்தை அழைக்கின்றேன்" என்றார். அந்த வினோத் வேறு யாருமல்ல பூங்கொடி கண்வைத்த இளைஞன்தான். வினோத் தனக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியை கலகலப்பாகத் தொடங்கினான். கூட்டத்திலிருந்த ஆண்களும்,பெண்களும் வந்து ஆளாளுக்கு பாட்டும், அதற்கு எசைப்பாட்டும் பாடி மகிழ்வித்தார்கள். முடிவில் பூங்கொடி நல்லா பாடுவாள் என்று அவளின் அக்கா சொல்ல.மைக்கில் வினோத் பூங்கொடியை அடுத்துப் பாட அழைத்தான். பூங்கொடி ஒருவித பதட்டத்தோடு சென்றாள்.

"வணக்கம் பூங்கொடி. என்ன பாட்டுப் பாடப் போகின்றீர்கள்." என்று அவன் கேட்டதும், பூங்கொடி., "அது,,வந்து, அது., வந்து" என்று தடுமாறினாள்.

உடனே அவன் அவளைக் கிண்டல்பண்ண, " சரி இப்பொழுது பூங்கொடி அது வந்து அது வந்து"

என்ற பாடலை பாடுவார் கேட்டு மகிழ்வோம்" என்றான் பூங்கொடி, உடனே " இல்லை இல்லை.. நான் சொல்லவந்தது "

"நீங்க ஒன்றும் சொல்லவேண்டாம். உங்களுக்கு விருப்பமான பாடலை பாடலாம். எங்கே எல்லோரும் பூங்கொடிக்கு ஒரு முழுமையான கரவொலி கொடுங்கள்" என்று கேட்க மண்டபம் நிறைந்த கரவொலி கேட்டு ஓய்ந்தது.

பூங்கொடி எந்த தயக்கமுமின்றி பாடினாள். "உன்னைநான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்..என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன்" என்ற பாடலை மிக இனிமையாகப் பாடி முடித்தாள். மண்டபம் நிறைந்த கரகோசம் கிடைத்தது. அவளின் அக்கா வந்து அவளை கட்டி அணைத்துப் பாராட்டினாள்.. அந்தப் பாட்டுக்கு எனப்பாட்டுப் பாட ஒருவரும் வரவில்லை.

எல்லோரும் வினோத் நீங்கள்தான் பாடவேண்டும் என்று கூச்சலிட " ஓகே நானே பாடுகின்றேன்" என்று சொல்லி பாடினான் வினோத்."ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை. அவள் கண்ணைப்பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் மணமில்லை" என்ற பாடலை அவன் பூங்கொடியை பார்த்தே பாட, பெரிய கைதட்டல் கேட்டது. மிக அருமையாக அங்க அசைவுகளோடு அவன் பாட அனைவரும் ஆரவாரம் செய்து அவனை மகிழ்வித்தார்கள். பூங்கொடியும் நாணி தலை குனிந்தாள்.

பிறந்தநாள் விழா இனிதே நிறைவு பெற, எல்லோரும் மாலை ஆறு மணிக்கு முதல் தங்களின் ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால்,புலேந்திரன் குடும்பத்திடம் விடை பெற்றுச் சென்றார்கள்.

கொழும்பிலிருந்து வந்த இருவரும், அதில் வினோத் ஒருவர், பூங்கொடியின்

அக்காவீட்டில்தான் அன்று இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் அவர்கள் பயணம் செய்ய வேண்டும். ஆதலால் மண்டபத்தில் எல்லா வேலைகளும் முடிந்தபின் அவர்கள் பூங்கொடியின் அக்கா வீட்டுக்கு வந்தார்கள். எல்லோரும் களைப்படைந்திருந்தார்கள்.வினோத்தும்,அவரோடு வந்திருந்த குமரேசன் அவர்களும் பூங்கொடியின் அத்தான் புலேந்திரன் அவர்களும் வீட்டின் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள்.

சற்று நேர மௌனத்தின் பின்னர் புலேந்திரன் அவர்களை பார்த்துப் பேசினார்.

