தமிழ்த் தேசியவாத அரசியலின் பின்னடைவு | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்த் தேசியவாத அரசியலின் பின்னடைவு

வடமாகாண சபையில் உருவெடுத்த புயல் இன்னும் தணிந்து விடவில்லை. புதிய அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட்டதையடுத்து சர்ச்சையும் முரண்பாடுகளும் ஓய்ந்து போய் விட்டதாக வெளித் தோற்றத்துக்குத் தென்பட்டாலும் உண்மை நிலைமை அங்கு அதுவல்ல...

உள்ளே இன்னமும் யுத்தம் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக கண்டனக் கணைகளைத் தொடுத்தபடியே இருக்கின்றனர். ஆளுக்குஆள் வசைபாடுவதும், சவால் விடுவதும் ஓய்ந்தபாடாக இல்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பில் ஆட்பலம் சற்று அதிகமாக உள்ளதனால் அங்கிருந்து வருகின்ற அறிக்கைகளும் சற்று அதிகமாகவே உள்ளன. ‘சுமந்திரன் எம்.பியினால் முடியுமானால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுக் காட்டட்டும்’ என்று விக்னேஸ்வரனின் ஆதரவுத் தரப்பிலிருந்து சவால் வெளியிடப்படுகின்றது.

இதே பாணியிலேயே சுமந்திரனும் சில தினங்களுக்கு முன்னர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சற்று சூடான கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.

மக்களின் ஆதரவு எவருக்கு உள்ளதென்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் என்ற பொருள் தொனிக்க கருத்து வெளியிட்டார் சுமந்திரன். அதாவது விக்னேஸ்வரன் தரப்பினருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்பதுதான் சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்தின் உள்ளார்ந்த அர்த்தம்.

அறிக்கைப் போர் தொடர்ந்து கொண்டே இருப்பதனால் வட மாகாண சபையானது இன்னமும் கொதி நிலையிலேயே உள்ளதென்றே கூற வேண்டியுள்ளது. இரு தரப்பு முரண்பாடுகள் முடிவுக்கு வந்து, மீண்டும் புரிந்துணர்வு தோன்றுவதற்கான அறிகுறிகளை அங்கே காண முடியாதிருக்கின்றது.

மாகாண அமைச்சர்கள் இருவர் பதவி துறக்க வைக்கப்பட்டமையும், புதிய அமைச்சர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டமையும் இரு தரப்பு புரிந்துணர்வு உடன்பாட்டுடன் எட்டப்பட்ட முடிவுகள் அல்லவென்பதனால், வட மாகாண சபைக்குள் எதிர்காலத்தில் முரண்பாடுகள் புகைந்தபடியே இருக்கப் போகின்றன என்பதே உண்மை.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் வரை ஒற்றுமைக் கட்டுக்கோப்புடன் விளங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது தோன்றியுள்ள பூகம்பத்தை இலங்கையிலுள்ள தமிழர்கள் மாத்திரமன்றி, உலகத் தமிழர்களும் வேதனையுடனேயே நோக்குகின்றனர். கருத்தொற்றுமையைக் கட்டிக் காக்க முடியாத சமூகமாக தமிழர் அரசியல் தலைமைத்துவங்கள் ஆகிவிட்டனவே என்று தமிழினம் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.

