களுத்துறை, நுவரெலியா மாவட்ட க.பொ.த (சா. த.) மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

களுத்துறை, நுவரெலியா மாவட்ட க.பொ.த (சா. த.) மாணவர்களுக்கான இலவச வகுப்புகள்

விசு கருணாநிதி

கல்விக்காகக் கண் திறப்பதாகக் கூறிப் புறப்பட்டுள்ள அமைப்புகளும் தனி நபர்களும் பின்தங்கிய பாடசாலைகளைக் கண்டறிந்து அவற்றின் பௌதிக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தித்து வருவதுடன் உபகரணங்களையும் பெற்றுக் ெகாடுத்து வருகின்றனர். இதன் மூலம் மாத்திரம் மாணவர்கள் கற்றுத் தேர்ந்து விட முடியுமா? என்ற கேள்விக்குச் சரியான பதில் இன்னும் அளிக்கப்படாமல்தான் இருக்கிறது.

புலமைப்பரிசில் வழங்குவதாகக் கூறிக்ெகாண்டு பல இலட்சம் ரூபாய் நிதியைப் பிரசாரம் செய்வதற்காக விரயமாக்கி வரும் அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. பாடசாலைக் கட்டடங்கள் இருந்தும் கற்பிப்ப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்றால், எவ்வாறு பிள்ளைகள் படித்து முன்னேற முடியும்.

எனவே, இந்தப் பிரச்சினையின் யதார்த்த நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு உதவித்திட்டங்களைத் தனது சொந்த நிதியில் முன்னெடுத்து வருகிறார் தொழில் அதிபர் வி.முத்துசாமி. பயண முகவர் சேவையை நடத்தி வரும் அவர், கேம்பிரிட்டஜ் தனியார் ஆங்கிலப் பாடசாலையொன்றையும் நடத்தி வருகிறார். இலங்கைப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்குக் கற்க வேண்டும்; விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் என்பது முத்துசாமியின் எதிர்பார்ப்பு.

தமிழ் மாணவர்களைச் சர்வதேச ரீதியாகக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு ஒலிம்பிக் போன்ற ஒரு களத்தை சர்வதேச ரீதியாக ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு என்கிறார்.

"தமிழ் மாணவர்கள் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்க வேண்டும். கணிதம் என்பது மிகவும் இலகுவான பாடம். அதனைப் படிப்பதில் ஆசிரியர்கள் விடும் தவறின் காரணமாகத்தான் மாணவர்கள் பயப்படுகிறார்கள். அந்தப் பயத்தைப்போக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் பிள்ளைகளுக்கு என்னால் வேலை வழங்க முடியும். இன்று ஆங்கிலத்திலும் மாணவர்கள் தேர்ச்சியடைவது குறைவாக உள்ளது. விளையாட்டுத் துறையிலும் மாணவர்களைப் பயிற்றுவித்து தேசிய மட்டத்திற்குக் கொண்டு வரவேண்டும்" என்று கூறும் தொழில் அதிபர் முத்துசாமி, ஊடகவியலாளர்கள் சிலரையும் இணைத்துக்ெகாண்டு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

அவரது முதற்கட்டப் பணியாக களுத்துறை மாவட்டத்திலிருந்து இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை ஆரம்பித்திருக்கிறார். பிரதேசத்தின் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கொழும்பிலிருந்து விசேட ஆசிரியர்களை ஈடுபடுத்தி இந்த வகுப்புகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளன.

பிரத்தியேக வகுப்புகளை நடத்த வரும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, போக்குவரத்துச் செலவுகள் அனைத்தையும் திரு. முத்துசாமி வழங்குகிறார்.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, ஹொரணை, புளத்சிங்கள, களுத்துறை முதலான கல்வி வலயங்களில் இம்மாத முற்பகுதியில் வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.அதன் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தின் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் கணித விஞ்ஞான ஆங்கில பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் முகமாக விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 15.07.2017 முதல் நுவரெலியா மாவட்டத்தில் அதாவது ஹட்டன், கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத, நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 29 நிலையங்களில் சனி, ஞாயிறு தினங்களில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியினையும் வழங்க திரு.முத்துசாமி நடவடிக்ைக எடுத்து வருகிறார்.

இந்த வகுப்புகள் குறித்து வளவாளர்களுடனான முதலாவது கலந்துரையாடல் எதிர்வரும் 09.07.2017 தலவாக்கலையில் நடைபெறவுள்ளது. இலவச வகுப்புகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்த மேலதிக வகுப்புகள் மூலமாக 6000 க.பொ.த மாணவர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வருடம் முதல் ஆண்டு 8, 9, 10 மாணவர்களுக்கும் இலவச வகுப்புகளை நடத்த நடவடிக்ைக எடுப்பதாகக் கூறுகிறார் முத்துசாமி. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வகுப்புகள் மூலமாகச் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்குப் பெறுமதியான பரிசுகளை வழங்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார். மத்துகமை பாடசாலையொன்றில் நடந்த செயலமர்வில் சிறந்த முறையில் துணிந்து முன்வந்து கருத்துகளை கூறிய மாணவி ஒருவருக்கு மடிகணனியை வழங்கிய அவர், நடனப்போட்டியில் பங்குபற்றிய மாணவிகளின் சார்ப்பில் உடனடியாக 25 ஆயிரம் ரூபாயினையும் பெற்றுக்ெகாடுத்தார். அந்தப்போட்டியில் வெற்றி பெற்றால், போட்டியை நெறிப்படுத்திய ஆசிரியைக்கு மேலும் ஐம்பதினாயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கு அமைவாக, அந்த மாணவர்கள் போட்டியில் முதலாவது இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

Comments