"எல்லோரும் களைப்படைந்து விட்டோம் இல்லையா வினோத் " என்றார்.

"அவ்வளவு களைப்பென்று இல்லை. என்றாலும் ஒரு பொடி வோஸ் எடுத்தால் பிரெஸ்

ஆகிடலாம்" என்றான்.

"கண்டிப்பாக. வாங்க மூவரும் கிணற்றடிக்குச் சென்று குளித்துவிட்டு வருவோம் என்ற புலேந்திரன் அறைக்குள் சென்று அவர்களுக்கு சோப்,டவல் எல்லாம் எடுத்துவந்தார்.

அதைப் பார்த்த வினோத், "வேண்டாம். எல்லாம் எங்களிடம் இருக்கின்றன" என்று தங்களுக்குத் தரப்பட்ட அறைக்குள் சென்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றடிக்குச்சென்றான். கிணற்று தண்ணீரில் குளிப்பதில் அவனுக்கு மிகுந்த ஆவல். கொழும்பில் குளியறையில் குளித்துப் பழகிவிட்டான். என்றாலும் அவன் விடுப்பில் ஊர் செல்லும்போதெல்லாம் வீட்டில் கிணற்றடியில்தானே குளிப்பான். அதனால் இங்கு குளிப்பதில் அவனுக்குச் சந்தோசம். தகர வேலி அடைத்திருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவன் மற்றவர்களுடன் குளித்தான். யாராவது வந்து பார்த்து விடுவார்களோ என்று தகர வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்துக்கொண்டே குளித்து முடித்தான். அப்படி ஒன்றும் ஆகவில்லை. இப்போ எல்லோரும் பிரஷ்ஷாயிட்டாங்க. ஹாலில் அமர்திருந்தார்கள். புலேந்திரன்

அறையிலிருந்து வந்து பேசினார்.

"ஓகே விடிந்தால் நீங்கள் புறப்பட்டு விடுவீர்கள். அதனால் இப்போ கொஞ்சம் சந்தோசமாக இருப்போமே. வினோத் ஒன்றும் பாவிக்க மாட்டார். நானும் நீங்களும்தான் எடுக்கவேண்டும் என்று குமரேசனை தட்டினார் புலேந்திரன்.

"ஓ அதுக்கென்ன எடுப்பமே என்றார்" குமரேசன் புலேந்திரன் சென்று ஒரு மென்டிஸ் போத்தலும்,இரண்டு கிளா சும் கொண்டு வந்தார்.

அதை டிபோயில் வைத்துவிட்டு, குசினிக்குள் சென்று பிறிச்சில் இருந்த கொக்ககோலா போத்தலையும் கொண்டு வந்து வைத்தார். பிறகென்ன சமா தொடங்கியது.

பூங்கொடியின் அக்கா சமையலறைக்குள் நின்று இரவுச் சாப்பாடு தயார் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

பூங்கொடி அறையில் குழந்தையை வைத்திருந்தவள் அது உறங்கியதும், தொட்டிலில் படுக்கவைத்துவிட்டு குசினிக்குள் வந்தாள். அவளைக் கண்டதும் அக்கா கேட்டாள். "என்ன, பிள்ளை தூங்கிற்றாளோ"

"ம், இப்பதான் தூங்கினாள்,சரி நீங்க என்ன எல்லாம் முடிச்சிட்டீங்களா நான்

ஏதாவது செய்யணுமா"

"எல்லாம் முடிந்த மாதிரிதான். நீ,அந்த சம்பலுக்கு மட்டும் கொஞ்சம் புளியை

விட்டு பிசைந்துவிடு. எலுமிச்சை வெட்டின பாதி. பிறிச்சில் இருக்கு" என்றவள், குழல் புட்டை எடுத்து ஹாட் பாக்கில் இறக்கி மூடினாள்.

"அக்கா,அத்தானுக்கு எப்படி பழக்கம் இவர்கள்" என்று கேட்டாள் பூங்கொடி.

"இவர் கொழும்பில் வேலை செய்த நேரம்,அந்த முருகேசன் இவரோடதான் வேலைசெய்தவராம்.