வடக்கு, கிழக்குத் தமிழினத்தின் மத்தியிலிருந்து தோன்றுகின்ற அஹிம்சைப் போராட்டமாகட்டும், இல்லையேல் ஆயுதப் போராட்டமாகட்டும்... எதுவுமே கூடிய பட்சம் மூன்று தசாப்த காலம் வரையே நீடிக்குமென்ற பொதுவான ஐதீகம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இப்போது உருவாகியுள்ள பிளவு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என்பவற்றை ஆராய்கின்ற போது இந்த உண்மையை இலகுவாகவே புரிந்துகொள்ள முடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதியையும் இதே கண்ணோட்டத்திலேயே நோக்க முடிகின்றது. இவ்வாறான வரலாற்று அனுபவத்தைக் கொண்டு நோக்குமிடத்து, வடக்கு – கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கான மற்றொரு பலமான அரசியல் இயக்கம் புதிதாக எழுச்சி பெறப் போகின்றதா என்ற வினா இயல்பாகவே எமக்குள் எழுகின்றது. புதிய அரசியல் இயக்கமொன்றின் எழுச்சிக்கான சாத்தியத்தை உண்மையில் நிராகரிக்கவும் முடியாதிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது, அதாவது தமிழரசுக் கட்சிக்கு எதிராக வட பகுதி தமிழ் மக்கள் மத்தியில் தற்போது தோன்றியிருக்கின்ற விசனத்தையும் அவநம்பிக்கையையும் இரா. சம்பந்தன் தரப்பினர் குறைவாக மதிப்பிடுதல் புத்திசாலித்தனமானதல்ல.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவின்படி நிரூபிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்கள் ஆதரவு இன்றைய நிலைமையிலும் குன்றாமல் அவ்வாறே உள்ளதென தமிழரசுக் கட்சித் தலைமை நிரூபிக்க முயலுமானால் அந்த எண்ணம் அபத்தமானதென்றே கொள்ள வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு ஆதரவான பல்வேறு தரப்புகளிடமிருந்து வருகின்ற அத்தனை கண்டனக் கணைகளையும் சம்பந்தன் தரப்பிலுள்ள சுமந்திரன் எம்.பி. தனியொரு மனிதனாக எதிர்த்து நின்று சமாளித்து வருகின்றாரென்பது உண்மைதான். எனினும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பலைகள் வெளிப்படையாக உருவாகத் தொடங்குமெனில், சம்பந்தன் தரப்பின் வீரியம் எத்தனை காலத்துக்குத் தாக்குப் பிடிக்குமென்பதே இங்கு உருவாகின்ற சந்தேகம் ஆகும்.

கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு மண்ணில் தீவிரமடையத் தொடங்கிய பல்வேறு மக்கள் போராட்டங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது பொருட்படுத்தத் தவறியதனாலும், வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் பொதுவான அத்தியாவசிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளத் தவறியதனாலும் உருவாகியுள்ள பாதகமான விளைவே இன்றைய நிலைமை ஆகும். கூட்டமைப்புத் தலைமையானது வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின், தீர்வு காணக்கூடிய சாதாரண பிரச்சினைகளைக் கூட அலட்சியம் செய்து வருவதாக பல மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்த வெறுப்புகளையடுத்தே வடக்கு மாகாண சபையில் முறுகல் வெளிப்பட்டது.

தமிழ் தேசிய அரசியலின் தலைமைத்துவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பு எல்லைப்புள்ளியொன்றுக்கு வந்து விட்டதைப் போன்ற அறிகுறிகள் தெளிவாகத் தென்படுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். தமிழினத்தின் மத்தியில் வீரியம் மிக்கதொரு அரசியல் இயக்கம் இல்லாததன் விளைவாக, அரசியல் உரிமைகளுக்காகப் பேரம் பேசுகின்ற திராணியையும் தமிழ் சமூகம் இழந்து விடும் ஆபத்து இருக்கின்றது.

இலங்கை தமிழ் தேசியவாத அரசியலில் ஏற்பட்டுள்ள தோல்வியை ஏனைய சமூகங்கள் தமக்குச் சாதகமாகவே நோக்குகின்றன. தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆயுத பலம் கொண்ட இயக்கமொன்று மேலோங்கியிருந்ததை ஏனைய சமூகங்கள் எவ்வாறு விரும்பவில்லையோ, அவ்வாறே அரசியல் அமைப்பொன்று பலம் பெற்று விளங்குவதும் அச்சமூகங்களுக்கு இணக்கமில்லாத விடயங்கள் ஆகும். அரசியல் உரிமைக்காகப் பேரம் பேசக்கூடிய பலமுள்ள சக்தி தமிழர் தரப்பில் இருக்கலாகாது என்பதே ஏனையோரின் எதிர்பார்ப்பு.

அவ்வாறான எதிர்பார்ப்புக்கு இடமளிக்கும் வகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது சிதிலமடைந்து போய்க் கிடக்கின்றது. தமிழர் அரசியல் தலைமைத்துவம் எதிர்வுகூற முடியாத, முடிவற்ற சிக்கலுக்குள் அகப்பட்டுத் தவிக்கின்றது. தமிழினத்தின் அரசியல் உரிமை பற்றியெல்லாம் பேசுகின்ற சூழலையும் இப்போது காண முடியாதிருக்கின்றது. 

Comments