கண்டி அஸ்கிரிய வார்டில் வெற்றியீட்டிய ராமானுஜம்! | தினகரன் வாரமஞ்சரி

கண்டி அஸ்கிரிய வார்டில் வெற்றியீட்டிய ராமானுஜம்!

சத்யா

தினகரன் 1943ம் ஆண்டு கோப்பைப் புரட்டிப்பார்த்தால், சுமார் ஐம்பது சதவீதமான இடத்தை யுத்தச் செய்திகளும் படங்களுமே ஆக்கிரமித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. 1943 டிசம்பர் மாத இதழில் மத்திய தரைக்கடலில் நிகழும் யுத்தம் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. நேச நாட்டு கப்பல்கள் மத்தியதரைக் கடலில் ஏழு ஜெர்மன் யுத்தக் கப்பல்களை மூழ்கடித்ததாக செய்தியொன்று பிரசுரமாகியுள்ளது.

யுத்தச் செய்தி பற்றிப் பார்க்கும் போது எம்டன் ஞாபகத்துக்கு வருகிறது. இன்றைக்கும் இலங்கையிலும் தமிழகத்திலும் 'எம்டன்' என்ற சொல் பாவனையில் இருக்கிறது. எம்டன் என்றால் கெட்டிக்காரன், அசகாயசூரன், கில்லாடி என்றெல்லாம் பொருள்படும். ஒரு சிக்கலான விஷயத்தை ஒருவர் வெற்றிகரமாக செய்து முடித்தால், "அவன் முடிப்பான் என்று எனக்குத் தெரியும்... அவன் ஒரு எம்டனப்பா!" என்று பாராட்டுவா ர்கள். இது முதலாம் உலக மகா யுத்த த்தின் போது முளைத்த வார்த்தை.

எம்டன் என்பது ஒரு ஜெர்மனிய போர்க் கப்பலின் பெயர். முதலாம் உலகப்போ ரின்போது நடமாடிய கப்பல். எதிர்பாரா தருணங்களில் திடீரெனத் தோன்றி தாக்குதல் நடத்திவிட்டு ஓடி மறைந்து விடுவது இதன் சிறப்பு. எம்டனை அழித்தொழிக்க நேச நாட்டு கடற்படைக் கப்பல்கள் படாதபாடுபட்டன. ஏனெனில் நேசநாட்டு போர்க் கப்பல்களுக்கும் விநியோகக் கப்பல்களுக்கும் எம்டன் விளைவித்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. திருகோணமலை துறைமுகத்தை எம்டன் தாக்கலாம் என்ற அச்சம் அன்றைய ஆங்கிலேய அரசுக்கு இருந்தது. ஏனெனில் எம்டன் இலங்கையைச் சுற்றிச் சென்று சென்னை துறைமுகத்தின் எண்ணெய் குதங்களின் மீது தாக்குதல் நடத்தியது. இறுதியாக எம்டனை ஒரு வழியாக போட்டுத்தள்ளினார்கள், அவுஸ்திரேலிய கடற்படையினர். எனினும் எம்டன் என்ற பெயர் நிலைத்து விட்டது. சிங்கள மொழியிலும் இதே அர்த்தத்ததில் எம்டன் என்ற பதம் வழக்கில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் பரத் நடித்து வெளிவந்த படத்துக்கு 'எம்டன் மகன்' என்று பெயரிடப்பட்டி ருந்தது. புதிய தலைமுறைக்கு எம்டனைப் பற்றித் தெரியாதிருக்கலாம் என்பதால் இந்தத் தகவல்.