வினோத், முருகேசனுக்கு தெரிந்த பெடியன். மீடியாவில் வேலை. எழுத்து, பாட்டு, பத்திரிகை, வானொலி என்று மிக அசத்தல் பேர்வழி. நாமும் இண்டைக்கு பார்த்தோம்தானே.

எப்படி நிகழ்ச்சியை கலகலப்பாக செய்தார் என்று. உன்னையும் கிண்டல் அடித்தாரே ..அதை எல்லோரும் ரசித்தோம்"

"அக்கா, போங்க நீங்க, அது எனக்கு வெட்கமா போயிற்று. நான் எப்படிப் பாடினேன் என்று தெரியல்ல. அவ்வளவு பதட்டமாக ஆரம்பத்தில் இருந்தது. பிறகு சரியாயிட்டு.அதனால் நன்றாக பாட முடிந்தது"

"சூப்பரா பாடினாய் பூங்கொடி.எல்லோருக்கும் நல்லா பிடிச்சிருந்தது. உனக்கு எசப்பாட்டுப் பாடிய வினோத்..ஆகா என்னத்த சொல்ல. அசத்தலோ அசத்தல்.அதுவும் உன்னைப் பார்த்துப்பாடிய விதமிருக்கே.. அய்யய்யோ ..சொல்லி வேலையில்லை"

"அக்கா என்னக்கா நீங்க" என்று சிணுங்கினாலும் அவளுக்குள் உள்ளூர என்னவோ செய்தது. வினோத்தை பார்த்தது, அவன் பேச்சைக் கேட்டது. அதிலிருந்து விடுபட முன்னரே விழாவில் அவன் பாடியது எல்லாம் பூங்கொடிக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வை கொடுத்தது.

நேரம் ஆகியதால்,புலேந்திரன் குரல் கொடுத்தார். சாப்பாட்டு மேசையில் உணவுகளைக்கொண்டு பூங்கொடியின் அக்கா வைத்தார். பூங்கொடியும் உதவினாள். ஹாலுக்கு வரும்போது வினோத்தை கடைக்கண்ணால் அவள் பார்க்கத் தவறவில்லை. அவனும் அவளைப் பார்த்து சிரித்தான். அது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து படுக்கப் போகும் முன்னர் கொஞ்சநேரம் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.

அப்பொழுது பார்வையாலேயே பேசிக்கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் நேரடியாக பேசவேண்டி வந்தது. வினோத் சொன்னான்.

" நல்ல குரல் உங்களுக்கு. நல்லா வேற பாடுறீங்க. சங்கீதம் முறைப்படி கற்றுக்கொண்டு இருக்கிறீர்களா?"

"இல்லை. சும்மா நான் எனக்குப் பிடித்த பாட்டை பாடுவேன். ரேடியோவில் கேட்டு அதை பாடிப் பார்ப்பேன் அவ்வளவுதான்" என்று தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டாள்.

"கேள்வி ஞானம் என்றாலும் மிக அருமை" என்று அவன் பாராட்டியதை அவள் விரும்பினாள்.

படுக்கைக்குச் சென்றார்கள். பூங்கொடியால் தூங்க முடியவில்லை. நித்திரை வராமல் புரண்டு பிரண்டு படுத்தாள். எப்படியோ ஒரு விதமாக விடிந்துவிட்டது. அவள் கிணற்றடிக்குச் சென்று திரும்பும்போது, எதிர் திசையில் வினோத் வந்தான்.

"மோனிங் பூங்கொடி" என்றான்.

"மோனிங்" என்று பதில் சொன்னவளைப் பார்த்து "என்ன தூக்கமில்லைப் போல் தெரிகிறது" என்றான்.

அவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,இல்லையே நான் நன்றாகத்தான் தூங்கினேன்.அது சரி உங்களுக்கு எப்படித் தெரியும் நீங்களும் தூங்கவில்லையோ" கேட்டாள்.

அவன் சிரித்து கொண்டே பதில் சொன்னான். "ஆம் என்னாலும் தூங்க முடியவில்லை. நான் பொய் சொல்லமாட்டேன். ஏன்தெரியுமா?