1943ம் ஆண்டில் உலகப்போரின் போக்கில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரஷ்யாவில் ஊடுருவிய ஜெர்மனிய படைகளுக்கு எதிராக கம்யூனிச செம்படை கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றன. மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஜெர்மனிய படைகள் அடிவாங்க ஆரம்பிக்கின்றன. பிரிட்டிஷ் தலைமையிலான நேச நாட்டு விமானங்கள் ஜெர்மன் மீது குண்டுமாரி பொழிகின்றன. இந்தச் செய்தியில் பெர்லின் நகர்மீது நேசநாட்டு விமானங்கள் குண்டுமாரி பொழிந்ததாகவும் 2500 தொன் குண்டுகள் பொழியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தச் சென்ற பிரிட்டிஷ் விமானங்களில் 32 விமானங்கள் திரும்பி வரவில்லை என்பதையும் பிரிட்டன் ஒப்புக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. இதேபோல லண்டன் மீதும் ஜெர்மனிய விமானங்கள் மிகப்பெரும் வான்தாக்குதலை நடத்தியது. இந்த லண்டன் வான் தாக்குதல் நகரில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. Battle of Britain Blue max உட்பட பல ஆங்கிலத் திரைப்படங்கள் இந்தத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும்.

இங்கே இரண்டு விளம்பரங்களைப் பார்க்கிறீர்கள். முதலாவது நெய் விளம்பரம். இலங்கையில் இக்காலப்பகுதியில் மாட்டுப் பண்ணைகள் நிறையவே இருந்தன. கொழும்பில் உள்ள அம்பாள் சைவ கடைக்கு சொந்தமான பால் பண்ணைகள் ராஜகிரிய, குருணாகல் ஆகிய இடங்களில் இருந்தன. இங்கே கறக்கப்படும் பாலே ஹோட்டலுக்கு கொண்டுவரப்பட்டது. மிகுதியாகும் பாலை அக்கம்பக்கத்து வீட்டுக்கார்கள் இலவசமாக வாங்கிச் செல்வார்களாம். பால் உற்பத்தியில் ஒரு தன்னிறைவுத்தன்மை அக்காலத்தில் இருந்தபோதிலும் தமிழகத்தில் இருந்தே 'சுத்தமான' நெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு இவ்விளம்பரம் ஒரு உதாரணம். ஏனெனில் நெய், மோர், தயிர் என்பன இலங்கையில் வர்த்தக உற்பத்தியாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. கிராம மட்டத்தில் நெய், தயிர் தயாரிப்போர் தமது தேவை போக அக்கிராம மட்டத்தில் அவற்றை விற்றுத் தீர்த்தார்கள். சமீபகாலம் வரை நெய் தயாரிப்பு 'பாட்டிமார் இன்டஸ்ட்ரி'யாகத்தான் இருந்தது! இந்நெய் விளம்பரம் இன்னொன்றையும் சொல்கிறது. பந்தியில் அமர்ந்திருப்பவர்களில் எவருமே சாமானியன் அல்ல. உயர்சாதி இந்துக்கள் மட்டுமே வரையப்பட்டுள்ளார்கள். அக்கால இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இப் பண்பைப் பார்க்க முடியும். இதையெல்லாம் சீர்திருத்துவதற்கு ஒரு பெரியார் வரவேண்டியிருந்தது!

அடுத்த விளம்பரம், எம்.எஸ். சுப்புலட்சுமி யின் இசைக்கச்சேரி பற்றியது. 1943 நவம்பர் பத்தாம் திகதி வெளியான இவ்விளம்ப ரம், கொழும்பு நகரசபையில் சேர். ரட்ணஜோதி சரவணமுத்து தலைமையில் கச்சேரி நடைபெறும் என்றும் டிக்கட்டுகளின் விலை 10 ரூபா, 5 ரூபா என்றும் சொல்கிறது. முன்பதிவென்றால் 15 ரூபா. இன்றைக்கு வெளிநாட்டுப் பிரபலங்களின் இசை நிகழ்ச்சி என்றால் டிக்கட்டுகளின் விலை சாமானிய ரால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருப்பதைப் போலத்தான் அன்றைக்கும்! ஒரு கிளார்க்கின் மாதச் சம்பளமே அக்காலத்தில் 15 ரூபாவாகத்தான் இருந்தது!

Comments