புது இடம், அதோட நுளம்பு தொல்லையும் இருந்தது" என்றவன் பூங்கொடி முகத்தைப் பார்த்தான்.

அது பொலிவிழந்து போய்க்கொண்டிருந்தது."இல்லையில்லை, அது இல்லை காரணம்"

"பின்ன வேற என்னவாம்?"

"எல்லாம் உன்னால்தான். நீர்தான் என்னை தூங்கவிடாமல் படுத்திவிட்டாய்" என்றதும் பூங்கொடிக்கு ஆயிரம் வோல்ட்ஸ் மின்சார வெளிச்சம் முகத்தில். அவள் முகம் சிவக்க சிவக்க ஓடிவிட்டாள். அவள் இதயத்தில் ஒரு இன்பக் கிளுகிளுப்பு எழுந்தது.

மனத்துக்குள் ஒரு வேதனையும் எட்டிப்பார்த்தது. அவன் போகப்போகின்றானே என்ற கவலையது. புறப்படத் தயாரானபோது, அவன் கேட்டான்.

"பூங்கொடி நீங்க பாடுவதைவிட நன்றாக எழுதுவீங்களாமே.இலக்கியம்,கவிதை,பாடல்,கட்டுரை கதைகள் எது வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். என்று தனது முகவரி காட்டைக் கொடுத்தான். அனைவருக்கும் நன்றி சொல்லி முருகேசனுடன் அவன் கொழும்புக்குப் புறப்பட்டான்.

அதன்பின் நாட்கள் நகர்ந்தன. பூங்கொடி பல ஆக்கங்களை எழுதி அனுப்பினாள்.

அவற்றை,வானொலி, பத்திரிகைகளில் ஒலிபரப்பவும், வெளிவரச் செய்யவும் உதவினான் வினோத். இருவரும் மாறி மாறி மடல்கள் எழுதிக் கொண்டே இருந்தார்கள். பூங்கொடி வானொலிக்கு பக்கத்தில் இருந்தே அதிக நேரத்தைச்செலவிடத் தொடங்கினாள். இவள் எழுதிய பிரதிகள், இன்றைய நேயர், பூவும்பொட்டும்,மங்கையர்மஞ்சரி, இசையும் கதையும் போன்ற நிகழ்சிகளை அலங்கரித்தன. வீட்டிலும், கிராமத்திலும் நல்ல பாராட்டுகள் கிடைத்தன.

அவள் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் அவை. கடிதங்கள் அடிக்கடி வரும். வினோத் எழுதுவான். பூங்கொடியின் எழுத்து அவனுக்குப் பிடித்திருந்தது. அதில் காதல் என்பதையும் தாண்டி, தமிழும்,இலக்கியமும் இருக்கும். அதனால் அவனும் எழுதுவான். ஊர் தபால்காரர் அவளிடம் சொல்லுவார். "தங்கச்சி உங்களுக்குத்தான் எல்லாக் கடிதமும் வருகுது" என்று. பூங்கொடியின் தந்தை கண்டிப்பானவர்.

அவருக்கு, ஆண்களோடு பேசுவது கடிதத்தொடர்பு வைத்திருப்பது எல்லாம் பிடிக்காத விடயமாக இருந்தது. அந்தக்கால தகப்பன்மார்கள் அப்படிதானே இருப்பார்கள். ஒருமுறை அவர் கண்டித்தார். அதனால் பூங்கொடி தபால்காரரிடம் சொல்லி வைத்தாள், தனக்கு வரும் கடிதங்களை தன்னிடமே தரவேண்டும் என்று. அவரும் பக்கத்து வீடு என்பதால், பூங்கொடியைக் காணும்போது கொடுப்பார். அவளும் அவருக்கு நன்றி சொல்லி பெற்றுக்கொண்டு பதில் எழுதுவாள். பசி,தூக்கம் மறந்த நாட்கள் ஏராளம். ஆசிரியையாக இருந்ததால், தன் வேலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள். காலங்கள் விரைந்தோடின. கலவரங்கள் நடைபெற்றுகொண்டிருந்த நேரங்கள்.

மக்களின் இயல்பு வாழ்க்கை இல்லாமல்போன நாட்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளின் ஒரு சகோதரன் முறையான ஒருவன் வந்து சொன்னான். உங்களைத்தேடி வினோத் என்று ஒருவர் வந்திருக்கிறார்" என்று. அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தாலும் கவலையும் கொண்டாள். இந்த நேரத்தில், அதுவும் மாலையாகிவிட்ட நேரம்.

எப்படி இவர் திடீர் என்று. அவள் யோசித்தாள். அவரை, அவளது உறவுக்காரர் கவனித்துக் கொண்டார்கள். அக்காவின் வீடு என்றால் பரவாயில்லை. இது என் கிராமம் அல்லவா. அவளுக்கு எப்போது விடியும் என்று இருந்தது. விடிந்தது. அவள் அன்று பாடசாலை போகவில்லை. அவள் தந்தை டவுனுக்குப் போனபின் அவனுக்கு அவள் அழைப்பு கொடுத்து வீட்டுக்குக் கூப்பிட்டாள்.

(தொடர் 21ஆம் பக்கம்)

 

 

 

 

 

பூங்கொடி... (15ஆம் பக்க தொடர்)

 

 

 

 

வீட்டில் உள்ளவர்கள் யாரும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை, அவள் அன்பின் நிமித்தம் அவனோடு பேசினாள்.

 

"என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறீங்க, அதுவும் இந்த நேரத்தில்?

என்றாள்.

"நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன் ஓர் அலுவலாக. அந்த வேலை முடிய நேரமாயிற்று. சரி கொழும்புக்கு செல்ல முன்னர்,

வவுனியாவில் மற்றுமொரு வேலை.அதுதான் வந்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தனான் பக்கத்தில் இருக்கும் உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் பூங்கொடி" என்றான் வினோத்.

அவள் அன்பாக அவனோடு பேசிக்கொண்டு இருந்த போது, அவளின் அப்பா வருவது பற்றிய தகவலை, தம்பி வந்து சொல்ல, வினோத்தும் பின்பக்க வேலியால் பாய்ந்து வெளியேறிவிட்டான். அது அவனுக்கு மிக சங்கடமான தருணமாக இருந்தது. தான் வந்திருக்கக் கூடாது என்று அப்போதுதான் நினைத்தான். பூங்கொடிக்கும் அது மறக்கமுடியாத சம்பவமாக போய்விட்டது. அவன் வந்து சென்று பல நாட்கள் ஆகிவிட்டன.

அவளின் இதயமும் வேதனைக் கடலில் மூழ்கியது. தொடர்புகள் இல்லாமல் போனது.

ஒருநாள் ஒரு கடிதம் அவளுக்கு வந்தது. அதில், மன்னித்து விடு பூங்கொடி. உன்னுடைய மனத்தை நான் குழப்பிவிட்டேன். உன்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடு. வினோத் ஒரு சில காரணங்களையும் சொல்லியிருந்தான். அவற்றை அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா என்று தெரியவில்லை.

பூங்கொடி தன்னிலை மறந்தாள். கண்ணீர்த்துளிகள் அவள் தலையணையை நனைத்தன. தன்னையே கவனிக்க மறந்தாள். நடைப்பிணமாக நடந்தாள். காலம் உருண்டன. அவள் அறிந்தாள். அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறதாம் என்று. அப்போது அவள் கவலைப்படவில்லை. என் வசந்தகால கனவுகள் அத்தனையும் புயலால் அடித்துச் செல்லப்பட்டதே...போகட்டும் என்று இருந்தாள். அவள் அண்ணியோ, விடு பூங்கொடி, எல்லாம் உனக்கு நல்லதுக்குதான். என்று சொல்லி, பூங்கொடி சேர்த்து வைத்திருந்த கடிதங்கள், படங்கள் எல்லாவற்றையும் தீயில் போட்டு கொளுத்தி விட்டாள். பூங்கொடியின் மனசும் பற்றி எரிந்துகொண்டதை அந்த பகவான் மட்டுமே அறிவார்.

நாட்கள் நகர்ந்தன. பூங்கொடியின் அன்பைப் பெற பலர் யாசித்தார்கள். ஆனால்

யாராலும் அவளை நெருங்க முடியவில்லை. கலவரங்கள் தொடர, அவள் சொந்தங்களும் புலம்பெயர்ந்து சென்றார்கள். இடையில் தந்தை, தாயைப் பிரிந்ததும் அவளை வாட்டியது. அவள் சகோதரன் அவளை பாரிசுக்கு அழைக்க விரும்பினான். அவளும் தன் வேலையையும் விட்டுப் பாரிசுக்கு வந்துவிட்டாள். மாற்றம் ஒன்று அவளுக்கு தேவைப்பட்டது. அது கிடைத்தது. இங்கு வந்த பின் பூங்கொடிக்குத் திருமணம் ஒன்று பேசி முடிக்கப்பட்டது. பின்னர் குழந்தை

பிறந்தது. நல்ல வாழ்க்கை அவளுக்கு கிடைத்தது. இருந்தாலும் வினோத் அடிக்கடி அவள் நினைவுகளில் வந்து போவான். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பூங்கொடி ஊர் நினைவுகளை மறக்கவில்லை. முகநூல் வழியாக வினோத் டென்மார்க்கில்

இருப்பதாக அறிந்து கொண்டிருந்தாள். ஆனால் அவனுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ முயற்சிக்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் அவள் போனில் கேட்ட குரல், அது வினோத் குரல்தான். அவன்தான் சொன்னானே .. பூங்கொடி இது உங்கள்

நம்பர்தான் என்று. ஏன் நான் பேசவில்லை.. எனக்கு என்ன ஆயிற்று. பேசியிருக்கலாம்தானே. வினோத் என்ன நினைத்திருப்பார். சே.. இப்ப போன் மணி அடித்தால் அது அவராக இருக்குமோ என்று ஏன் என் மனம் பதறுகின்றது. அவள் அப்படி நினைக்கும் போது மீண்டும் அவள் போன் ஒலிக்கிறது. அவள் அதே பதட்டத்துடன் ஓடிப்போய் எடுக்கிறாள். மறுமுனையில் வேறு ஒருவர். பூங்கொடியின் மனசு துவண்டு போகிறது. இந்தப் புலம் பெயர் நாட்டில் பேசுவதற்குக் கூட மனிதர்களுக்கு நேரம் கிடைப்பதில்லைபோலும். அன்று

வினோத் நான் மறுபடி பேசுகின்றேன் என்று சொல்லித்தானே போனை வைத்தார். சே. நான் எப்படி இருக்கிறீங்க என்றாவது கேட்டிருக்கலாமே என்று தன்னை நொந்துகொண்டாள் பூங்கொடி. அடுத்த சில தினங்களில் வினோத் அவளுடன் பேசினான். அவளும் பேசினாள். அவளிடம் பதட்டம் இல்லை. மனது பக்குவப் பட்டு இருந்தது. எல்லோரும் நன்றாக இருப்பதில் அவளுக்கு மகிழ்ச்சி. அவனிடம் கோபப்பட காரணம் இல்லை. அத்தனை அனுபவங்களைப் பெற்றுவிட்ட ஒரு பெண். ஒரு தாய் அவள். தன்னைத்தாரமாக்கி தாய் என்ற மகத்துவத்தை அவளுக்கு அளித்து எந்தக் குறையுமின்றி பார்த்துவரும் ஓர் அன்பான கணவன். அவள் கொடுத்து வைத்தவள் என்று பேசிக்கொள்கிறார்கள். பூங்கொடிக்கு மட்டும் எதையோ தொலைத்துவிட்டு வாழ்வதுபோன்ற நினைப்பு. முதல் பரிசு பெற்ற சிறுகதை நூல் தொகுப்பின் அட்டைப் படத்திற்கு உணர்வோடு வரையப்பட்ட ஓவியம் போல். 

Comments